303. எறி சுறவின் கடு முரண்!

பாடியவர் : மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரிச் சாத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : 1. வேட்கை தாங்க கில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது; 2. சிறைப் புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம்.

[(து-வி.) 1. தான் கொண்ட காமவேட்கை தாங்க முடியாதவளான தலைமகள் தோழிக்குச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது; 2. தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி, அவன்பால் தலைவியை விரைய வரைந்து வருதலைப் பற்றிய நினைவை எழச்செய்யக் கருதிக் கூறியதாகவும் கொள்ளலாம்.]


ஒலியவிந் தடங்கி யாமம் நள்ளெனக்
கலிகெழு பாக்கம் துயின்மடிந் தன்றே
தொன்றுறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத்
துணைபுணர் அன்றில் உயவுக்குரல் கேட்டொறும் 5
துஞ்சாக் கண்ணள் துயரடச் சாஅய்
நம்வயின் வருந்தும் நன்னுதல் என்பது
உண்டுகொல்—வாழி தோழி—தெண்கடல்
வன்கைப் பரதவர் இட்ட செங்கோல்
கொடுமுடி அவ்வலை பரியப் போகிக் 10
கடுமுரண் எறிசுறா வழங்கும்
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத் தானே!

தெளிவுரை : தோழீ! நீதான் நீடு வாழ்க! தெளிந்த நீருடைய கடலிடத்தே, வலிய கையினரான பரதவர்கள், நேரான கோலையும் வளைந்த முடிகளையும் கொண்ட அழகிய வலைகளை வீசுவர்; அவ்வலை கிழியுமாறு அதனை அறுத்துக் கொண்டு வெளியே சென்று, கடுமையான முரண்பாட்டால், எதிர்ப்பட்டதை எல்லாம் தாக்கியிருந்தது சுறாமீன் ஒன்று; அத்தகைய சுறாமீன் திரிந்தபடியிருக்கும், ஆழ்ந்த நீர்த்துறைக்கு உரியவன் நம் சேர்ப்பன். அவனும், நம் நெஞ்சகத்தான் ஆகவே உள்ளனன். ஆயினும்—

"ஊரும் ஒலி அவிந்ததாய் அடங்கிற்று. யாமமும் நள்ளென்னும் ஒலியுடையதாயிற்று. நள்ளிரவுப் பொழுதும் வந்தது. ஓசை மிகுந்த நம் பாக்கத்தேயுள்ளவர் யாவரும் அயர்ந்து உறங்குவாராயினர். நம் மன்றத்துப் பெண்ணை, மிகப் பழங்காலத்திலிருந்தே கடவுள் தங்கியிருந்து வாழும் பருத்த அடியை உடையது. அதன் வளைந்த மடலிடத்தே, அன்றில்களின் கூடு உள்ளது. தன் துணையோடும் கூடி வாழுகின்ற அன்றிலானது அக்கூட்டிலிருந்தபடியே வேட்கைக் குரலை எழுப்புவதையும் தொடர்ந்து கேட்கின்றேம்.

அதனைக் கேட்கும்போதெல்லாம், கண் உறக்கம் அற்றவளாய், பிரிவுத் துயரமானது தன்னைப் பெரிதும் வருந்துதலினாலே மெலிந்து, நம்மையே நினைந்து, நல்ல நெற்றியை உடையவளான நம் காதலியும் வருந்துவாள்" என்று—

அவன் நினைப்பதுதான் உண்மையாகுமோ?

கருத்து : நம்மை நினைத்திலர்; ஆதலினாலேதான் இதுகாறும் வந்திற்றிலர் என்பதாம்.

சொற்பொருள் : தொன்றுறை கடவுள் – பழங்காலந்தொட்டு வந்து தங்கி வெளிப்பட்டு அடியவர்க்கு அருளும் கடவுள்; இன்றும் நெல்லை மாவட்டப் பகுதிகளில் இவ்வாறு பனையின் அடிமரத்தில் கடவுளை நிறுத்தி மக்கள் வழிபடுகின்றனர். 'தொன்முது கடவுள்' எனவும் பாடம். வாங்கு மடல் – வளைந்த மடல். உயவுக் குரல் – வேட்கைக் குரல். துணை பிரிந்த பறவை தன் துணையைச் சேர்தலை விரும்பிக் கூவியழைக்கும் துயரக்குரல். வன்கை – வலிய கை. கொடுமுடி – வளைந்த முடி. நெடுநீர் – ஆழமான நீர்; நெடுகிலும் பரந்துள்ள கடலும் ஆம்.

உள்ளுறை : அவர் சொல்லாகிய வலைப்பட்டது என் மனம்; அவர்தான் நம்மை மறக்கவும், இப்போது அதுதான் அதனைக் கடந்து வெளிப்பட்டு அவரை நோவதாயிற்று, இதனைக் 'கொடுமுடி யவ்வலை பரியப் போகிக் கடுமுரண் சுறாவழங்கும்' என்பதனாற் பெற வைத்தனர்.

விளக்கம் : "நாம் அவர் பிரிவாலே வருந்தி நலிவோம் என்று நினைத்தனராயின், அவர்தாம் இதற்குள் வந்து, நம் துயரைப் போக்கியிருப்பார் அல்லரே" எனப் புலம்புகின்றாள். 'துணையோடன்றித் தனித்து வாழ்தல் இல்லாத இயல்பினது' அன்றில். ஆதலின், 'துணைபுணர் அன்றில்' என்றனள். தன் காதலனினும் அதன் துணை சிறந்தது; சிறுபொழுதும் பிரிந்திருக்காத இயல்பினது என்று எண்ணி வருந்தியதாம்.

மேற்கோள் : 'மறைந்தவற் காண்டல்' என்னும் பொருளதிகாரச் சூத்திரத்து (111), 'காமஞ் சிறப்பினும்' என்பதற்கு, இச்செய்யுளை நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/303&oldid=1698551" இலிருந்து மீள்விக்கப்பட்டது