288. நன்னுதல் பரந்த பசலை !

பாடியவர் : குளம்பனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய் வெறியறிவுறீஇ வரைவு கடாயது.

[(து.வி.) தலைவன் வந்து சிறைப்புறமாக நிற்பதறிந்தாள் தோழி. தலைவி தலைவன் உறவினிடையே இடைப்பட்ட பிரிவினாலே தலைவிபால் பசலை தோன்றுகின்றது; அஃதறிந்த நற்றாய் முருகு அணங்கியதென வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கின்றாள்; இதனைத் தலைமகட்கு உரைப்பாள் போலத் தலைமகனும் கேட்டுத் தலைவியை விரைய மணந்து கொள்ளலைக் கருதுமாறு தோழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


அருவி யார்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு
ஞாங்கர் இளவெயி லுணீஇய வோங்குகிளைப்
பீலி மஞ்ஞை பெடையோ டாடுங்
குன்ற நாடன் பிரிவிற் சென்று
நன்னுதல் பரந்த பசலைகண் டன்னை 5
செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்
கட்டிற் கேட்கு மாயின், வெற்பில்
ஏனற் செந்தினைப் பாவார் கொழுங்குரல்
சிறுகிளி கடிகஞ் சென்றும்இந்
நெடுவேள் அணங்கிற் றென்னுங்கொ லதுவே? 10

தெளிவுரை : அருவிகள் ஆரவாரித்தபடியே வீழ்ந்து கொண்டிருப்பதும், அணங்குகளை உடையதுமான நெடிய கொடுமுடியின் பக்கத்திலேயுள்ள உயரமான மரக்கிளைகளிலே, பீலியையுடைய ஆண்மயிலானது தன் பெடையோடுங் கூடி ஏறியமர்ந்ததாய் இளவெயில் காய்ந்தபடியே ஆடிக்கொண்டிருக்கும் மலைநாடன், நம் தலைவன் ஆவான். அவன் நின்னைப் பிரிதலினாலே முன்னை அழகெல்லாம் கழிந்து போய், நல்ல நெற்றியிடத்தேயும் நினக்குப் பசலை படர்ந்தது. அதனைக் கண்டனள் அன்னை. செம்மையும் முதுமையும் கொண்டவரான பெண்டிரோடும் முறத்திலே நெல்லைப் பரப்பிக் கட்டு வைத்தனளாகக் குறிகேட்பாளாயின் யாம் என் செய்வோம்? வெற்பிடத்துள்ள ஏனலாகிய செந்தினையின்பால் நிரம்பிய கொழுவிய கதிர்களைக் கொய்து போகும் கிளிகளை வெருட்டுவேமாகச் சென்றிருந்தும், இந்த நெடிய முருகவேள் தான் அணங்கியதென்றால், அக்குறியிடத்தும் முருகு நிற்குமோ?

கருத்து : அன்னை அறிந்தனளாதலின், இனி இற்கெறிப்பே நிகழும். ஆகவே, விரைய வந்து மணத்தலே செய்யத்தக்கது என்பதாம்.

சொற்பொருள் : அணங்கு – தெய்வம்; அச்சமும் ஆம்; அச்சம் மரச்செறிவால் உண்டாவது. ஞாங்கர் – பக்கம். பீலிமஞ்ஞை – மயிலின் ஆண். பெடை – அதன் பெட்டை. செம்முது பெண்டிர் – ஊரிடத்தேயுள்ள முதுபெண்டிர். கட்டு–கட்டுவைத்துக் குறி காணல். தலைமகளை முன்நிறுத்தி முறத்தில் நெல்லை வைத்துத் தெய்வத்துக்குப் பிரப்பிட்டு வழிபாடு செய்து நந்நான்காக எண்ணிக் காணல். எச்சம் ஒன்று இரண்டு மூன்றாயின் முருகு அணங்கிற்று என்று கொள்வது மரபு. நான்கு சரியாயின் வேறு நோய் என்பர். முருகு அணங்கியது எனக் காணின் வெறியயர்தற்கு வேலனை அழைத்து ஏற்பாடு செய்வர். பாலார் – பால் நிரம்பிய. நெடுவேள் – முருகவேள்.

உள்ளுறை : மயில் பெடையொடுஞ் சென்று விளையாடியிருக்கும் என்றது, தலைமகனும் தலைமகளை மணந்து கொண்டு சென்று இன்புறுதல் வேண்டும் என விரும்பியதாம்.

விளக்கம் : களவுறவால் தலைவியின் மேனியழகு மாறுபடக் கண்ட அன்னை, அது முருகணங்கியதால் ஏற்பட்டதெனக் கலங்கிக் கட்டுவிச்சியரை அழைத்துக் கட்டுக் காண்பாளாயினள் எனவும், அதன்கண் அணங்கிற்றென்பதுபடநிற்பின் வெறியாட்டயரவும் முற்படுவள் எனவும், அதன்கண் வேலன் வந்து 'நெடுவேள் அணங்கிற்று என்பானோ?' எனவும் படைத்துக் கூறுவதன்மூலம், இனிக் களவுறவைக் கைவிட்டு வரைந்து கொள்ளுதலிலே மனஞ் செலுத்துவாயாக என்று குறிப்பாகக் கூறுகின்றாள் தோழி என்று கொள்க.

ஒப்பு : வரையுச்சிகள் அணங்குடையவை என்பதனை, 'அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும் கணங்கொள் அருவி' (அகம். 22) என்பதும் கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/288&oldid=1698506" இலிருந்து மீள்விக்கப்பட்டது