293. இடுபலி நுவலும் மன்றம் !

பாடியவர் : கயமனார்.
திணை : பாலை.
துறை : 1. தாய் மனை மருண்டு சொல்லியது; 2. அவரிடத்தாரைக் கண்டு சொல்லி யதூஉம் ஆம்.

[(து.வி.)1. தன் மகள் உடன் போக்கிலே தன் காதலனுடனே சென்று விட்டதனாலே பெரிதும் வறிதாகிப்போன மனைக்கண்ணிருந்து புலம்பும் தாயின் புலம்பலாக அமைந்தது இது. 2. தாய் தலைவனின் ஊராரைச் சார்ந்து, தன் துயர் தோன்றச் சொல்லியதாகவும் இது கொள்ளப்படும்.]


மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடிப்
பலிக்கள் ஆர்கைப் பார்முது குயவன்
இடுபலி நுவலும் அகன்றலை மன்றத்து
விழவுத்தலைக் கொண்ட பழவிறல் மூதூர்ப்
பூங்கண் ஆயங் காண்தொறும் எம்போல் 5
பெருவிதுப் புறுக மாதோ எம்மில்
பொம்மல் ஓதியைத் தன்மொழிக் கொளிஇக்
கொண்டுடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே!

தெளிவுரை : பாரகத்தேயுள்ள முதுகுடியைச் சார்ந்த வன் குயவன். அவன் நீலமணிபோலத் தோன்றும் நொச்சிப் பூவின் மாலையைச் சூடிக் கொள்வான்; பலியிடப் பெற்ற கள்ளினையும் குடித்துக்கொள்வான்; அதன்பின், தெய்வத்துக்கு இடுதற்குரிய பலியைப்பற்றியும் ஊராருக்கு எடுத்துச் சொல்லியபடி இருப்பான். அகன்ற இடத்தையுடைய அத்தகைய ஊர்மன்றத்திலே தெய்வத்துக்கு விழாவெடுத்தலையும் மேற்கொண்ட பழமைச் சிறப்புடைய மூதூரிடத்தே, பூப்போலும் கண்களைக் கொண்டவரான அவளது தோழிப் பெண்டிரைக் காணும்போதெல்லாம்—

எம் இல்லத்துக் குமரியான பொலிவுபெற்ற கூந்தலை உடையாளைத் தன் பொய்ம்மொழிகளாலே மயக்கித் தன் வயப்படுத்திக் கொண்டு, அவளையும் தன்னோடு அழைத்துக் கொண்டு தன்னூர்க்குப் போவதற்கு ஒருப்படுத்திய வன்கண்மையினனாகிய காளையாவானைப் பெற்ற தாயும்,

என்னைப் போலவே தன் மகளைப் பிரிந்து பெரிதும் மனநடுக்கத்தை அடைவாளாக!

கருத்து : 'என் வருத்தம் அவன் தாய்க்கும் வருக' என்றதாம்

சொற்பொருள் : மணி–நீலமணி. குரல்–பூங்கொத்து பலிக்கள்–பலிப்பொருளாகியகள். ஆர்கை–உண்கை. ஆயம்–ஆயமகளிர். இடுபலி நுவலல்–தெய்வத்துக்கு இன்னின்ன பலியை இடுதற்கு வருகவென்று ஊராரைக் கூவியழைத்தல். விழவு–கொற்றவைக்கு எடுக்கும் விழா. விதுப்புறல்–மன நடுக்கம் கொள்ளல்.

விளக்கம் : 'மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி' என்றது, நொச்சியின் பூங்கொத்துக்களைச் சூடிக்கொள்ளும் மரபினை உணர்த்தும். 'குயவன்' காளி கோயிற் பூசாரி; அவன் பாலைநில மறவர்க்கு அவரிடும் பலியைப்பற்றி ஊர்மன்றத்திலே நின்று குரலெடுத்து உரைப்பான் என்பது மரபு; விழவுத் தலைக்கொண்ட பழவிறன் மூதூர்–பழமையும் வெற்றிச் செருக்கும் கொண்ட மூதூர்; விழவினை மேற்கொண்ட மூதூர் என்க. 'காளையை ஈன்றதாயும் எம்போல் பெருவிதுப்புறுக' என்றது, அவளும் தன் மகளைப் பிரிந்து இப்படி என்போலத் துன்பமடைக என்றதாம். 'வன்கண் காளை' என்றது, இல்லத்தாரின் மனவேதனை நினையாது, தன் இன்பமே குறியாகக் கொண்டு தலைவியை அழைத்துச் சென்ற கொடுஞ்செயலைப் பற்றிக் கூறியதாம்.

தன் அன்பு மகளைப் பிரிந்ததன் வருத்தம் மேலிடப் பெரிதும் மனம் நொந்தவளான தாய், தன் மகளது மடமை பற்றியோ, அன்றி அவளது காதற் செறிவுபற்றியோ அன்றி அவளைத் தன்னோடும் அழைத்துச் சென்ற காளையாவானின் காதலீடுபாடுபற்றியோ நினைப்பிற் கொண்டிலள். அவனது வன்கண்மையை நினைந்து, அத்தகு வன்கண்மை உடையவனாக அவனை வளர்த்துவிட்ட அவன் தாயானவள், தானும் தன் மகளைப்பிரிந்து தன்னைப்போலவே பெரிதும் வருந்த வேண்டும் என்றே புலம்புகின்றாள். பெண்மையின் மனவியல்பை நுட்பமாகக் காட்டும் சிறந்த செய்யுள் இதுவாகும். வெகுளியிலே தாய் கொள்ளும் மெய்ப்பாடும் அதனை ஆற்றும்வகையாலே அவள் புலம்பும் புலம்பலும் நுட்பமாக இயல்பாக அமைந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/293&oldid=1698518" இலிருந்து மீள்விக்கப்பட்டது