262. தோள் அரும்பிய சுணங்கு!

பாடியவர் : பெருந்தலைச் சாத்தனார்.
திணை : பாலை.
துறை : தலைமகள் ஆற்றாக் குறிப்பறிந்து பிரிவிடை விலக்கியது.

[(து.வி.) பொருளைத் தேடி வருதலைக் கருதித் தன்னைப் பிரிந்து போதலைத் தலைவன் உளங்கொண்டான் என்பதனைக் குறிப்பாலே அறிந்து, தலைவி பெரிதும் கவலையால் நலிவடைகின்றனள். அவளது நலிவைக் கண்டு மனங்கலங்கியவன், தன் நெஞ்சொடுங் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


தண்புனக் கருவிளைக் கண்போன் மாமலர்
ஆடுமயிற் பீலியின் வாடையொடு துயல்வர
உறைமயக் குற்ற ஊர்துஞ்சு யாமத்து
நடுங்குபிணி நலிய நல்லெழில் சாஅய்த்
துனிகூர் மனத்தள் முனிபட ருழக்கும 5
பணைத்தோள் அரும்பிய சுணங்கின் கணைக்கால்
குவளை நாறும் கூந்தல், தேமொழி
இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்பப்
பிரிவல்நெஞ் சென்னும் ஆயின்
அரிதுமன் றம்ம இன்மைய திளிவே! 10

தெளிவுரை : தண்ணிய புனத்திடத்தே வளர்ந்துள்ள கருங்காக்கணத்தின் கண்ணைப் போன்ற கருமையான மலர்கள், வாடைக் காற்று வீசுதலாலே, கூத்தாட்டயருகின்ற மயிலினது பீலியைப் போல அசைந்தாடியபடியிருக்கும். மழைத்தூவலும் இடைவிடாதே தூவிக்கொண்டிருக்க விளங்கும், ஊர் முழுவதும் துயில் கொண்டிருக்கின்ற இரவின் நடுயாமப் பொழுதும் வரும். அப்பொழுதிலே நடுக்கத்தைத் தருகின்ற காமநோயானது தன்னை நலிவடையச் செய்ததாலே தான் நல்ல அழகெல்லாம் குன்றிப்போக, எப்பொருளையும் வெறுத்துவிட்ட மனத்தினளாசுத் தன்னையே முனிந்து ஒறுக்கின்ற காமநோயினாலே இவளும் வாடுவாள். ஆயினும், இவள் தான் பருத்த தோள்களும் அரும்பிய தேமலும், திரட்சியமைந்த கால்களும், குவளை மலர்களின் மணம் நாறுகின்ற கூந்தலும் இனிய சொற்களும் உடையவளாயும் உள்ளனள். இவளை விட்டுப் பிரிந்து, செய்வினைபற்றிய முயற்சிகளிலேயே உள்ளமானது என்னை இழுத்தலாலே, என் நெஞ்சுதானும் 'பிரிவே சிறந்தது' என்று உறுதி கொள்ளுமாயின், அதற்குக் காரணமாகிய வறுமையாலே வந்தெய்துகின்ற இனிவரவானது, அப்பிரிவினுங்காட்டிற் பொறுத்தற்கு அரியதாகும்! இதுதான் என்னவோ?

சொற்பொருள் : 'கருவிளை' என்றது கருங்காக்கணத்தினை. அதன் மலரின் வண்ணமும் அமைவும் மகளிர் கருங் கண்களுக்கு உவமை கூறப்பெற்றது. காற்றாலே அசைந்தாடும் அது, ஆடுகின்ற மயிலினது பீலிபோலத் தோன்றும் என்பது சிறந்த உவமையாகும். செடியின் பசுமையை மயிற்பீலியோடும், அதன் பூக்களைப் பீலியின் கண்களோடும் பொருத்திக் கண்டு இன்புறுக. சாய்தல்–குன்றுதல். துனி–வருத்தம். படர்–படரும் காமநோய். குவளை நாறும் கூந்தல்–குவள மலரைச் சூடியதனாலே, அதன் மணங்கமழுகின்ற கூந்தல்.

விளக்கம் : 'ஊர்துஞ்சு யாமத்து' இவள் துயரத்தை அருகிருந்து தேற்றித் தெளிவிப்பவரும் இலராக, இவள் தனியேயிருந்து தன்னையே வெறுக்கும் பெருந்துன்பத்தை அடைவாளோ என்று கலங்குகின்றான். 'பணைத்தோள்' என்பது முதலாகிய அவளது உருவத்தெழிலைக் கூறியது, இவளை முயங்காது பார்த்தே இருப்பினும், அதுவே இனிதாகும் என்று வியந்ததாம், 'தேமொழி' என்பது, பார்த்து இன்புறாத அளவினும் அவள் பேசக் கேட்பினும் அதுவே இன்பமாகும் என்றதாம். இன்பந்தரும் இவையிற்றை இழந்தேமாய், இவளையும் ஏங்கி நலிந்து நலங்கெடுமாறு கைவிட்டுப், பிரிந்து போவதற்கும் நெஞ்சம் தூண்டுவதாயின் வறுமையாலே வருகின்ற இளிவரவுதான் எத்துணைப் பொறுத்தற்கு அரிது, என்று அதனை நினைத்துச் சோர்கின்றான்.

இதன் பயன், அவன் தன் செலவைக் கைவிட்டவனாக இல்லத்தே தங்கி விடுபவனாவன் என்பதாம்.

இன்பமும் பொருளுமாகிய இரு பெருந் தேவைகளுக்கு நடுவே சிக்கி ஊசலாடுகின்ற இளமைப் பருவத்தினரின் உள்ளத்தை ஓவியப்படுத்திக் காட்டும் சிறந்த செய்யுள் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/262&oldid=1698436" இலிருந்து மீள்விக்கப்பட்டது