296. படர் உழந்து ஒழிதும் !

பாடியவர் : குதிரைத் தறியனார்; குதிரைத் துறையனார் எனவும் பாடம்.
திணை : பாலை.
துறை : தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது.

[(து.வி.) தலைவன் கார்காலத்தேயும் வினைப்பொருட்டாகத் தலைவியைப் பிரிந்து போவதற்குக் கருதியதனைத் தோழி வாயிலாகக் கேட்ட தலைவியானவள், அவளுக்குத்தன் நிலையைத் தெளிவிக்கக் கூறியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]


என்னா வதுகொல் தோழி? மன்னர்
வினைவல் யானைப் புகர்முகத் தணிந்த
பொன்செய் ஓடை புனைநலம் கடுப்பப்
புழற்காய்க் கொன்றைக் கோடணி கொடியிணர்
ஏகல் மீமிசை மேதக மலரும்
பிரிந்தோர் இரங்கும் அரும்பெறற் காலையும்
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச்
செல்ப என்ப காதலர்
ஒழிதும் என்பநாம் வருந்துபடர் உழந்தே!

தெளிவுரை : தோழீ! மன்னர்கட் குரியவான போர் வினையிலே வல்லமையுடைய யானையானது, புள்ளிகொண்ட முகத்திலே யணிந்துள்ள, பொன்னாற் செய்த நெற்றிப் பட்டத்தின் புனைதல் சிறந்த அழகைப்போல, புழல் அமைந்த காய்களைக் கொண்ட கொன்றைமரத்தின் கிளைகளிலே கொடிகொடியாகத் தூங்கும் சரக்கொன்றையின் பூங்கொத்துக்கள், பெருமலையின் மிக உயர்ந்த பக்கத்தே, மேன்மைப்பட மலரா நிற்கும்!

'காதலித்தாரைப் பிரிந்திருப்பவர்கள், பிரிவுத் துயரத்தாலே தனித்திருந்து வருந்துவதற்கு உரியதான கார்காலத்திலேயும், வினைசெய்தலையே நினைந்திருக்கும் உள்ளத்தோடு, நம் காதலர் விரைந்து செல்வார்' என்பார்கள். நாம் அவரைப் பிரிந்தேமாய்ப், பிரிவைப் பொறுத்தபடி, நம்மை வருத்துகின்ற துயரத்தையும் தாங்கினமாய், இவ்விடத்தே இருந்தொழிதல் வேண்டும் என்றும் கூறுவர். இனி, எல்லாம் ஏதாய் முடியுமோ?

கருத்து : 'அவரே நம் துயரத்தை எண்ணாதவராயின், இனி யாம் எதனைப்பற்றி உயிர்வாழ்வதோ?' என்பதாம்.

சொற்பொருள் : வினை வல் யானை–போர்வினைப்பாட்டை அறிந்து அம்முறைப்படி செய்தலிலே வல்ல யானை. புகர்–புள்ளி. ஓடை – நெற்றிப்பட்டம். புழல் – புழை. புழற்காய்க் கொன்றை–உள்ளே புழையையுடைய கொன்றைக் காய். ஏகல் – உயரமான பாறை. மேதக – சிறப்பாக. 'அரும் பெறற் காலை' என்றது கார்காலத்தை. வினையே நினைந்த – வினை செயல் ஒன்றை மட்டுமே நினைந்த. துனைதல் – விரைதல். வருந்துபடர் –வருந்துதற்குக் காரணமான துன்பம்.

விளக்கம் : 'யானையின் முகத்திலேயுள்ள பொற்பட்டத்தைப் போலப் பாறைமேல் விழுந்து கிடக்கும் கொன்றை மலர்கள் தோன்றும்' என்றனர். யானை முகம் உயர்ந்த பாறைக்கும், பொற்பட்டம் பொன்னிறக் கொன்றைப் பூக்களுக்கும் உவமை. 'புனைநலம்' என்றது. பொற்பட்டம் அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்கியதனைக் குறித்தற்கு. கொன்றை சரம்சரமாகக் கட்டித் தொங்கவிட்டாற்போலப் பூத்திருத்தலின், 'கோடணி கொடி இணர்’ என்றனர். பிரிந்தோர் இரங்குவதற்குரியது 'கார் காலம்' என்பது தெளிவு. 'வினையே நினைந்த உள்ளம்' என்றதனால், தம்மை மறந்த உள்ளம் என்பதும் சொன்னது ஆயிற்று; ஆகவே, இனி எம் உயிர் என்னாகுமோ என்னும் ஏக்கமும் புலப்படும். 'துனைஇ' என்றது, அதுதான் விரையாதாயின் ஒரு சிறிது நம் நினைவும் எழக்கூடும்; அதற்கும் ஏதுவின்றி, அதுதான் விரைந்து செலுத்துவதாயிற்று; இனி என்னாகுவமோ? என்று வருந்துகின்றனள் என்பதற்காம்.

பயன் : தலைவியது இப்பேச்சைத் தோழி தலைவனுக்கு உணர்த்த, அவனும், தலைவியின் பிரிவாற்றாமைத் துயரைக் கருதினவனாகத் தான் பிரிந்து போவதனைக் கைவிடுவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/296&oldid=1698525" இலிருந்து மீள்விக்கப்பட்டது