276. கட்சி சேக்கும் கான மஞ்ஞை!

பாடியவர் : தொல் கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : பகற்குறி வந்து பெயரும் தலைமகனை உலகியல் சொல்லியது.

[(து.வி.) பகற்குறிக் கண்ணே தலைவியைக் கூடி இன்புற்றுத் தன் ஊர்க்குச் செல்லும் தலைமகன்பால். அவனைத் தன் இல்லிலே வந்து விருந்துண்டு போக அழைப்பாள் போல, விரைவிலே பலரறி மணத்தைத் தோழி அறிவுதுத்துவதாக அமைந்த செய்யுள் இது.]


கோடு துவையாக் கோள்வாய் நாயொடு
காடுதேர் நசைஇய வயமான் வேட்கும்
வயவர் மகளிர் என்றி யாயின்
குறவர் மகளிரேம் குன்றுகெழு கொடிச்சியேம்
சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதில் 5
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல்லகத் ததுவெம் மூரே செல்லாது
சேர்ந்தனை சென்மதி நீயே பெருமலை
வாங்கமை பழுனிய நறவுண்டு
வேங்கை முன்றிற் குரவையும் கண்டே! 10

தெளிவுரை : கொம்புகளை ஊதியபடி, கொள்ளுதலிலே வல்ல வாயையுடைய நாயோடும் சென்று, காட்டின்கண்ணே இரை தேடியபடி இருக்கும் விருப்பத்தையுடைய வலிய விலங்கினையே தாம் கொள்ளுதலை விரும்பும், வேட்டுவ வீரரின் மகளிர் என்று எம்மைச் சொல்வாயாயின், யாம் அவரல்லேம்! யாம் குறவர் மகளிரேம். குன்றிடத்தே வாழ்கின்ற கொடிச்சியரேம். தினை காவலன் கட்டிய நெடிய கால்களையுடைய பரணிடத்திலே, காட்டு மயில்கள் தமக்கு வேண்டும் ஒதுக்கிடயாகக் கருதித் தங்கியிருக்கும் மலையின் கண்ணது எம் ஊர். நீர்தான் இப்போதே திரும்பிச் செல்லாது எம்மூர்க்கண் தங்கியிருந்துவிட்டுச் செல்வீராக. பெரிய மலையிடத்தே தோன்றி வளைந்த மூங்கிற் குப்பிகளிலே நிரப்பி முற்றவைத்துள்ள நறவினை உண்டுவிட்டு, வேங்கை மரம் நிற்கும் முற்றத்திலே யாமாடும் குரவைக் கூத்தையும் கண்டுவிட்டுப் போவீராக!

சொற்பொருளும் விளக்கமும் : கோடு – கொம்பு. துவையா – ஊதியபடி. கோள் வாய் – கொள்ளுதல் வல்ல வாய். வேட்டை நாய்கள் பிற விலங்குகளைத் தம் வாயாற் பற்றிக் கொள்ளும் தன்மையன என்பதனால், 'கோள் வாய் நாய்' என்றனர். தேர்தல் – ஆராய்தல்; இது தமக்கேற்ற இரையாதெனவும், எங்குள்ளது எனவும் சுற்றித் தேடித்திரிதல். வயமான் – வலிய விலங்கு. இது புலி முதலியவற்றைக் குறிப்பது. வேட்கும் – வேட்டையாட விரும்பும். வயவர் – வலிமையாளர்; வேட்டுவர். கொடிச்சி – குறக்குலப் பெண்ணின் பெயர். சேணோன் – இதணத்து உள்ளோன்; இதணம் என்பது புனங்காவலுக்குக் கட்டியுள்ள உயரமான பரண்; இதன் மேலிருந்தபடி குறவன் இரவிலே புனத்தைக் காத்திருப்பான் என்பதாம். கழுது – பரண். கட்சி – ஒதுக்கிடம். சேக்கும் – தங்கும். செல்லாது – நின் ஊருக்குப் போகாது. வாங்குதல் – வளைதல். பழுனிய நறவு – முதிர வைத்த கள். முன்றில் – முற்றம்.

"ஒவ்வொரு சமயம் வந்து இவளைத் தழுவிச் செல்கின்றாய். எனினும் இவளோ நின் சிறுசிறு பிரிவையும் பொறுக்கலாற்றாது நலிகின்றாள். எனவே இன்றிரவுக்கு எம்மூரிடத்தே தங்கிச் செல்வாயாக" என்கின்றாள் தோழி. அதனால் இடையூறு உண்டாகாது எனவும், தன்னவர் விருந்தினர்ப்பேணும் மரபினர் எனவும் கூறுவாள், 'நறவுண்டு; குரவையுங் கண்டு செல்வாயாக' என்கின்றனள்.

இவ்வாறு தலைவன் வந்து, தலைவியின் பெற்றோர் உபசரிக்கத் தலைவியின் வீட்டில் இரவில் தங்குவது என்பது தலைவியை வரைந்து கொண்டன்றி இயலாது ஆதலின், களவுக்குறி மறுத்து வரைவு கேட்டனளும் ஆம்.

'யாம் வயவர் மகளிர் அல்லேம் குறவர் மகளிரேம்' என்றது, எம்மவர் நீ வரைந்துவரின் அதனை ஏற்றுக்கொள்ளும் தன்மையர் என்றதாம். 'குறவர் மகளிரேம்' என்றதுடன், 'குன்று கெழு கொடிச்சியேம்' எனவும் கூறியது, அதனை மேலும் வலியுறுத்துவதற்காம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/276&oldid=1698478" இலிருந்து மீள்விக்கப்பட்டது