312. அவள்தான் என்னாகுவளோ?

பாடியவர் : கழார்க்கீரன் எயிற்றியார்.
திணை : பாலை.
துறை : பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது.

[(து-வி.) ஒரு தலைவனின் நெஞ்சமோ பொருள்மேற் செல்லுகின்றது. பிரியின், தலைவி பெருந்துயர்ப்படுவள் என்னும் அச்சம் அவன் பிரிவைத் தடை செய்கின்றது. இரண்டுக்கும் இரண்டு உணர்வுகளுக்கும்—இடையே ஊசலாடும் அவன், தன் நெஞ்சை விளித்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


நோகோ யானே நோம் என் நெஞ்சே
பனிப்புதல் ஈங்கை அங்குழை வருடச்
சிறைகுவிந் திருந்த பைதல் வெண்குருகு
பார்வை வேட்டுவன் காழ்களைந் தருள
மாரி நின்ற மையல் அற்சிரம் 5
அமர்ந்தனள் உழையம் ஆகவும் தானே
எதிர்த்த தித்தி முற்ற முலையள்
கோடைத் திங்களும் பனிப்போள்
வாடைப் பெரும்பனிக் கென்னள்கொல் எனவே.

தெளிவுரை : யான் நினது விருப்பின்படியே பொருளீட்டுதற்குச் செல்லாதிருக்கின்றேன் என்று, என்னை நொந்து கொள்ளும் என் நெஞ்சமே! மேலேறிப் படருகின்ற தேமற்புள்ளிகளை உடையவள்; முற்றுதலைப் பெறாத இளைய முலைகளைக் கொண்டவள்; யான் பிரியாது உடனிருப்பேனாகிய இக்கோடைக் காலத்துத் திங்களிலும், யான் பிரிவேனோ எனக் கருதி மயங்கியவளாய் மிக நடுங்குபவள்—என் காதலி, அவள்தான்—

குளிர்ச்சியமைந்த புதரிடத்தேயுள்ள ஈங்கைச் செடியினது, அழகிய தழையானது தன் முதுகினை வருடிவிடத், தன் சிறகு குவிந்திருந்தபடியே வருத்தமுற்றிருந்த வெண்மையான கொக்கினைப் பார்வைப் புள்ளாக்கி, வேட்டுவன், அதன் கால்கட்டை அவிழ்த்து விடுவதற்கு நிற்கின்ற தன்மையுடையது கார்காலம்; பகலும் இரவும் என்னும் வேறுபாடறியாது மயங்கிக் கிடத்தற்கு உரியது கூதிர்காலம்; வாடைக் காற்றினோடு பனியும் பெரிதும் பெய்தலைக் கொண்டது முன்பனியும் பின்பனியும் ஆகிய பருவங்கள். இக்காலங்களில், என்னைப் பிரிந்து தனித்திருந்தவளாக, அவள்தான் என்ன என்ன பாடுபடுவாளோ என்று, யானும் நோவா நின்றேன். என் அந்த நோயினது உண்மையினை அறியாயாய், நீயும் என்பாற் புலக்கின்றதுதான் எதனாலோ?

கருத்து : 'யான் பிரியின் அவள் நிலை யாதாகுமோ?' எனக் கவலை அடைவேன்; ஆதலின் பிரிதல் நினைவை நீயும் கைவிடுக' என்பதாம்.

சொற்பொருள் : பனிப்புதல் – ஈரமுள்ள புதர்; பனியால் நனைந்த புதருமாம். ஈங்கை – இசங்கு என்பர்; ஒருவகை முட்செடி. அங்குழை – அழகிய குழை; குழை – தழை. வருட – மெல்ல மெல்லத் தொட்டுத் தடவ; தடவியது வேட்டுவனை என்றும், குருகினை என்றும் கொள்ளலாம். பைதல் – வருத்தம். ‘பைதல் வெண் குருகு' என்றது; அதன் கால்கள் கட்டப் பட்டுள்ளதனால், பறந்து செல்ல இயலாமையால்; சிறை குவிந்திருந்ததும் பறவாததால்தான். பார்வை – பார்வைப்புள்; 'கைப் பறவை' என்றும் கூறுவர்; பழகிய பறவை இது; இதை விட்டுப் பிற பறவைகளைப் பிடிப்பது வேட்டுவர் வழக்கம். மையல் – மயக்கம். உழையம் – அருகிருப்போம். தித்தி – தேமற் புள்ளி; 'எதிர்த்த தித்தி' என்றது, அதன் மேலேறிப்படரும் தன்மையால். பனிப்போள் – நடுங்குவோள். அற்சிரம் – கூதிர்ப்பருவம். காழ் – பிணிப்பு.

உள்ளுறை பொருள் : வேட்டுவனால் பார்வையாகக் களைந்து வலையுள் வைக்கப்பட்ட வெண்குருகு, ஈங்கையின் அங்குழை வருடுதலால் தன் துயரத்தைச் சற்றே மறந்து, அந்தச் சுகத்தை நினைந்து இன்புறும். அவ்வாறே, இல்லில் நம்மாலே கைவிடப்பெற்றுத் தமியளாய்த் துயருறும் தலைவியும், தோழி தேற்றத் தன் துயரையும் மறந்தவளாய், மாரிக் காலத்தைக் கழிப்பவளாவாள் என்பதாம்.

விளக்கம் : கடமையும் காதலன்பும் ஒன்றையொன்று மீறிச் செயல்படத் தொடங்கும் ஒரு தலைவனின் நிலையை இச்செய்யுளிற் காணலாம். இதனால், அவன் போகுங்காலம் தள்ளி வைக்கப்படும் என்பதும் விளங்கும். எனினும், கடமை, வலிமை பெற விரைவிற் பொருள்தேடச் செல்வான் என்பதும் அறியப்படும். 'முற்றா முலையள்' என்றது, காமவின்பத்திற் பற்று விடும் அளவுக்குப் பருவத்தால் முதிராதவள் என்றும், மகப்பேறு இன்னும் பெறாதவள் என்றும் உணர்த்துவதாம்; ஆகவே, அவள் துய்க்கும் பருவத்தள்; அப்பருவத்து அவளைப் பிரிவுத்துயரால் நலியச் செய்தல் கூடாது என்பதுமாம். இதற்குப் பயன், செலவு அழுங்குதல் என்று கொள்க.

பயன் : தோழியின் உரைகளைக் கேட்டும், தன் துயரம் வெளிப்பட்டுப் புறந்தோன்ற அதனாற் பழிச்சொல் எழுதலை நினைத்தும், தலைவி ஆற்றியிருப்பவளாவாள் என்பதுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/312&oldid=1698575" இலிருந்து மீள்விக்கப்பட்டது