217. விடுவேன் தோழி!

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : தலை மகன் வாயில் மறுத்தது.
[(து.வி.) பரத்தமை உறவிலே பிரிந்திருந்த தலைவன் மீண்டும் தன் வீட்டிற்கு வருகின்றான். தலைவியின் ஊடற்சினத்தைக் கண்டு, அவள் சினத்தைத் தணிவிக்குமாறு தோழியை விடுக்கின்றான். தோழியும் தலைவிபாற் சென்று, தலைவனை மீளவும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றாள். அவளுக்குத் தலைவி சொல்வதுபோல அமைந்த உருக்கமான செய்யுள் இது.]


இசைபட வாழ்பவர் செல்வம் போலக்
காண்டொறும் பொலியும் கதழ்வாய் வேழம்
இருங்கேழ் வயப்புலி வெரீஇ, அயலது
கருங்கால் வேங்கை ஊறுபட மறலிப்
பெருஞ்சினம் தணியும் குன்ற நாடன் 5
நனிபெரிது இனியன் ஆயினும், துனிபடர்ந்து
ஊடல் உறுவேன், தோழி! நீடு
புலம்புசேண் அகல நீக்கிப்
புலவி உணர்த்தல் வண்மை யானே!

தெளிவுரை : தோழீ! புகழ் மிகுதிப் படும்படியாக வாழ்கின்றவருடைய செல்வமானது நாளுக்குநாள் சிறந்து விளங்கும். அதுபோலக் காணுந்தோறும் சிறந்து விளங்குகின்றதாயிருந்தது விரைந்த செலவினையுடைய வேழம் ஒன்று. அதுதான் கரு நிறத்தை உடையதும் வலிமை கொண்டதுமான புலினையக் கண்டு அஞ்சி, அவ்விடத்தைவிட்டு நீங்கிச் சென்றது. அது காலை அயலிடத்தே உள்ளதாகிய கரிய அடிமரத்தையுடைய வேங்கை மரமானது எதிரிட, அதுதான் சிதைவுபடுமாறு முறித்துத்தள்ளித் தன் பெருஞ்சினத்தைத் தணித்துக் கொண்டது. இத்தகைய குன்றுகளுக்குரிய நாடன் நம் தலைவன். அவன் நமக்கு மிகப் பெரிதும் இனியவனே! ஆயினும், அவனோடு ஊடுதற்கு உரியவற்றையே மேற்கொண்டு அவன்பால் ஊடலைச் செய்வேன். நீளவும் நின்று நம்மை வருத்தும் தனிமைத் துயரமானது, சேய்மைக் கண்ணே அகன்று போமாறு செய்து, என் ஊடலைத் தெளிவிக்கக் கருதிச் சொல்லாலும் செயலாலும் என்பால் அன்புகாட்டும் வண்மையைச் செய்யும் அன்புடையவன் அவன் என்பதனைக் காண்பாயாக!

சொற்பொருள் : பொலியும்–சிறந்து விளங்கும். 'கதழ்வாய் வேழம்' கதழ்வரல் வேழம் என்பதும் பாடம். கதழ்வு–விரைவு. கேழ்– நிறம். வயம்–வலிமை. மறலி–மோதிச் சிதைத்து. துனி–வருத்தம். புலவி–வருத்தம். புலவி–ஊடல்.

விளக்கம் : கொடையால் புகழ்பெற்றோனின் செல்வமானது பலருக்கும் பயன்பட்டு வறுமை தீர்த்தலால் சிறந்து தோன்றுவதாயிற்று; அவ்வாறே விரைந்த செலவினதான அந்த வேழமும் அயலாக நின்ற வேங்கை மரத்தைப் புலியென மயங்கி, மோதிச் சிதைத்து ஊறுபடுத்தும்; அதனால் தன் சினம் தணியும் என்றது, பகையை ஒழித்தற்கு உரித்தான இடத்திலே ஒதுங்கிப்போய், பகையாகா ஒன்றைப் பகையென மயங்கி அதற்கு ஊறுசெய்யும் அறியாமையைத் தன் சினத்தால் மேற்கொண்டது என்றதாம். வேழத்தின் இச்செயல் நகையாடற்கே உரியது. இத்தகைய நாடன் எனவே, அவனும் அத்தகைய மயக்கத்தை உடையனாயினான் என்பதாம். இது, தனக்குரிய காதன் மனைவிக்குத் தலையளி செய்து இன்புறுத்தலை செய்யாது ஒதுங்கிப் பரத்தையின் அழகினாலே மயங்கினான்; அவளோடு இன்புற்று வாழ்தலை நாடி மனைவியை வருத்தமுறச் செய்த கொடுமையைக் குறித்துக் கூறியதாகலாம்.

பிரிவுத் துயராலே வருந்திய தலைவி, தலைவன் மீண்ட காலத்திலும், ஊடிச்சினந்து, அந்த வருத்தத்தை அவனும் சிறிது பொழுதேனும் அநுபவிப்பதைக் கண்டு ஆறுதல் கொள்ள நினைப்பாள் என்பதும், அதனாலே அவன் அவள் பால் இரந்தும் உறுதி கூறியும் சொல்லும் பணிவான சொற்களைக் கேட்டு மனம் மகிழ்வாள் என்பதும், அதன் பின்னர் அவன் அளிக்கும் கூடலிலேயும் திளைப்பாள் என்பதும் தலைவியரின் மனநிலையைக் குறித்துக் கூறப்படுவதாம்.

உள்ளுறை : களிற்றியானை புலிக்கு அஞ்சி ஒதுங்கி, வேங்கையைச் சிதைத்துத் தன் சினந்தணிவது போலத், தலைவனும், தலைவியின் சினத்தைக் கண்டு அஞ்சித் தலைவியின் தோழி மூலம் அவளை இசைவித்துத் தன் தாபத்தைப் போக்குதற்கு முயன்றான் என்பதாம். இந்த அச்சம் அவன் கொண்ட பரத்தைமை உறவென்னும் குற்றத்தால் அவன்பால் ஏற்பட்டது என்க.

'வெரீஇ' என்பதற்கு வெருவி ஓடச் செய்து எனப் பொருள் கொண்டு, புலி வெருவி ஓடியதனாலே சினந்தணியாதாய், அயலது வேங்கை மரத்தைச் சிதைத்தது எனவும் பொருள் கொள்வர். இதுவும் பொருத்தமாகலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/217&oldid=1698379" இலிருந்து மீள்விக்கப்பட்டது