315. மலர் தீய்ந்து அனையர்!

பாடியவர் : அம்மூவனார்.
திணை : நெய்தல்.
துறை : தலைமகனைப் பரத்தை நொந்து கூறியது.

[(து-வி.) ஒருத்தியைப் பிரிந்து மற்றவள் பாற் சென்ற தலைவன், மீண்டும் அவளை விரும்பி வருகின்றான். அவன் பிரிவால் நலிந்திருந்த அவளது உள்ளத்து வேதனையை அவள் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் அவனுக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது. இதனால், அவள் ஊடல் தீர்வாள் என்பதும் அறியப்படும்.]


ஈண்டுபெருந் தெய்வத்து யாண்டுபல கழிந்தெனப்
பார்த்துறைப் புணரி அலைத்தலிற் புடைகொண்டு
மூத்துவினை போகிய முரிவாய் அம்பி
நல்லெருது நடைவளம் வாய்த்தென உழவர்
புல்லுடைக் காவில் தொழில்விட் டாங்கு 5
நறுவிரை நன்புகை கொடாஅர் சிறுவீ
ஞாழலொடு கெழீஇய புன்னையங் கொழுநிழல்
முழவுமுதற் பிணிக்கும் துறைவ! நன்றும்
விழுமிதிற் கொண்ட கேண்மை நொவ்விதில்
தவறுநன்கு அறியா யாயின் எம்போல் 10
நெகிழ்தோட் கலுழ்ந்த கண்ணர்
மலர்தீய்ந்து அனையர் நின்நயந் தோரே!

தெளிவுரை : நெருங்கிய, பெருந் தெய்வங்களின் பெயர்களைக் கொண்டவான யாண்டுகளும் பலவாகக் கழிந்தன. அதனால், கரையை அடுத்திருக்கும் நீர்த்துறையிலே, அலைகள் மோதி மோதித் தாக்குதலாலே மோதப்பட்டுப் பழைதாகித் தொழில் செய்வதற்கு உதவாது போயினது, முரிந்த முன்பகுதியைக் கொண்ட தோணி ஒன்று. அதற்கு நறுமணஞ் சேர்ந்த நல்ல புகையும் கொடாதவராக, சிறிய பூக்களையுடைய ஞாழலோடு சேர்ந்து உயரமாக வளர்ந்திருந்த புன்னை மரத்தின் கொழுமையான நிழலிலே, அதன் குடமுழவு போன்ற அடி மரத்திலே, அத்தோணியைப் பிணித்தும் வைத்தனர். நல்லபடியாகத் தொழில்செய்து உதவிய எருதானது, தன் நடைச்சிறப்பினின்றும் நீங்கியதாயிற்று என்பதனாலே, உழவர்கள், அதனைப் புல்லையுடைய தோட்டத்திலே, தொழில் செய்யாதபடி வறிதே மேயுமாறு விட்டுவிட்டனர். அத்தன்மை கொண்ட நீர்த்துறைக்கு உரியவனாகிய, எம் தலைவனே!

பெருஞ் சிறப்பினதாகக் கருதினையாய், நீதான் அவளோடு மேற்கொண்ட நட்பினிடத்தே, சின்னஞ்சிறு தவறும் வராமற்படிக்கு, நன்றாக அறிந்து நீயும் நடத்தல்வேண்டும். அதனை நீதான் அறியாதவன் ஆயினால், எம்மைப்போலும் நெகிழ்ந்த தோள்களும் கலங்கியழும் கண்களும் கொண்டவரான மகளிரின் நிலைதான் யாதாகுமோ? நின்னால் விரும்பப்பட்ட அவர் நிலைதான், மலர்ந்து கருவேற்றுப் பயன் தந்து வீழாது தீய்ந்து, மலர்ந்ததும் வறிதே உதிர்ந்துவிடும் மலரினைப் போன்றதாகுமே!

கருத்து : 'இதனை உணர்ந்தாயாய், நீதான் என்று திருந்துவையோ?' என்று மனம் வெதும்பிக் கூறியதாம்.

சொற்பொருள் : தெய்வத்து யாண்டு – தெய்வப் பெயர்களைக் கொண்ட யாண்டு; 'தெய்வம்' வருடப் பெயர்கட்கு வந்தது. அம்பி – தோணி வகையுள் ஒன்று. புகைகொடுத்தல், பேய்க் குற்றத்திற்பட்டு அதற்குத் தீங்கு நேராமைப் பொருட்டு. 'நடைவளம் வாய்த்தல்' என்றது, அதுதான் குன்றியதைக் குறித்ததாம். கா – தோட்டக்கால். முரிவாய் – முரிந்துபோன வாய்ப்புறம்; வாய்ப்புறமாவது தலைப்பகுதி. புணரி – அலை. நொவ்விது – நுட்பமானது. நயந்தோர் – விரும்பிக் காதலிக்கப்பட்ட மகளிர்.

உள்ளுறை பொருள் : அம்பியானது மூத்து முனைமுரிந்து அலைகளால் சிதைவுற்ற காலையிற் புன்னையின் அடிமரத்தில் பிணித்துப் போடுவர் என்றது, நின்னால் விரும்பப்பட்ட மகளிர்தாம்; சிறிது முதிர்ந்து அழகு குன்றினராயின், அவரைப் பாதுகாத்துப் பண்டுபோற் பேணாது, விட்டு நீங்கிப் புதியரை நாடுபவன் நீ என்று இடித்துக் கூறியதாம்.

விளக்கம் : 'நின்னை நயந்தோர் மலர் தீய்ந்தனையர்' என்றது, இயல்பான முதுமையை அடையாத பெண்களையும், நீதான் இளமையிலேயே துறந்து கைவிட்டுச் சென்று, வாடி உயிர் அழியச் செய்யும் தன்மை உடையை என்று சொல்லிப் பழித்ததாம். 'இவளும் அத்தன்மையள் ஆயினாள்' என்று அருள்தோன்றக் கூறியதும் ஆம். தலைவனின் காமக்கிழத்தி இவ்வாறு கூறுவது, அவளுக்கு அவன்பாலுள்ள பழைய தொடர்பையும், உரிமையையும், அக்குடும்பத்தின்பால் அவளுக்குள்ள நல்லெண்ணத்தையும் புலப்படக் காட்டுவதாகும். 'பெருந்தெய்வம்' என்றது பரசிவத்தை என்பர்.

பயன் : ஊடல் தீர்ந்து கூடி முயங்கி இன்பம் காண்பர் என்பதாம்.

மேற்கோள் : 'இதனுள் மூத்து வினைபோகிய அம்பி போலப் பருவஞ்சென்ற பிணிக்கப்பட்ட எம்மைப் போலாது, இவள் இப்பருவத்தே இளையளாகற் பாலளோ, மலர்ந்த செவ்வியான் முறைவீயாய்க் கழியாது இடையே எரிந்து கரிவுற்ற பூவினைப் போல' எனத் தலைவனுக்குக் காமக்கிழத்தி கூறியவாறு காண்க" என்ற விளக்கத்துடன், இச்செய்யுளை, 'புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும்' என்னும் சூத்திர உரைக்கண் எடுத்துக்காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொ. பொ. 41.).

பாடபேதம் : மலர்தீர்ந்தனையர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/315&oldid=1698582" இலிருந்து மீள்விக்கப்பட்டது