345. தெளிவே தேய்க!

பாடியவர் : நம்பி குட்டுவனார்.
திணை : நெய்தல்.
துறை : தெளிவிடை விலக்கியது.

[(து-வி.) வரைந்து கொள்ளாது காலம் தாழ்க்கின்ற காதலன் நிலையை உளங்கொண்டு, இடையிடை நேரும் சிறுசிறு பிரிவுக்கும் ஆற்றாதவளான தலைவி கலங்குகின்றாள். அவளைத் தெளிவிக்கக் கருதித், தலைவன், 'யான் விரைய வந்து வரைவேன்; பொறுத்திரு' என்கின்றான். அது கேட்ட தோழி, அவனை அவ்வாறு கூறுதல் வேண்டாவென விலக்கிக் கூறுவதுபோல் அமைந்த செய்யுள் இது.]


கானற் கண்டல் கழன்றுகு பைங்காய்
நீல்நிற இருங்கழி உட்பட வீழ்ந்தென,
உறுகால் தூக்கத் தூங்கி ஆம்பல்,
சிறுவெண் காக்கை ஆவித் தன்ன,
வெளிய விரியும் துறைவ! என்றும், 5
அளிய பெரிய கேண்மை நும்போல்,
சால்பு எதிர்கொண்ட செம்மை யோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட,
நீடின்று விரும்பார் ஆயின்,
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே! 10

தெளிவுரை : மிகுதியான காற்று எழுந்து மோதுதலாலே, கடற்கரைச் சோலையிலேயுள்ள கண்டல் மரத்திலிருந்து கழன்று விழுகின்றன பசுமையான காய்கள்; நீல நிறத்தையுடைய கருமையான கழியிடத்தே அவை வீழ்ந்து உள்ளேயும் போகின்றன. அவை வீழ்ந்ததாலே, ஆம்பலின் அரும்பானது சாய்ந்து, சிறிய வெண்ணிறமுள்ள நீர்க்காக்கை வாய்திறந்து கொட்டாவி விட்டாற்போல வெளியவாய் மலர்கின்றன. அத்தகைய துறைக்கு உரியோனே! எக்காலத்தினும், கருணையே செய்தலையுடைய பெரிய கேண்மையினைப் பாராட்டும் நும்மைப் போலச், சால்பினை எதிரேற்றுக் கொண்ட செம்மை உடையவர்களும், தெளியாத நெஞ்சத்துடனே செயலழிந்து வாடும் படியாக, நெடிது காலம் விரும்பாதிருப்பார் ஆயினால், அதன் பின்னும், அருள்தலை எதிர்பார்த்து உயிர்வாழ்ந்திருத்தல்தான் எதற்காகவோ? ஆகவே, நின் தெளிவுப் பேச்சுக்களும், இனி, அழிந்து இல்லாதேயே போவனவாக என்பதாம்.

கருத்து : ‘நின்னை நம்பி உறவாடிய எமக்கு வருத்தமும் சாவுமே பரிசுபோலும்' என்று வருந்தியது இது.

சொற்பொருள் : கானல் – கடற்கானல். கண்டல் – கடற்கரைப் பாங்கிலுள்ள ஒருவகை மரம், உட்பட – உள்ளே சென்றுமறையுமாறு. உறுகால் – எழுந்த காற்று. ஆவித்தன்ன – கொட்டாவி விட்டாற் போல. சால்பு – சான்றாண்மைப்பண்பு. எதிர்கொண்ட – எதிரேற்றுக் கொண்ட. கையறுதல் – செயலழிதல்; கை – முயற்சி; செயல். அறுதல் – அழிதல். தெளிவு – தெளிவிக்கும் நிலை.

உள்ளுறை : மலரும் பருவத்தை அடையாத பொதியரும்பும், கண்டற்காய் வீழ்ந்ததால் வருத்தமுற்று மலரும். அதுபோல அலருரைக்கும் பெண்டிரின் தூற்றுதலால், இதுகாறும் தன் உள்ளத்துயரை மறைத்து வாழ்ந்த இவள், இனி வாய்திறந்தே புலம்புதலும் கூடும் என்பதாம்.

விளக்கம் : காற்றால் உதிர்க்கப் பெற்ற கண்டற்காய் ஆம்பல் அரும்பை மலர்வித்துப் பின்னே உட்சென்று கழிச்சேற்றுள் மறையும் என்பது மிக நல்ல உவமையாகும். 'பைங்காய்' என்றது, அதுவும் வீழும் பருவத்துக்கு முன்னே காற்றால் அலைப்புண்டு வீழ்ந்தது என்பதாம். 'பசுங்காய்' தாயைக் குறித்ததாகக் கொண்டால், அலராலே சினமுற்று வீடுவந்த அன்னை, இவள் உள்ளடங்கிய காமநோயை வலிந்து வெளித்தோன்றச் செய்வாள் என்றலும் ஆம்.

இனிக், காற்றால் வீழ்ந்த கண்டற்காய் ஆம்பல் முகையை மலரச் செய்தாற்போல, அலராலே எழுந்த தூற்றுதல் தலைவன் உள்ளத்தையும் தாக்கி விரைவில் மணம்புரிந்து கொள்ளும்படி செய்யும் என்பதுமாம். 'அளிய பெரிய கேண்மை நும்போல' என்றது எள்ளற் குறிப்பு.

மேற்கோள் : 'இஃது ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேனென்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தோழி தெளிவிடை விலக்கியது' என்று குறிப்பிட்டு, இச்செய்யுளை நாற்றமும் தோற்றமும் (தொல் 114) என்னும் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திர உரையுள், ஆசிரியர் நச்சினார்க்கினியர் காட்டுவர்

பயன் : தெளிவித்தால் ஆவதென்ன? இவளை விரைந்து மணங்கொள்ளுதலே செய்யத்தக்கதான ஒரு செயலாகும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/345&oldid=1698661" இலிருந்து மீள்விக்கப்பட்டது