333. ஒண்சுவர்ப் பல்லி

பாடியவர் : கள்ளிக்குடிப் பூதம் புல்லனார்.
திணை : பாலை.
துறை : பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகித் தலைமகளைத் தோழி வற்புறுத்தது.

[(து-வி.) தலைமகன் வரைபொருள் தேடுதலின் பொருட்டாகப் பிரிந்து போயிருந்த காலத்தில், அந்தப் பிரிவினைத் தாங்காதவளாக வெம்பி வாடுகின்றாள் தலைவி. அவளுக்கு, அவன் குறித்தபடி வருவான் என்று தோழி தேறுதல் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


மழைதொழில் உலந்து மாவிசும்பு உகந்தெனக்
கழைகவின் அழிந்த கல்லதர்ச் சிறுநெறிப்
பரலவல் ஊறல் சிறுநீர் மருங்கின்,
பூநுதல் யானையொடு புலிபொருது உண்ணும்
சுரனிறந்து அரிய என்னார் உரன்இழிந்து, 5
உள்மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி,
அரும்பொருட்கு அகன்ற காதலர் முயக்கெதிர்ந்து
திருந்திழைப் பணைத்தோள் பெறுநர் போலும்;
நீங்குக மாதோ நின் அவலம்—ஓங்குமிசை
உயர்புகழ் நல்லில் ஒண்சுவர்ப் பொருந்தி 10
நயவரு குரல பல்லி,
நள்ளென் யாமத்து உள்ளுதொறும் படுமே.

தெளிவுரை : தோழீ! உயர்வான இடத்திலே, உயர்ந்த புகழையுடைய நல்ல வீட்டிலுள்ள ஒளியுடைய சுவரினிடத்திலே பொருந்தியிருந்து, மீண்டும் கேட்கும் விருப்பம் வருதலைக்கொண்ட குரலையுடைய பல்லியானது, நம் காதலரை இரவின் நடுயாமப்பொழுதிலும் துயில் பெறாதிருந்தேமாய் நாம் நினைக்கும்பொழுதெல்லாம், நல்ல சொல்லைச் சொல்லியபடியிருக்கும். ஆதலினாலே—

மேகம் தன் தொழிலிலே வெறுப்புற்று பெரிய வானத்திடத்தே சென்று போனதாலே வெப்பம் மிகுதியாகிப் போக, அதனாலே மூங்கில்கள் வாடிப்போய் அழகழிந்து கிடக்கும் மலைவழியின் சிறிதான நெறியினிடத்தே, பருக்கைக் கற்கள் மிகுந்துள்ள பள்ளத்திலே ஊறுகின்ற சிறிதளவான நீரினிடத்திலே, பொலிவுபெற்ற நெற்றியையுடைய யானையோடு புலியானது போரிட்டு வென்று அந்நீரை உண்ணும்; அத்தகைய சுரநெறிகளைக் கடந்துசென்று ஈட்டும் பொருள் தமக்கு அருமையானது என்று நினையாராய், வலிமையழிந்து உள்ளே பொருளாசையே மிகுந்துவிட்ட நெஞ்சத்தோடு, தாம் வள்ளன்மை உடையரெனப் புகழ்பெறுதலை அடைதல் வேண்டி, அரியதான பொருளைத் தேடிவரக் கருதிச் சென்றவர் நின் காதலர்! அவர்தாம், நின்னைத் தழுவுதலை எதிர்பார்த்து வந்து, நின் திருந்திய அணிகளையுடைய பணைத்த தோளையும் இன்று வந்து பெறுவர் போலும்! அதனால், பெண்ணே! நின் துயரம் எல்லாம் இப்போதே நீங்குவதாகுக.

கருத்து : ‘பல்லி அவர் வருவாரெனச் சொல்வதால், நின் மனக்கவலை தீர்க' என்பதாம்.

சொற்பொருள் : மழை – மேகம். மாவிசும்பு – பெருவானம்; கரிய வானமும் ஆம். உகத்தல் – உயரப் போதல். கழை – மூங்கில். பரல் – பருக்கைக் கற்கள். அவல் – பள்ளம். உரன் அழிந்து – உறுதி கெட்டு; உறுதி கெட்டு என்றது தலைவியைப் பிரியாது வாழ்தல் என்னும் மனவுறுதியை இழந்து என்றதாம். ஓங்கு மிசை – உயர்ந்த இடம்; சுவரில் உயரமான இடத்தில். நயவரு – நயத்தல் வருதலையுடைய; விரும்பப்படுகின்ற. படுதல் – ஒலித்தல்.

இறைச்சி : பள்ளத்திலே ஊறிக் கிடக்கும் சிறிதளவான நீரையும், புலி யானையோடு போரிட்டாயினும் உண்ணும் என்றது, அவ்வாறே தலைவனும் தான் விரும்பிய பொருளை எதிர்க்கும் பகையெலாம் வென்றேனும் ஈட்டிக் கொணர்வன் என்பதாம்.

விளக்கம் : இதனால், தலைவன், பகை முடித்து வருதலைக் கருதி, வேந்து வினையாக வேற்று நாடு சென்றவன் என்பதும் பொருந்தும். 'உயர்புகழ் நல்லில்' என்றது, தலைவியின் குடும்பப் பெருமிதத்தைக் கூறியதாகும். 'பல்லி படுமே—நீங்குக அவலம்' என்றதனால், பல்லி நல்ல பக்கம் சொல்ல, நினைத்தது நடக்கும் என்பது அந்நாளினும் மக்கள் நம்பிக்கையாயிருந்ததென்பது பெறப்படும். 'கானம் சென்றோர் புனைநலம் வாட்டுநர் அல்லர்; மனைவயிற் பல்லியும் பாங்கொத்து இசைத்தன' எனக் கலியுள்ளும் (கலி. 11) இம்மரபு எடுத்துக் காட்டப்படும்.

பயன் : தலைமகளை ஆறுதல் கூறி அமைதிப்படுத்துதலால், அவளும் ஆறுதலுற்றவளாக அமைதி பேணுவாள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/333&oldid=1698628" இலிருந்து மீள்விக்கப்பட்டது