338. யாங்ஙனம் விடுமோ?

பாடியவர் : மதுரை ஆருலவிய நாட்டு ஆலம் பேரி சாத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : ஒருவழித் தணந்தகாலை, ஆற்றாத தலைமகள், வன்பொறை எதிர் மொழிந்தது.

[(து-வி.) தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகிவரும் காலத்திலே, அலர் எழுதலைக் கண்டு சிலநாள் வருவதை நிறுத்தி விட்டனன். தலைமகள் அதனால் வருந்தி நலியத் தோழி, 'வருந்தாதிரு' என்று தேற்றுகின்றாள். அவளுக்குத் தலைவி, தன் நிலைமைபற்றி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.]


கடுங்கதிர் ஞாயிறு மலைமறைந் தன்றே;
அரும்பு கொடி துமிய ஆழி போழ்ந்தவர்
நெடுந்தேர் இன்னொலி இரவும் தோன்றா;
இறப்பு எவ்வம் நலியும் நின்நிலை;
நிறுத்தல் வேண்டும் என்றி; நிலைப்ப 5
யாங்ஙனம் விடுமோ மற்றே! — மால்கொள
வியலிரும் பரப்பின் இரைஎழுந் தருந்துபு,
புலவுநாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடரைப் பெண்ணை தோடுமடல் ஏறிக்
கொடுவாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய 10
உயிர்செலக் கடைஇப் புணர்துணைப்
பயிர்தல் ஆனா, பைதலம் குருகே!

தெளிவுரை : "கடுங்கதிரையுடைய ஞாயிறும் மேற்றிசை மலைப்பின்னே சென்று மறைந்து விட்டது; அடும்பின் கொடிகள் துண்டித்து வீழும்படியாகச் சக்கரங்கள் அறுத்துக்கொண்டு வரும் அவருடைய நெடிய தேர் வருகின்ற இனிய ஒலியானது இந்த இரவுப்போதிலும் தோன்றவில்லை. அதனாலே, அவரை நினைந்து மிகுதியான துன்பத்தோடு வருந்தும் நின்னுடைய நிலைமையினைப் புறந்தோன்றி அலராகாதபடி பொறுத்து நிறுத்தி வைத்தல் வேண்டும்" என்று சொல்லுகின்றாய். தோழீ! பரந்த கழிக்கானற் பரப்பிலே இரையினை அருந்திவிட்டு, நேரமானது இருண்டு மயக்கங்கொள்ளவும், புலவு நாற்றத்தையுடைய சிறு குடியிருப்பின் மன்றத்திடத்தே வளர்ந்துள்ளதும், பருத்த அடியையுடையதுமான பனையின் ஓலையிடத்து மட்டையிடத்தே ஏறி இருந்தவாறு, வளைந்த வாயினையுடைய தன்னுடைய பேடையைக் கூட்டிடத்தே வருமாறு உயிரே போகும்படியாகக் கூவியதாக, அது வந்து சேர்ந்து, அதனோடு கூடிக்கலந்து இன்பமடையும் வரைக்கும் அழைத்துக்கொண்டே இருக்கும், பிரிவுத்துயரைக் கொண்ட நாரையினைப் பார். யான் எவ்வாறு எங்ஙனம் என் துயரத்தை மறந்து கைவிடுவேனோ? அதுதான் என்னால் இயலாததாகின்றதே என்பதாம்.

கருத்து : 'என்னால் அவரைக் காணாது இருக்க இயலவில்லையே!' என்று வருந்திக் கூறியதாம்.

சொற்பொருள் : கடுங்கதிர் ஞாயிறு – கடுமையான வெப்பக் கதிர்களையுடைய ஞாயிறு அடும்பு – அடும்பின் கொடி; குதிரைக் குளம்புபோல பிளந்த இலையுடைய கொடிவகை இது. தேர் இன் ஒலி; இனிமை, தனக்கு அதனால் ஏற்படும் உணர்வு. இறப்பு – அளவு கடந்து. மால்கொள் – மயக்கம் கொள்ள; பொழுது மயங்க எனினும் ஆம். ஆடு அரை – பருத்த அடிமரம். அசைந்தாடும் அடிமரம் எனினும் ஆம், இது பனையின் இயல்பாதலால். தோடு மடல் – தோடாகிய மடல்; அதனிடத்தே நாரை இருந்தபடி என்று கொள்க. கொடுவாய் – வளைந்த வாய். கடைஇ – கூப்பிட்டு. பயிர்தல் – அழைத்தல். பைதல் – காமத்துன்பம். அம் – அழகிய; 'அம் குருகு' என்றது. அது, தன் காதலியை ஆசையோடு விரும்பிக் கூவி அழைத்துக் சேர்ந்து மகிழ்ந்து இன்புறுத்தியதனால்.

விளக்கம் : கடற்குருகும் தன் பேடைபால் அன்பு காட்டிக் கூடி மகிழும் செவ்வியுடையதாயிருப்ப, நம் தலைவரோ நம்மை அறவே மறந்தனர் என்பதாம். 'நெடுந்தேர் இன்னொலி' தோன்றா என்றதால், அவன் மணம்வேட்டு ஊரறிய வருவதை எதிர்பார்த்து உரைத்ததும் ஆம்; அப்போது அடும்பு கொடி துமிய ஆழி போழ்வது போல அலர்வாய்ப் பெண்டிர் பேச்சடங்கி ஒதுங்க, அவன் வெளிப்படையாகவே வருவான் என்று கொள்க.

பயன் : தன்னுடைய துயரம் அவனை அடைந்தன்றித் தீராது என்று, தன் நிலைமையைத் தோழி உணருமாறு விளக்கிக் கூறியதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/338&oldid=1698642" இலிருந்து மீள்விக்கப்பட்டது