258. அன்னை செறித்தனள்!

படியவர் : நக்கீரர்.
திணை : நெய்தல்.
துறை : தோழி செறிப்பு அறிவுறீஇயது.

[(து.வி.) பகற்குறி வந்து ஒழுகுவானாகிய தலைவனிடம் வந்து, தலைவியின் தோழி, 'தலைவி இற்செறிக்கப்பட்டாள்' என்பதைச் சொல்லி, இனி வரைந்து கொண்டாலன்றி அவளை அடைதல் இயலாது என உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.]


பல்பூங் கானல் பகற்குறி மரீஇச்
செல்வல் கொண்க செறித்தனள் யாயே
கதிர்கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்
திருவுடை வியநகர் வருவிருந்து அயர்மார்
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த 5
கொக்குகிர் நிமிரல் மாந்தி, எற்பட
அகலங் காடி அசைநிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பிற் சேக்கும்
மருங்கூர்ப் பட்டினத் தன்னவிவள் 10
நெருங்கேர் எல்வளை ஓடுவ கண்டே.

தெளிவுரை : கொண்கனே! கதிர் எறித்தலானே மக்கள் முதலாயினோரின் கால்கள் வெம்புமாறு, கீழைத்திசை மலையிடத்தே தோன்றி எழுகின்ற ஞாயிறும் தோன்றிப் பகற்பொழுதைச் செய்தது. அத்தகைய பகற்பொழுதிலே செல்வ வளத்தையுடைய நம்முடைய பெரிய மனையினிடத்தே விருந்தினர்கள் வந்துள்ளனர். அவர்களை ஓம்புதற்குப் பொன் தொடியினை அணிந்தவரான மகளிர் சமைத்து நிவேதித்துப் புறங்கடையிலே கொக்கின் உகிர்போன்ற வெண்சோற்றைப் போட்டனர். அச்சோற்றைத் தின்றுவிட்டுப், பொழுது மறையும் மாலை வேளையிலே, அகன்ற அங்காடித் தெருவிலேயுள்ள அசைந்தேகும் நிழலிடத்தே குவிக்கப்பெற்றுள்ள பசிய இறாமீனைக் கவர்ந்து, பசுங்கண்களையுடைய காக்கையானது உண்ணும். அதனையும் உண்ட பின்னர்க், கடற்கரையிலே, அலையாலே அசைந்து கொண்டிருக்கின்ற கலத்தினது கூம்பினிடத்தே சென்று அக்காக்கையானது தங்கும். அத்தகைய மருங்கூர்ப்பட்டினத்தைப் போன்றவளான இவளது, அழகும் ஒளியும் பொருந்திய, நெருங்க அணிந்த வளைகள் கழன்று ஓடுவதனை அன்னையும் கண்டனள். கண்டவள், இவளையும் இவ்விடத்தே காவற்படுத்தினள்; பலவாகிய பூக்களையுடைய கானற் சோலையிடத்தே நீதான் செய்த பகற்குறியிடத்தே, யானும் தனியாகவே வந்து, நினக்கு அதனையும் கூறினேன். இனி, யானும் எம் இல்லுக்குச் செல்வேன். நீதான் இனி இவளை விரைந்து வந்து வரைந்து கொள்ளலைக் கருதுவாயாக!

சொற்பொருள் : பல்பூங்கானல் – பலவாகிய பூக்களையுடைய கானற் சோலை. மரீஇ – சென்றடைந்து. கொண்கன் – நெய்தல் நிலத்துத் தலைவன். புறங்கடை – வீட்டின் பின்புறம். நிமிரல் – சோறு. எற்பட – கதிர் சாய. பச்சிறா – இறாமீன். தூங்கல் – அசைதல். வங்கம் – மரக்கலம். சேக்கும் – தங்கும். நெங்கு ஏர் எல்வளை – அழகும் ஒளியும் உடையவாக, நெருங்க அணிந்த வளைகள்.

விளக்கம் : நின்னைக் கண்டு மகிழாமையாலே பெரிதும் துன்பம் உறுபவள் தலைவி எள்பாள், அவள் உடல் நலிதலினாலே மெலிவு அடைந்தனளாகத் தன் நெருங்கவணிந்த ஒளிவளைகள் சுழன்று வீழ மெலிந்தனள் என்றாள். அதனைத் தெய்வம் அணங்கிற்று எனத்தாய் இற்செறித்தனள். அவள் வாடாமற்படிக்கு இனி நீதான் அவளை வரைந்து வந்து மணந்து கொள்வாயாக என்கின்றனள். உணவு படைக்கு முன் சிறிது சோற்றைக் காக்கைக்குப் பலியாக இடுதல் மரபு. மருங்கூர்ப்பட்டினம் கீழைக் கடற்கரைப் பகுதியிலுள்ள பாண்டியர்க்குரிய ஓர் பட்டினம். அதன் வனப்பினை அவளது வனப்புக்கு உவமையாக உரைத்தனள்.

உள்ளுறை : மகளிரிட்ட பலிச்சோற்றை உண்டபின், அங்காடியிற் குவித்துக் கிடக்கும் இறாமீனையும் கவர்ந்து உண்ட காக்கையானது, வங்கத்துக் கூம்பிற் சென்று தங்கும் மருங்கூர் என்றனள். இது, பாங்கற் கூட்டத்தாற் பகற்குறி பெற்றும், பாங்கியிற் கூட்டத்தால் இரவுக்குறி பெற்றும் இவள் நலனைத் துய்த்து இன்புற்ற நீயும், இவளை மணந்து வாழக் கருதாயாய், நின் ஊர்க்கண்ணே சென்று இனிதே இருப்பாயாயினை என்று கூறியதாம். இதனை உணரும் தலைவன், தலைவியை மணந்து கொள்ளும் முயற்சிகளிலே ஈடுபடற்கு விரைபவன் ஆவான் என்பதாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/258&oldid=1698432" இலிருந்து மீள்விக்கப்பட்டது