நற்றிணை-2/221
221. செல்க நின் தேர்!
- பாடியவர் : இளவேட்டனார்.
- திணை : முல்லை.
- துறை : வினைமுற்றி மறுத்தரா நின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது.
[(து-வி.) வினைமுடித்து மீள்வானாகிய தலைமகனின் உள்ளத்திலே அதுவரை ஒடுங்கி நின்ற இன்பவேட்கை மேலோங்குகின்றது. விரையச் சென்று தலைவியைக் காணற்கு விரும்புகிறவன், 'தேரை விரையச் செலுத்துமாறு பாகனிடம் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது.]
மணிகண் டன்ன மாநிறக் கருவிளை
ஒண்பூந் தோன்றியொடு தண்புதல் அணியப்
பொன்தொடர்ந் தன்ன தகைய நன்மலர்க்
கொன்றை ஒள்ளிணர் கோடுதொறும் தூங்க
வம்புவிரித் தன்ன செம்புலப் புறவின்
5
நீரணிப் பெருவழி நீளிடைப் போழச்
செல்க—பாக—நின் செய்வினை நெடுந்தேர்
விருந்து விருப்புறூஉம் பெருந்தோட் குறுமகள்
மின்னொளிர் அவிரிழை நன்னகர் விளங்க
நடைநாட் செய்த நவிலாச் சீறடிப்
80
பூங்கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி
'வந்தீக, எந்தை!' என்னும்
அந்தீம் கிளவி கேட்க நாமே!
தெளிவுரை : பாகனே! வருகின்ற விருந்தினை எதிரேற்று உபசரிக்க விருப்பங் கொண்டவள், பெருத்த தோள்களைக் கொண்டாளாகிய இளமை கொண்டவள், மின்னலைப்போல ஒளிசிதறும் விளங்கிய அணிகளைப் பூண்டவள், என் தலைவி, அவள்தான். எம் நல்ல மாளிகையானது விளக்கங்கொள்ளுமாறு, நாட்காலையிலே, நடத்தலைப் பயின்றறியாத சிறிய அடிகளையும், பூப்போன்ற கண்களையும் உடையோனாகிய எம்புதல்வன் தூங்கும் இடத்தருகே சென்று, அவனருகே குனிந்து, 'எந்தாய் வருவாயாக' என்று அழைத்தபடியே அவனைத் துயிலெழச் செய்வாள். அந்த இனிதான பேச்சை நாமும் கேட்டு மகிழவேண்டும். ஆதலினாலே,
நீலமணியைக் கண்டாற்போல்க் கருநிறத்தோடு தோன்றும் கருங்காக்கணங் கொடியின் பூக்கள், ஒள்ளிய பூக்களைக் கொண்ட தோன்றியோடும் கலந்து தண்ணிய புதல்தோறும் அழகு செய்தபடி இருக்கின்றன. பொற்காசினைத் தொடராகக் கோத்துவைத்தாற்போல விளங்கும் நல்ல மலர்களைக் கொண்ட சரக்கொன்றையின் ஒள்ளிய பூங்கொத்துக்கள், அதன் கிளைதோறும் தொங்கியபடி இருக்கின்றன. இவற்றாலே புதியதொரு மணத்தினைப் பரப்பினாற் போலப் பொலிவோடு விளங்குகின்றது, சிவந்த தரையையுடையதான இம்முல்லை நிலம். நீராலே அழகு பெற்றிருக்கும் இதன் பெருவழியின் நெடிதான இடமெங்கணும் கவடுபிளக்குமாறு, நின் செய்வினைத் திறனைக்கொண்ட நெடிய தேரானது விரையச் செல்லுவதாகுக!
சொற்பொருள் : மாநிறம்–கருநிறம். கருவிளை–கருங்காக்கணம். ஒண்பூ–ஒளிசுடரும் புதுப்பூக்கள். புதல்–புதர்; சிறுதூறு. 'பொன்' என்றது பொற்காசுகளை. தூங்க–தொங்க. வம்பு–புதுமணம். நீரணிப் பெருவழி–நீரால் அழகு பெற்றுள்ள பெரிய வழி; நீரால் அழகுபெற்றது கார்ப் பெயலால். செய்வினை நெடுந்தேர்–செயல்படும் வினையை முடித்து வரும் வரைக்கும் ஊறின்றிச் செலுத்துவதற்கு ஏற்புடையதாகப் பண்ணப்பட்ட நெடியதேர். குறுமகள்–இளையோள். 'நடை நாள் செய்த' என்பதற்கு, நடத்தலை அன்றுதானே தொடங்கிய எனினும் ஆம். நவிலா–தரையிற் பொருந்தாத; நடை பயன்றறியாத தன்மை. ஒல்கல்–இடைநுடங்க அசைந்து நிற்றல்.
விளக்கம் : புதல்வன் இதுகாறும் நடைபயிலத் தொடங்கியிருப்பான் என்று எண்ணமிடும் தலைவன், அந்த இனிய காட்சியின் நினைவிலே திளைக்கின்றான். அவன் அயர்ந்து உறங்கியிருப்ப, அவனருகே சென்று குனிந்தபடி. பாசத்தின் பெருக்கோடு அவனை எழுப்பவாளாய், 'எந்தாய் வந்தீக' என அழைக்கின்ற தலைவியின் தாய்மைச் செயல் அவன் மனத்திரையிலே எழுந்து நிறைகின்றது. அதனைப் பாகனிடம் உரைத்துத் தேரை விரையச் செலுத்துமாறு கூறுகின்றான் தலைவன்.
அதுகாறும் கோடையாலே வெதும்பிக் கிடந்த செம்புலப்புறவு, கார்காலத்து வருகையாலே பொலிவு பெற்றும், புதர்கள் தோறும் தோன்றிப் பூக்களும் கருவிளையின் பூக்களும் அழகு செய்யவும், கோடுதோறும் கொன்றைச் சரங்கள் தூங்கவுமாக விளங்கிய செவ்வியைக் கூறினான். அவ்வாறே, பிரிவுத் துயராலே அதுகாறும் வாட்டமுற்றிருந்தாளான தலைவியும், இனிப்புதுப் பொலிவு பெறுவாள் என்னும் உட்கருத்தும் தோன்றுதல் கண்டு இன்புறுக. மெய்ப்பாடு, உவகை; பயன்–பாகன் தேரினை விரைவாகச் செலுத்துதல்.