236. நோயும் கைம்மிகப் பெரிதே!

பாடியவர் : நம்பி குட்டுவனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தலைமகன் சிறைப்புறத்தானாக, வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

[(து-வி.) தலைமகன், தான் சொன்னாற் போன்று தன்னை வந்து வரைந்துகோடலைச் செய்யாமையினால், தலைவியின் துயரம் மிகுதியாகின்றது. அதனைப் போக்கக் கருதிய தோழி, 'அவன் தவறாது வருவான்' என வற்புறுத்திக் கூறுகின்றாள். அப்போது, தலைவன் வந்து ஒருசார் ஒதுங்கி நிற்றலை அறிந்த தலைவி, தோழிக்குச் சொல்வாள் போலத் தலைவனும் கேட்டுணருமாறு தன் துயரமிகுதியை உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.]


நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யுந்
தீயுமிழ் தெறலின் வெய்தா கின்றே;
ஒய்யெனச் சிறிதாங்கு உயரிய பையென
முன்றிற் கொளினே நந்துவள் பெரிதென
நிறைய நெஞ்சத் தன்னைக்கு உய்த்து, ஆண்டு 5
உரையினி வாழி தோழி!—புரையில்
நுண்ணேர் எல்வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடுவரை ஆடித் தண்ணென
வியலறை மூழ்கிய வளியென்
பசலை யாகந் தீண்டிய சிறிதே! 10

தெளிவுரை : "தோழீ! நீ, வாழ்வாயாக! என்பால் உண்டாகியதான இக்காமநோயும் அளவு கடப்பப் பெரிதாகின்றது. என் உடம்பும் தீயை உமிழ்கின்றாற் போலக் காமநோய் தாக்குதலினாலே வெப்பத்தை உடையதாய் இராநின்றது. ஆதலினாலே,

குற்றமில்லாத ஒண்ணிய நேர்மை கொண்ட என் ஒளிவளைகளை நெகிழச் செய்தோன் அவன்; அவன் குன்றத்தைச் சார்ந்த, பெருமை பொருந்திய நெடிய மலைப்பக்கங்களிலே ஊடாடியதாகத் தண்ணென்று, அகன்ற நம் குன்றத்துப் பாறையிடத்தேயும் வந்து நிரம்பியுள்ள காற்றானது, என் பசலைபடர்ந்த மார்பிடத்தே சிறிது தீண்டுதலையேனும் யான் விரும்புகின்றேன். அது குறித்து,

நீதான் விரையச் சென்று, நரகம்போலக் கொடுமை நிரம்பிய நெஞ்சத்தையுடைய நம் அன்னைக்கு, 'உயர்ந்த நம்முடைய முன்றிலிலே இவளைச் சிறிதுபோது கொண்டு சென்றால், இவள் தன் நோய் பெரிதும் நீங்கப் பெறுவாள்' என்று உரைத்து, அவள் இசைவைப் பெற்று வருவாயாக" என்பதாம்.

சொற்பொருள் : நோய் – காமநோய். கைம்மிக – அளவு கடப்ப; பிறர் அறியாவாறு மறைக்கின்ற தன்மையையும் கடந்து பெருகிய நோய் என்க. தீயுமிழ் தெறலின் – தீயை உமிழ்ந்தாற்போல வருத்துதலினால்; இது நோயின் கொடுமை எனக் கூறுக; இனி இரவுக்குறிச் சிறைப்புறமாகக் கொள்ளின் நிலவொளியைக் குறித்ததாகக் கொள்க. ஒய்யென – விரைவாக. முன்றில் – முற்றம்; இல்லத்தின் முன்பாக விளங்கும் காலியிடம். நிரையம் – நரகம். புரை – குற்றம். ஏர் – அழகு. ஒளி. அண்ணல் – பெருமையுடைய. வியல் – அகன்ற. அறை – பாறை

விளக்கம் : தன் காதலை உணராதே, தன்னை இல்வயிற் செறித்துக் காவலும் ஏற்படுத்தியதனால், 'நிரையம் போன்ற நெஞ்சத்து அன்னை' என்று இகழ்ந்தனள். அவள்தானும் தன்போற் பெண்ணாயினும், தானும் கன்னிப் பருவத்தே இத்தகைய காதல் உறவினளேனும், இப்போது தன்னைத் தடைசெய்ய முனைகின்ற கொடுமையால் மனம் வெதும்பி இவ்வாறு அன்னையைப் பழிக்கின்றனள். பெண்மையின் கற்பறத்துக்கு ஊறு விளைத்தலினாலே, 'நரகம் புகுவள்' என கசந்து கூறினாளும் ஆம். 'புரையில் நுண் ஏர் எல்வளை' என்றது, கையளவிற்கு மிகுதலும் குறைதலுமாகிய குற்றம் அற்றதும், நுண்ணிய வேலைப்பாட்டால் அழகுடையதுமான ஒளியுள்ள வளை என்றதாம். அது நெகிழ்ந்தது மேனியின் மெலிவால். அதனை நெகிழச் செய்தோன் அவன் என்பதாம்.

'அவன் மலைக்காற்றேனும் சிறிது தீண்டி என் துயரைத் தீர்க்க' என்று புலம்புகின்றவளின் துயரமிகுதியைக் கேட்டலுறும் தலைமகன், 'இனியும் வரைந்து கோடலைச் செய்யாது நீட்டிப்பின் இத்தகு அன்புடையாள் இறந்துவிடலும் கூடும்' எனக் கவலைகொண்டு, அதற்காவன விரையத் துணிதலை நினைப்பான் என்பதும் கொள்க.

இறைச்சி : கொடு முடியிலே காற்றானது அளாவிச் சூழ்தலைப் போல,என் தோள்களும் அவன் தோள்களைத் தழுவி நிற்குமே என்று நினைத்து என்று நினைத்து இரங்கியது இதுவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/236&oldid=1698401" இலிருந்து மீள்விக்கப்பட்டது