324. நொந்து அழி அவலம்!

பாடியவர் : கயமனார்.
திணை : குறிஞ்சி.
துறை : 1. தலை மகன் பாங்கற்குச் சொல்லியது. 2. இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியதுமாகும்.

[(து-வி.) 1. தலைமகன், தன் பாங்கனுக்குத் தன் தலைவியைப் பற்றி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது; 2. இடைச்சுரத்தே உடன்போக்கிற் சென்றாளைக் கண்டோர் சொல்லியதும் ஆம்.]


அந்தோ தானே அளியள் தாயே
நொந்தழி அவலமொடு என்ஆ குவள்கொல்
பொன்போல் மேனித் தன்மகள் நயந்தோள்
கோடுமுற்று யானை காடுடன் நிறைதர
செய்பட் டன்ன நோன்காழ் எஃகின் 5
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்
ஆடுபந்து உருட்டுநள் போல ஓடி
அஞ்சில் ஓதி இவளுறும்
பஞ்சி மெல்லடி நடைபயிற் றும்மே.

தெளிவுரை : பொன்னைப் போல ஒளிறும் மேனியை உடையவளான தன் மகளாகிய இவளை, இவள் தாய் மிகவும் விரும்பிப் போற்றுபவள். அதனால், அவள்தான், அந்தோ, தானே மிகவும் இரங்கத் தக்கவள் ஆவாள். அவள்தான் நொந்து அழிகின்ற துயரத்துடனே இனி எவ்வண்ணமாக ஆகுவாளோ? தந்தங்கள் முற்றிய யானைகள் தனது காட்டினிடத்தே நிறையாக வந்து சேர்ந்தன. அதனாலே நெய்யைப் பூசினாற்போல விளங்கும் வலிய காம்பையுடைய வேற்படையினையுடைய செல்வனாகிய தந்தையது, அகற்சியையுடைய மலைப்பகுதியிலே, தான் ஆடுகின்ற பந்தினை உருட்டுபவளைப் போல ஓடியோடி, அழகிய சிலவாகிய கூந்தலையுடையவளான இவள் மிக்க பஞ்சுபோன்ற மெல்லடிகள், நடை பயிற்றா நிற்குமே!

கருத்து : "இத்தகு இளமையோள் எவ்வாறு என்னை விரும்பி உடன் வந்தனளோ அதுதான் ஊழ் கூட்டியது" என்பதாம்.

சொற்பொருள் : அளியள் – அளிக்கத் தகுந்தவள்; இரக்கத்திற்கு உரியவள். நொந்து அழி அவலம் – மனம் நொந்து நொந்து அதனால் உடல் நலமும் அழிபாட்டை உறுகின்றதான மனத்துயரம். பொன்போல் மேனி – பொன்னிறம் பெற்ற மேனி; இது மேனியின் வனப்பை உரைத்தது. நெய்பட்டன்ன – நெய் பூசினாற் போலத் தோன்றும்; சாணையின் மெருகால் அவ்வாறு ஒளியைச் செய்யும். நோன்மை – வலிமை. செல்வத்தந்தை – செல்வனாகிய தந்தை; இது அவள் வளர்ந்த செல்வச் செழுமை கருதியது ஆம். வரைப்பின் – வரைப் பக்கத்தில். பஞ்சி – பஞ்சு. நடைபயிற்றல் – சென்றும் மீளத் திரும்பியுமாக நடந்துகொண்டிருத்தல்.

விளக்கம் : என் காதலியது தன்மை இத்தகையது ஆதலின், அவளை யான் விரும்பியது என் தகுதிக்கு ஏற்புடையதே என்று கூறுகின்றான். தலைவன். காட்டினிடத்தே யானை நிறை புகுந்ததாதலின் அப்பகுதியில் விளையாடும் இவள் அவற்றால் துன்புறுவளோ என்று அஞ்சியதாம். அதற்கு அஞ்சாது பந்தாடலிலேயே கவனமாகவிருக்கும் விளையாட்டுப் பருவத்தாள் அவள் என்பதுமாம். இரண்டாம் துறைக்குப் “பொன் போன்ற மேனி வருந்துமே என்று அன்னை வருந்துவள் ஆதலின் என்னாகுவளோ!" என்று உரைக்கவும். செல்வத் தந்தையின் புதல்வியாவாள், இவ்வாறு ஏதுமற்றாள் போல ஓடுவதேனோ என்று இரங்கி, அந்தோ என்று கண்டார் உரைத்தனர் என்று கொள்ளுக. காட்டு வழியிற் பரற்கற்களில் இவள் எவ்வாறு நடந்து செல்வாளோவென்று இரங்குவார், பஞ்சின் மெல்லடி என்று கூறி வருந்தினர் என்க.

உடன்போக்கிற் செல்லும் தலைவி, நடை மெலிதல் வருத்தம் ஏதுமின்றிச் சென்ற செவ்வியை, 'ஓடுபந்து உருட்டு நள்போல ஓடி, அஞ்சில் ஓதி இவளும், பஞ்சி மெல்லடி நடை பயிற்றும்மே' என வியந்து கூறினர் என்றும் கொள்க.

அவள் தந்தை வீரமறக் குடியினன் என்பதனை 'நெய்பட்டன்ன நோன்காழ் எஃகின் செல்வத் தந்தை' என்பது விளக்கும். ஆகவே, அவன் காவலையும் கடந்து அவள் சென்றனள் என்பது, அவளது கட்டுக் கடந்த பெருங்காதலை உணர்த்தும் என்பதாம்.

பயன் : தலைவன் தலைவியோடு தன்னூர் சென்று மணந்து வாழ்வான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/324&oldid=1698605" இலிருந்து மீள்விக்கப்பட்டது