301. யாய் மறப்பறியா மடந்தை!

பாடியவர் : பாண்டியன் மாறன் வழுதி.
திணை : சேட்படுத்துப் பிரிவின்கண், 'இயற்கையில் தங்குவதோர் ஆற்றாமையினாள்' என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது.

[(து-வி.) தலைவனையும் தலைவியையும் ஒன்றுபடுத்த எண்ணுகின்றாள் தோழி. அவள் மனம் தலைவியின் தாய் அவள்மேல் செலுத்தும் பெரிதான அன்பையும் நினைக்கின்றது. அவள் தன்னுள்ளே சொல்லிக் கொள்வதுபோல அமைந்த செய்யுள் இது. எனினும், இதனைக் கேட்கும் தலைவனும், தலைவியின் அருமையை அறிந்து, அவளை விரைவில் மணந்து இல்லறவாழ்வில் இனிது வாழ்வதுபற்றிய நினைப்பினனாவான் என்பதும் ஆம்.]


நீள்மலைக் கலித்த பெருங்கோற் குறிஞ்சி
நாள்மலர் புரையும் மேனிப் பெருஞ்சுனை
மலர்பிணைத் தன்ன மாவிதழ் மழைக்கண்
மயிலோ ரன்ன சாயல் செந்தார்க்
கிளியோ ரன்ன கிளவி பணைத்தோள் 5
பாவை யன்ன வனப்பினள் இவளெனக்
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி
யாய்மறப் பறியா மடந்தை
தேறைப் பறியாக் கமழ்கூந் தலளே.

தெளிவுரை : "நெடுமலைத் தொடரிடையே முளைத்த பெருத்த தண்டுடைய குறிஞ்சியது, அற்றை நாட்காலையில் பூத்திருக்கும் புதுமலரைப் போன்ற மேனியள்; பெருஞ்சுனையிடத்துக் குவளைமலர்களுள், இரண்டை ஒருங்கு பிணைத்தாற் போல விளங்கும், கரிய இமைகளையுடைய குளிர்ந்த கண்களை உடையவள்; மயிலோ என்னுமாறு பொருந்திய சாயலை உடையவள்; சிவந்த கழுத்தாரத்தைக் கொண்ட கிளியோ என்னுமாறு பேசும் மழலைப் பேச்சினள்; பணைத்த தோளினள்; கொல்லிப் பாவை போலும் வனப்பினள்—இவளாகிய என் மகள்" என்று, விருப்பமுடைய நெஞ்சத்தோடு பலபடப் பாராட்டியபடி, தாயால் சிறிதுபொழுதுக்கும் மறந்திருத்தலை அறியாத மடந்தையான தலைவியானவள், நெய்மணம் மறந்தறியாத, மணம் கமழும் கூந்தலையும் உடையவள் ஆவாளே!

கருத்து : 'தாய் அறியாமல் அவளை நின்னுடன் ஒன்று படுத்துவது இயலாத செயல்' என்பதாம்.

சொற்பொருள் : கலித்தல் – முளைத்தெழுதல். நீள்மலை – நெடுந்தொலைவுக்குப் பரந்து கிடக்கும் மலைத் தொடர். கிளவி – பேச்சு. பணைத்தோள் – பணைத்ததோள்; பணைத்தல் – பெருத்தல். பாவை – கொல்லிப் பாவை.

விளக்கம் : குறிஞ்சி – குறிஞ்சிச் செடி; இது பன்னீராண்டிற்கு ஒரு முறை முளைத்துப் பூப்பது; மென்மை சிறந்தது; பாண்டி நாட்டுக் கோடைமலைப் பகுதியில் மிகுதி; இதனை அறிந்து பாண்டியன் மாறன் வழுதி எடுத்துக் காட்டியுள்ளது சிறப்பாகும். இதன் தண்டு கருமையானது; இதனைக் 'கருங்கோல் குறிஞ்சிப் பூ' எனவரும் குறுந்தொகை (செய்.3)யாலும் அறியலாம். குவளையின் இணைமலர்களைக் கண்களுக்கு உவமை கூறுவதை 'மலர் பிணைத்தன்ன மாயிதழ் மழைக்கண்' என வருவதனாலும் அறியலாம் (நற். 252).

விளக்கம் : இவள், "வீட்டின் புறம்போந்து இரவுக்குறியில் நின்னால் தழுவுவதற்கு இனி வாய்த்தல் அரிது; எனவே, மணந்து கூடியின்புறலே இனிச் செயத்தக்கது" என்பதாம். 'தேமறப் பறியாக் கமழ்கூந்தலளே' என்றது, நின்னால் சூட்டப்பெறும் நறுமலர்களின் மணம் அதனை வேறுபடுத்தினும் அன்னை அறிவாள் என்பதாம். 'காமர் நெஞ்சமொடு' என்றது, எப்போதும் அன்பு பாராட்டுவாளான தாய், தன் மகளின் மணப்பருவப் புதுப்பொலிவு கண்டு, மேலும் அவள்பால் விருப்பம் கூடியவளாயினாள் என்பதாம்.

கழறிய பாங்கற்குத் தலைவன் தலைவியது மேம்பாடு கூறியதாகவும் இதனைக் கொள்ளலாம். பாண்டியன் கோடைப் பகுதியிலே கண்டு காதலித்த ஒரு கன்னியின் வனப்பைப் பாராட்டிக் கூறியது எனவும் கருதலாம். மேனி, கண், சாயல், கிளவி, வனப்பு, கமழ் கூந்தல் என உவமித்த சிறப்பு, அவன் அவளைப் பகற்குறியிற் பெற்றுக் கூடியவன் என்பதையும் புலப்படுத்துவதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/301&oldid=1698547" இலிருந்து மீள்விக்கப்பட்டது