284. உள்ளம் பிணிக் கொண்டோள் !

பாடியவர் : தேய்புரிப் பழங்கயிற்றினார்.
திணை : பாலை.
துறை : பொருள் முடியா நின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.

[(து.வி.) பொருள் தேடி வரக்கருதிப் பிரிந்து சென்றானாகிய தலைவன், அதுதான் செய்து முடியாத நிலையிலேயும், மனம் தன் தலைவிபாற் செல்ல ஆற்றானாகிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]


புறந்தாழ்வு இருண்ட கூந்தற் போதின்
நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கஞ் செல்வாம் என்னும்
செய்வினை முடியாது எவ்வம் செய்தல் 5
எய்யா மையோடு இளிவுதலைத் தருமென
உறுதி தூக்கத் தூங்கி அறிவே
சிறிதுநனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல 10
வீவது கொல்என் வருந்திய உடம்பே?

தெளிவுரை : 'புறத்தே தாழ்ந்து இருண்ட கூந்தலையும். நெய்தற்போதின் நிறத்தைப்பெறும் கரிய இமைபொருந்திய மையுண்ட கண்களையும் உடையவள் அவள்! அத்தகையாளான, என் உள்ளத்தைத் பிணித்துக் கொண்டவள் இடத்தேயே யாமும் இனிச் செல்வேம். அவள் கொண்டிருக்கும் பிரிவுத் துயரத்தையும் தீர்ப்பேம்' என்று, எம் நெஞ்சமானது எமக்குச் சொல்லும். "செய்யக் கருதியதான வினையை முற்றவும் முடித்தலைச் செய்யாது, இடையிலே அதற்கு ஊறு செய்தலானது, அவ்வினையாலே விளையும் பயனை அடையாமையோடு, இகழ்ச்சியையும் நமக்குக் கொடுக்கும்." என்று எழும் உறுதிப்பாட்டை ஆராய்கையினாலே, என் அறிவோ, 'சிறு பொழுதளவுக்கும் நீதான் விரையாதிருப்பாயாக' என்று எனக்குச் சொல்லும். அவ்டத்தே, விளங்கிய, தலையிலே ஏந்தியுள்ள கொம்பினையுடைய களிறுகள் ஒன்றோடொன்று தமக்குள் மாறுபட்டுப் பற்றியிழுக்கத் தேய்ந்த புரியையுடைய பழைய கயிற்றைப் போல, என் வருந்திய உடம்புதானும் இருபாலும் இழுக்கப் பெற்று இற்று வீழத்தான்வேண்டுமோ?

சொற்பொருள் : 'போது' என்றது நெய்தற் போதினை. ஈரிதழ் – குளிர்ச்சி பொருந்திய இமைகள். செல்லல் – துன்பம். எவ்வம் – இடையூறு. எய்யாமை – அறியாமை; அடையாமை. இளிவு – இகழ்ச்சி. மாறு பற்றிய – இருபாலும் பற்றி இழுத்த.

விளக்கம் : உள்ளம் அவளிடத்தேயே பிணிப்புக் கொண்டமையாலே, அவளிடத்து மீண்டு போதலையே கருதிற்று. அறிவு, அங்ஙனமாகப் பிணிப்பு உறாமையினாலே, ஆராய்ச்சியின்மேற் சென்றது என்று பொருள் கொள்ளல் வேண்டும். மகளிர்பால் காமுற்று மயங்கினார்க்கு அறிவுத் தெளிவும் ஆராய்ச்சியுமே முற்றத் தெளிவாகத் தோன்றா என்பதும் இதனால் உணரப்படும்.

'தேய் புரிப் பழங்கயிறு' மிகச் சிறந்த உவமை. இதனால், இதனைப் பாடியவரும் இப்பெயரே பெற்றனர். 'வருந்திய உடம்பு வீவது கொல்லோ!' என்பதன்கண் வெளிப்படும் மனவேதனையை உணர்க. உள்ளம் அறிவு இரண்டும் மாறுபட்ட களிறுகட்கும், உடம்பு தேய்புரிப் பழங்கயிற்றுக்கும் நல்ல உவமைகள்.

மேற்கோள் : 'நோயும் இன்பமும் இருவகை நிலையில்' என்னும் சூத்திர உரையுள் இதனை மேற்கோள் காட்டி, 'இஃது உணர்வு உடையதுபோல் இளிவரல் பற்றிக் கூறியது' என்பர் நச்சினார்க்கினியர். 'ஞாயிறு திங்கள் அறிவே நாணே' என்னும் சூத்திர உரையுள், இச்செய்யுளின் 'உறுதி தூக்கத் தூங்கி யறிவே, சிறு நனி விரையல்' என்னும் அடிகளை இளம்பூரணரும் எடுத்துக் காட்டுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/284&oldid=1698497" இலிருந்து மீள்விக்கப்பட்டது