342. கண் கோட்டியும் தேரலள்!

பாடியவர் : மோசி கீரனார்.
திணை : நெய்தல்.
துறை : (1) குறை நேர்ந்த தோழி, தலைமகளை முகம்புக்க தன் சொற்கேளாது விடலின், இறப்ப ஆற்றானாயினான் என உணர்ந்து ஆற்றாளாய்த் தன்னுள்ளே சொல்லியது; (2) தலைமகனுக்குக் குறைநேர்ந்த தோழி, தலைமகளை முகம் புக்கலளாய், ஆற்றாது தன்னுள்ளே சொல்லியது.

[(து-வி.) தலைவனுக்கு, அவன் குறைதீர்க்கத் தலைவியிடம் செல்லும் தூதாகச் செல்கின்றாள் தோழி. செய்தியைக் கண்ணாலே பலவாறாகக் குறிப்பித்துக் காட்டியும், தலைவி முகத்தில் ஏதும் இசைவுக்குறி காட்டாதாளாக, அவன் நிலையாதாகுமோ என்று நினைத்து வருந்துவதாக அமைந்த செய்யுள் இது; (2) தலைமகன் விருப்பத்தைக் குறிப்பால் தலைவிக்குப் புலப்படுத்திய தோழி, அவள் முகக்குறிப்பிலே அதற்கு இசைவாக எதுவும் காணாதவளாக நொந்து கூறியதாகவும் கொள்ளலாம்.]


மாவென மதித்து மடலூர்ந் தாங்கு
மதிலென மதித்து வெண்தேர் ஏறி,
என்வாய் நின்மொழி மாட்டேன் நின்வயின்
சேரி சேரா வருவோர்க் கென்றும்
அருளல் வேண்டும் அன்புடை யோய்! என, 5
கண்ணினி தாகத் கோட்டியும் தேரலள்;


யானே—எல்வளை! யாத்த கானல்
வண்டுண் நறுவீ நுண்ணிதின் வரித்த
சென்னிச் சேவடி சேர்த்தின்,
என்னெனப் படுமோ?' என்றலும் உண்டே. 10

தெளிவுரை : "அன்பினை உடையவளே! பனங்கருக்குக் குதிரையினைத் தான் உவந்து ஏறுதற்குரிய குதிரையெனக் கருதி மடலூர்ந்து வந்தான்; அவ்விடத்தே இதுவோர் காவற்கோட்டை மதிலேபோலும் என்று வெளிதான பேய்த்தேரினைச் சென்றும் மோதிப் பார்த்தான்; இப்படி வருந்துகின்றவருக்கு என் வாயாலே நின்னுடைய பேச்சு இன்னதுதான் என்று நானே கூறமாட்டேன். நின்னை விரும்பியவராக, நம் சேரியிடத்துக்கு வருதலைக் குறித்தவராக வருகின்ற அவருக்கு, நாம் எப்போதும் அருள்செய்தல் வேண்டும்" என்று, கண்ணினாலேயே இனிதாகச் சுழித்துக் குறிப்பாலே பலவாறு உணர்த்திக் காட்டினேன்; தலைவிதான், அது கண்டும், எந்த முடிவையும் எனக்குத் தெரிவித்தாள் அல்லள். யான்தான். இனி, ஒளியுள்ள சங்கினம் ஊர்தலாலே வரிகளையிட்டுள்ள கானற்சோலையிலே, வண்டுகள் உண்ணும் நறுமலர்கள் உதிர்ந்து நுட்பமாக அழகு செய்திருக்கும் அவ்விடத்தே, என் தலையை அவன் சிவந்த அடிகளிலே சேர்த்துப் பணிந்தால், 'இதுதான் என்னவோ' என்று கேட்கப் படுவேனோ' என்றவொரு கேள்வியும் உண்டாதல் கூடுமே! யான் தான் இனி என்ன செய்வேனோ?

கருத்து : 'தலைவன் நிலை இனி யாதாகுமோ?' என்பதாம்.

சொற்பொருள் : மா – குதிரை. மடல் – பனங்கருக்கு மட்டையாலாகிய குதிரைமேல் ஏறிவருதலான ஒரு செயல். வெண்தேர் – வெளிய பேய்த்தேர். நின் மொழி மாட்டேன் – நின் பேச்சைச் சொல்ல மாட்டேனாய். சேரா – சேர். கண்கோட்டல் –கண்ணை இடுக்கிக் காட்டி ஒன்றைத் தெரிவிக்க முற்படுதல். எல்வளை – ஒளியுள்ள சங்கினம். யாத்த – ஊர்தலாலே கோடிட்டுப் போந்த. கானல் – கடற்கானல் மணலிடம். வீ – மலர்.

விளக்கம் : மாவென மதித்து மடலூர்தலை மேற் கொள்ளலும், மதிலென மதித்து வெண்தேர் ஏறலும், அவன், காம நினைவாலே கருத்தழிந்து பித்தாயின் நிலையைக் குறிப்பதாகும். இந்நிலையினனாகியவன், இனி என்னென்ன அறிவிழந்த செயற்களைச் செய்வானோ என்று நினைந்து நொந்ததாம். இது, தன் குறிப்பைத் தலைவி உணராளாயிருந்து விட்டதனை நினைந்து தோழி தனக்குள் கூறிக்கொள்வதாகக் கொள்க. 'என் வாய் நின் மொழி மாட்டேன்' என்றது, தலைவி வேறு பலருடன் சேர்ந்திருந்த காரணத்தால், தலைவனின் குறையை வாயாற் சொல்லமுடியாது போயினேன் என்பதாம். 'எல்வளை' என்பதைத் தலைவிக்கு ஆக்கி, 'எல்வளை தேரலள்' எனக் கூட்டியும் பொருள்கொள்ளலாம். 'வண்டுண் நறுவீ நுண்ணி தின் வரித்த' என்றது, அவ்வாறே தலைவனால் நலனுண்ணப் பட்டுக் கிடக்கும் தலைவியைக் குறிப்பால் உணர்த்துவதும் ஆகும். 'சென்னி சேவடி சேர்த்தின்' என்றது, தான் கொண்ட முயற்சி தோற்றமைக்கு இரங்கி அவனிடம் பொறுத்தருள வேண்டுதல். 'என்னெனப்படுமோ என்றலும் உண்டே'— என்றது, 'என்னதான் தலைவிக்கு நிகழ்ந்ததோவென்று மயங்கித், தான் வீழ்ந்து படுதலான ஒரு நிலைமையும் உளவாகலாமே' எனக் கலங்கியதாம்.

பேய்த்தேர் வெயிலில் நீர்நிலைபோலக் காணப்படும் என்பதைப் பலரும் கூறுவர்; 'அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ' என்பது அகம் (395).

பாடபேதங்கள் : அறலென மதித்து; சேரிற் சேரா; கண்ணினிதாகக் காட்டியும்; என்னெனப் படுங்கொல்.

பயன் : தோழியின் இந்த மனத்துயரையும், தலைவனின் நிலையையும் அறிதலுறும் தலைவி, தலைவனுக்கு இசைபவளாகி, அவன் குறைதீர்த்துத் தானும் இன்புறுவாளாவள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/342&oldid=1698658" இலிருந்து மீள்விக்கப்பட்டது