299. வில்லெறி பஞ்சி!

பாடியவர் : வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.

[(து-வி.) தலைமகன் சிறைப்புறத்தான் என்பதனை அறிந்தனள் தோழி. அவன், தலைவியை விரைவிலே மணம் புரிந்து இல்லற வாழ்வைத் தொடங்குதல் வேண்டும் என்று கருதுகின்றாள். அவன் பாலும் அந்த நினைவை எழச்செய்தற்கு நினைப்பவள், தலைவியிடம் சொல்வாள்போல, அவனும் கேட்டுத் தெளியுமாறு இவ்வாறு கூறுகின்றனள்.]


உருகெழு யானை உடைகொண் டன்ன
ததர்பிணி அவிழ்ந்த தாழை வான்புதர்
தயங்கிருங் கோடை தாக்கலின் நுண்தாது
வயங்கிழை மகளிர் வண்டல் தாஅம்
காமர் சிறுகுடி புலம்பினும் அலர்காண் 5
நாமிலம் ஆகுதல் அறிதும் மன்னோ.
வில்லெறி பஞ்சி போல மல்குதிரை
வளிபொரு வயங்குபிசிர் பொங்கும்
நளிகடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.

தெளிவுரை : அச்சத்தைச் செய்கின்ற யானையானது, நல்ல உடையை அணிந்து கொண்டாற்போல, நெருங்கிய பிணிப்பு அவிழ்ந்த பெரிய தாழைப் புதர்கள் தோன்றும். அவை, கடுமையான மேல்காற்று மோதுதலினாலே, நுண்மையான பூந்தாதுகளை உதிர்க்கும். விளங்கும் இழையணிந்த மகளிரது வளையல்களைப்போல அவை உதிரும். வில்லால் எறியப்படும் பஞ்சி சிதறுதலைப்போல, அடுத்தடுத்து வரும் அலைகளைக் காற்றுப் பொருதி அலைத்தலால் சிதறும் நீர்த்திவலைகள் பொங்கி எழுகின்ற பெரிய கடல்நிலத் தலைவனோடு கூடி மகிழ்வதற்கு முன்பே, அத்தகைய அழகிய நம் சீறூர்க்கண்ணே, நாம் தனிமையுற்று வருந்தியவிடத்தில், நாம் அலர் கூறப்படுதலை இல்லாதவராய் இருந்ததனையும், நன்கு அறிவோம் அல்லமோ?

கருத்து : அவரைப் பிரிந்து இனியும் ஆற்றியிருக்க நம்மால் இயலுமோ? என்பதாம்.

சொற்பொருள் : உருகெழு யானை – அச்சம் விளைக்கும் யானை. உடைகொண்டு – முதுகில் ஆடை போர்த்துக்கொண்டு, பிணி – பிணிப்பு; கட்டு. இருங்கோடை – கடுமையான மேல் காற்று. நுண்தாது – தாழைப் பூவின் மகரந்தம். வயங்கிழை – ஒளி விளங்கும் ஆபரணங்கள். தாழைப் பூவின் அடிப்பகுதி மகளிர் அணியும் வளைபோல்வதாகலின், வளையின் தாஅம் என்றனர்.

விளக்கம் : சிறைப்புறத்தானாகிய தலைமகன் கேட்டுணரக் கூறுகின்றனளாதலின், அவனுக்கு ஊரலரையும் தம் பிரிவாற்றாமையும் இவ்வாறு உரைக்கின்றனள் என்று கொள்க. காற்று மோதுதலாலே உதிரும் தாழைப் பூந்தாது, மகளிர் வளைகழன்று வீழ்வதுபோலும் என்றது, தலைவனின் பிரிவால் தலைவியும் உடல் மெலிவுற்று வருந்துகின்றவளாயினள் என்று உணர்த்துவதாம். காற்று மோதுதலாலே அலைகள் உடைந்து பிசிர் பிசிராகச் சிதறுதலைப்போல, வேட்கை நோய் வருத்துதலாலே உண்டான உடல் மாறுபாடு பற்றிய அலரும் எழுந்து ஊர் முழுதும் பரவிவிட்டது என்பதாம். 'சேர்ப்பன்' – கடல் நிலத் தலைவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/299&oldid=1698532" இலிருந்து மீள்விக்கப்பட்டது