291. அழிந்த இவள் நலனே !

பாடியவர் : கபிலர்.
திணை : நெய்தல்.
துறை : வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப்பறிந்து நெருங்கிச் சொல்லியது.

[(து.வி.) பரத்தையிற் பிரிந்து மீண்டுவரக் கருதும் தலைவனின் ஏவலனாகிய பாணனிடத்துத் தலைவியும் அவனை ஏற்கும் குறிப்பினளாதலை நுட்பமாகப் புலப்படுத்துகின்றாள் தோழி.]


நீர்பெயர்ந்து மாறிய செறிசேற்று அள்ளல்
நெய்த்தலைக் கொழுமீன் அருந்த இனக்குருகு
குப்பை வெண்மணல் ஏறி அரைசர்
ஒண்படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்
தண்பெரும் பௌவநீர்த் துறைவற்கு நீயும் 5
கண்டாங்கு உரையாய், கொண்மோ, பாண!
மாயிரு முள்ளூர் மன்னன் மாவூர்ந்து
எல்லித் தரீஇய இனநிரைப்
பல்லான் கிழவரின் அழிந்தவிவள் நலனே ?

தெளிவுரை : பாணனே! நீரானது வற்றிப் போனதனாலே தன்னுடைய தன்மை மாறுபட்டதான், செறிவு கொண்ட அள்ளற் சேற்றிடத்தேயுள்ள, நெய்ப்பசை கொண்ட கொழுத்த மீன்களைப் பற்றித்தின்ன நினைத்தன நாரையினம். குவிந்து கிடக்கும் மணல் மேட்டிலே ஏறியிருந்தபடி, அரசரின் ஒள்ளிய காலாட்படைத் தொகுதியின் தோற்றம்போல அவை தோன்றும். அத்தகைய குளிர்ந்த பெரிய கடல்நீர்த் துறைக்குரியவன் தலைவன். அவனுக்கு நீதான் கண்டது கண்டபடியே சென்று சொல்வாயாக. மிகப் பெரியவனாகிய முள்ளூர் மன்னன் மலையமான் திருமுடிக்காரி, தன் காரிக்குதிரையைச் செலுத்திச் சென்று, இராப்பொழுதிலே கொண்டுதந்த பகையரசரின் ஆநிரைகளுக்கு உரியோரான, பலவாகிய பசுக்கூட்டங்களுக்கும் உரியவரின் செல்வமெல்லாம், அந்த இரவுக்குள்ளாகவே அழிந்து போயினாற் போலவே, இவளுடைய நலனும் அவனைப் பிரிந்ததனாலே முற்றவும் அழிந்து போயினதனையும் காண்பாயாக! இதுதான் அவர் குணமாமோ?

கருத்து : 'அவன் செயலாலே இவளடைந்த நலக்கேட்டை நீதான் கண்டது கண்டபடியே சென்று அவன்பாற் சொல்லுக' என்பதாம்.

சொற்பொருள் : நீர் பெயர்ந்து – நீர் வற்றிப் போய். மாறிய – தன் தன்மை மாறுபட்டுப் போகிய. செறிசேற்று அள்ளல்–செறிவான சேற்றைக்கொண்ட அள்ளல். அள்ளல்–சேற்றுப்பகுதி. நெய்த்தலைக் கொழு மீன் – கொழுப்புத் சத்துடைய கொழுத்த மீன். இனக்குருகு – குருகினம். முள்ளூர்–முள்ளூர்க் கானம்; மலையமானுக்கு உரியது. 'மா' என்றது, அவனது காரிக் குதிரையை.

உள்ளுறை : மீனருந்துஞ் செவ்விநோக்கிக் குருகினம் வரிசையாக மணல்மேட்டில் இருத்தலைப்போலத் தலைமகனிடமிருந்து பெறுதற்கான பொருட்பயனை எதிர்பார்த்து விறலி முதலாயினவரோடு பாணனும் கூடியிருக்கின்றான் என்றதாம். குருகினம் படையணிபோலத் தோற்றினும் படையாகாமைபோல, விறலி முதலாயினவரும் தலைவனுக்குத் துணையாவார்போலக் காட்டினும், உண்மையில் உறுதுணையாகும் பண்பினராகார் என்பதாம்.

விளக்கம் : 'செவ்வேல் மலையன் முள்ளூர்க் கானம்' (குறுந். 312) என்பது, முள்ளூர்க்குரியவன் மலையமானாதலை உணர்த்தும். பல்லான் கிழவராயிருந்தாரும் மலையமானின் செயலால் அந்தப் பொழுதிலேயே அனைத்துமிழந்து வறியராயினார். அதுபோலவே, இவளும் அவன் செயலால் தன் அழகனைத்தையும் இழந்தாளாயினாள். இவளது நிலையைக் கண்டது கண்டபடியே அவனுக்கும் கூறுக என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/291&oldid=1698513" இலிருந்து மீள்விக்கப்பட்டது