நற்றிணை-2/252
252. புனைசுவர்ப் பாவை!
- பாடியவர் : அம்மெய்யன் நாகனார்.
- திணை : பாலை.
- துறை : ‘பொருள் வயிற் பிரியும்’ எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.
[(து.வி.) ‘தலைவன் பொருள்தேடி வருதலைக் கருதினனாகப் பிரிவான் போலும்’ என, அவனது செயற்பாடுகளிலே கவலையடைந்தாள் தலைவி. அதனைக் கண்டனள் தோழி. ‘இவளது குணநலன்கள் யாவையுமே அவரைத் தடுத்து நிறுத்த வல்லமையற்றன; இனி ஆற்றியிருத்தலே செய்யற்பாலதாகும்’ எனத் தெளிவுற்றனள். அதனைத் தலைவிக்கும் அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]
உலவை ஓமை ஒல்குநிலை யொடுங்கிச்
சிள்வீடு கறங்குஞ் சேய்நாட் டத்தம்
திறம்புரி கொள் கையொடு இறந்துசெயின் அல்லது
அரும்பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல்லென
வலியா நெஞ்சம் வலிப்பச் சூழ்ந்த
5
வினையிடை விலங்கல போலும் புனைசுவர்ப்
பாவை யன்ன பழிதீர் காட்சி
ஐதேய்ந் தகன்ற வல்குல் மைகூர்ந்து!
மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண்
முயல்வேட் டெழுந்த முடுகுவிசைக் கதநாய்
10
நன்னாப் புரையுஞ் சீரடிப்
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே!
தெளிவுரை : சுவரினிடத்தே அழகிதாக எழுதப் பெற்ற பாவையினைப் போன்ற, குற்றத்தின் தீர்ந்த காட்சியைக் கொண்டவள்; மெல்லிதாகப் பொருந்தி அகன்ற அல்குல் தடத்தினை உடையவள்; மை எழுதப் பெற்று மலர் பிணைத்தாற் போல விளங்கும், கரிய இமைகளைப் பொருந்தியுள்ள குளிர்ச்சியமைந்த கண்களைக் கொண்டவள்; முயலைப் பிடிப்பது கருதி எழுந்த, விரைந்த செலவைக் கொண்டதும், சினமுடையதுமான நாயினது நல்ல நாவைப் போல விளங்கும் சிறிதான அடிகளைக் கொண்டவள்; திரண்ட கூந்தலையும், புனைந்த இழையையும் உடையாளான தலைவி! இவளுடைய குணங்கள்— கிளைகளைக்கொண்ட ஓமை மரத்தினது பட்டுப்போன கிளைகளிடத்தே ஒடுங்கிக் கிடந்தபடி, 'சிள்வீடு' என்னும் வண்டுகள் ஒலி செய்தபடி இருக்கின்ற, சேய்மையிலுள்ள நாட்டிற்குச் செல்லும் வழிகளை இன்னபடியாகக் கடந்து செல்வேமென்னும் கோட்பாட்டோடு கடந்து சென்று பொருள் செய்தலை அல்லாது, வீட்டிடத்தே சோம்பியிருந்தோர்க்கு அரிய பொருளின் சேர்க்கையானது இல்லையென்று, இதுவரையிலும் ஒருப்பட்டு எழாத அவர் நெஞ்சமானது, இதுகாலை உடன்பட்டுப் பொருள் செய்தலைப் பற்றியே கருதலினால், மேற்கொண்ட வினையிடத்தே குறுக்கிட்டு அவரைத் தடுத்தலைச் செய்தில போலும்! ஆதலினாலே, இனி ஆற்றியிருத்தலே யல்லாது, யாம் செய்யத் தகுந்ததுதான் யாதுமில்லை!
சொற்பொருள் : ஓமை–ஒருவகைக் காட்டு மரம். ஒல்கு நிலை–இடுக்குப் பட்டுள்ள இடங்கள். 'சிள்வீடு' என்பது ஒருவகை ஒலி வண்டு. கறங்கும்–பெரிதாக ஒலிக்கும். திறம்–செய்தற்கான கூறுபாடுகள். சுவர்ப்பாவை–சுவரிடத்து எழுதப்பெற்ற பாவை; 'காழ்புனைந்து இயற்றிய வனப்பமை நோன்சுவர்ப் பாவை' என்று அகநானூற்றுள்ளும் கூறப்பெறும் (அகம்.369) 'என்றும் மாறாதிருக்கும் அழ'கென்பதனை இவ்வாறு குறித்தனர். முடுகு விசை–முடுகிய விரைவு. 'நாயின் நாக்குப் பெண்களின் அடிக்கு உவமையாதலை, 'வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி' என்பதனாலும் (பொருநராற்றுப்படை) அறியலாம்.
விளக்கம் : இவளுடைய அழகும் குணனும் அவன் செலவை மாற்ற இயலாவாயினமையின், 'இல்லிருந்தோர்க்கு அரும்பொருட் கூட்டம் இல்லை' என்னும் உலகியலறம் அவன் உள்ளத்தே முகிழ்த்து வலுப்பெற்றது. இனி, ஆற்றியிருத்தலே செயற்குரியது என்பதாம்!
உள்ளுறை : ஓமை மரத்தினது பட்டுப்போன கிளைகளிள் இடுக்குகளிலே ஒடுங்கிக் கிடந்து சிள்வீடுகள் கறங்கும்' என்றனர். அவ்வாறே யாமும் பொலிவழிந்த மனைக்கண்ணே ஒடுங்கிக் கிடந்து புலம்பினமாய்த் தனிமைத் துயரத்தைக் கழித்து ஆற்றியிருத்தலே இனிச்செய்தற்குரிய அறமாகும் என்றதாம். ஓமை இல்லத்துக்கும், பட்டுப்போன கிளை இடுக்குகள் இல்லத்தின் ஒதுங்கிய பகுதிகளுக்கும், சிள்வீடு தலைவிக்கும், அதன் கறங்கல் தலைவியின் பிரிவாற்றாதே புலம்பும் புலம்பலுக்கும் பொருத்தமாவன!