நற்றிணை-2/223
223. எல்லி வம்மோ புலம்ப!
- பாடியவர் : உலோச்சனார்.
- திணை : நெய்தல்.
- துறை : பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று அதுவும் மறுத்து வரைவு கடாயது.
[(து-வி.) பகற்குறி வந்து மீளும் தலைவனிடம், "எங்கள் ஐயன்மார் அறியின் இவளை இல்லத்தே காவற்படுத்துவர்; இனி எம் இல்லின் அணிமைக்கு இரவுப்போதில் வருக" எனக் கூறுவாள்போல, அதுவும் வாயாமை உணர்த்துதன் மூலம், வரைந்து வருக என்று வலியுறுத்துகின்றாள் தோழி.]
இவள்தன்,
காமம் பெருமையிற் காலையென் னாள்நின்
அன்புபெரி துடைமையின் அளித்தல் வேண்டிப்
பகலும் வருதி பல்பூங் கானல்
இந்நீ ராகலோ இனிதால்! எனின், இவள்
அலரின் அருங்கடிப் படுகுவள்; அதனால்,
5
எல்லி வம்மோ மெல்லம் புலம்ப—
சுறவினங் கலித்த நிறையிரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர்
பெண்டிரும் உடைத்திவ் அம்பல் ஊரே!
தெளிவுரை : மென்புலமாகிய நெய்தல் நிலத்தின் தலைவனே! இவள் நின்பாற் கொண்டுள்ள காமத்து மிகுதியினாலே, இதுதான் காலைப்பொழுதாயிற்றே எனவும் கருதாளாயினாள்! நீயுந்தான் இவள்பாற் கொண்டுள்ள நின் அன்பு பெரிதாக உடைமையினாலே, இவளுக்குத் தலையளி செய்தலை விரும்பினையாய்ப் பகற்பொழுதின் கண்ணும் வருகின்றனை! பலவாகிய பூக்களைக் கொண்டதான இக்கானற் சோலையிலே நீவிர் இருவீரும் இத்தன்மையராகினராய்க் கூடியிருத்தல் எமக்கும் இனிதாகுவதே! எனினும், அயலவர் உரைக்கின்ற பழிச்சொற்களே காரணமாக, இவளும் வெளிவருதற்கரிதான காவலுக்கு இனி உட்படுபவள் ஆவாள்காண்! அதனாலே, நீதான் இனிமேல் இரவுப் போதிலேயே வருவாயாக. ஆயின், சுறாமீன்களின் கூட்டமானது மிகுதியாயுள்ள நிறைந்த கடற்பரப்பினிடத்தும், அதனைச் சார்ந்துள்ள துறையினிடத்தும், உறங்காத கண்ணினராய்க் கூடியிருக்கும் கொடிய பெண்களையும், அம்பல் உரைத்தலே இயல்பாகவுடைய இவ்வூரும் உடைத்தாயிருப்பது, அதனையும் கருதுவாயாக!
சொற்பொருள் : பெருமையின்–பெரிதாக உடைமையாலே. காலை – காலைப்பொழுது. அன்பு – காதலன்பு. அளித்தல்–அருளுதல்; தலையளி செய்தல், 'கானல்' என்றது, கானற் சோலையினை. நீர்–தன்மை. அலர்–பழிச்சொல். கடி–காவல். எல்லி–இரவு. கலித்த–பெருகியுள்ள. அம்பல் ஊர்–பழிகூறும் இயல்பினராகிய ஊரவர்.
விளக்கம் : 'வருதி' என்றது வந்து திரும்புகின்றவனை நோக்கிச் சொல்லியது. இரவுக்குறி நேர்வாள்போல, 'எல்லி வம்மோ' என்றனள். அதுதான் இயலாமை கூறுவாள். கடற்பரப்பு சுறவினம் கலித்தது; ஆகலின் நினக்கு ஏதமாகுமென யாம் கவலையடைவோம் எனவும், துறையினும் துஞ்சாக் கண்ணரான பெண்டிரை இவ்வூர் உடையது ஆதலின், அலர் மேலும் பெரிதாவதற்கு அஞ்சுவோம் எனவும் குறிப்பாக உணர்த்துகின்றாள். இனிச் செயத்தக்கது இவளை நீதான் வரைந்துவந்து மணந்து கொள்ளுதலே என்பதனை இவ்வாறு உணர்த்தினள். இருவருமே ஒத்த காதலன்பை உடையவர் என்பதனைக் கூறினாள், பிரிவு நீட்டிப்பின் தலைவி ஆற்றியிராளாய் அலமருவாள் என்பதனையும் புலப்படுத்தினாள். மெய்ப்பாடு, பெருமிதம்; பயன் வரைவுகடாதல்.இறைச்சி : சுறாமீன் இருக்கின்ற கடலினது துறையிடத்தே துஞ்சாத கண்ணை உடையவரான மாதரை இவ்வூர் உடையது என்றது, மனையிடத்தே தலைவியிருக்கின்ற துஞ்சாக் கண்ணினளாகக் காவலிருக்கும் அன்னையையும், புறத்தே வலியுடையராய்க் காத்திருக்கும் ஐயன்மாரையும் கொண்டிருக்கின்றோம் என்று உணர்த்தியதாம்.