357. கெட அறியாதே!

பாடியவர் : குறமகள் குறியெயினி.
திணை : குறிஞ்சி.
துறை : (1) தலைமகன் வரைவு நீடியவிடத்து ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது; (2) மனைமருண்டு வேறுபாடாயினாய் என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியதூஉமாம்.

[(து-வி.) (1) வரைந்து வருதல் குறித்த காலம் கழிந்தும், அவன் வரானாக, அதனால் தலைவிக்கு யாதாகுமோ என்று வருந்தும் தோழிக்குத், தலைவி, தான் அவன் வரும்வரை துயர் பொறுத்து இருப்பதாகக் கூறுவதுபோல் அமைந்த செய்யுள் இது. (2) மனைக்கண் இருந்தபடியே பிரிவாற்றாமையால் வேறு பட்டாய் என்ற தோழிக்கு, அதனை மறுத்துத் தலைவி, தன் உறுதி கூறுவதாக அமைந்தது எனவும் கொள்ளலாம்.]


நின் குறிப்பு, எவனோ?—தோழி!—என்குறிப்பு
என்னொடு நிலையா தாயினும், என்றும்
நெஞ்சு வடுப்படுத்துக் கெடவறி யாதே—
சேணுறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்,
பெயலுழந் துலறிப் மணிப்பொறிக் குடுமிப் 5
பீலி மஞ்ஞை ஆலும் சோலை,
அங்கண் அறைய அகல்வாய்ப் பைஞ்சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி
நீரலைக் கலைஇய கண்ணிச்
சாரல் நாடனொடு ஆடிய நாளே. 10

தெளிவுரை : தோழீ! என்னுடைய நோக்கமானது என்னோடு நிலையாக நிலைத்திருக்கமாட்டாதாயினும், என்றைக்கும், நெஞ்சத்தைப் புண்படுத்திக் கெட்டொழிவதனை அறியாததாயும் இரா நின்றது. கெடுந்தொலைவுக்கு உயர்ந்து தோன்றும் மலையின் பக்கத்திலே மழையிலே நனைந்து சிலிர்த்த நீலமணி போன்ற புள்ளிகளையுடைய குடுமியையும், தோகையையும் உடைய மயில்கள் ஆடியபடியிருக்கும் சோலையிடத்தே, அவ்விடத்துள்ள பாறையிடத்தேயுள்ள, அகன்ற வாயைக்கொண்ட பசிய சுனையிலேயுள்ள, மையுண்ட கண்களை ஒப்பான குவளை மலர்களைக் கொய்தபடி, அவனுடன் நான் சுனையாடி மகிழ்ந்த போது, அந்நீர் அலைத்தலானே கலைந்துபோன தலைக் கண்ணியையுடைய அச்சாரல் நாடனோடு, ஆடிய அந்த இன்பமான நாளினை என்றுமே மறக்கமுடியுமோ? நின் கருத்துத்தான் யாதோ? கூறுவாயாக, என்பதாம்.

கருத்து : அவனை மறத்ததற்கு அரிது என்பதாம்.

சொற்பொருள் : குறிப்பு – நோக்கம்; கருத்து. வடுப்படுத்தல் – புண்படுத்தல். சேண்உறத் – நெடுந்தொலைவு உயர்ந்து. கவாஅன் – பக்கமலை. பெயல் – மழை. குடுமி – தலைமேலுள்ளது. ஆலும் – ஆடும். அம்கண் – அழகான இடம். அறை – பாறை, உண்கண் – மையுண்ட கண். நீலம் – குவளை.

விளக்கம் : சாரல் நாடனோடு மகிழ்ந்து சுனையாடி இன்புற்ற அந்த நினைவை என் நெஞ்சம் என்றும் மறப்பதில்லையாதலினாலே, அந்நினைவையே பற்றிக்கொண்டு, அவர் வரும் வரை அவர்பற்றிய நினைவினாலேயே நம்பிக்கையினாலேயே உயிர்தரித்திருப்பேன் என்பதாம். 'நின் குறிப்பு எவனோ?' என்றது, நீதான் அவன்மேல் யாதும் ஐயுறவு உடையையோ?' என்று அவள் கருத்தை வினவியதாம். 'என்னோடு நிலையாது ஆயினும்' என்றது. அதுதான் அவனையே நினைந்து நினைந்து ஆழ்ந்திருக்கும் என்பதனால் ஆம். 'பீலிமஞ்ஞை ஆலும் சோலை' என்றது, இயற்கையாக எழும் உணர்வுக்கிளர்ச்சியைக் காட்டுதற்காம். 'உண்கண் ஒப்பின் நீலம்' என்றது, நீலத்தைக் கண்ணுக்கு உவமையாக்கும் மரபை மாற்றிக் கூறியதாம். 'நீர் அலைக் கலைஇய கண்ணி'—'நீர் அலைத்தலால் கலைந்த கண்ணி' என்றும் நீர் அலையால் கலைந்த கண்ணி என்றும் கொள்க.

இறைச்சி : மழையால் நனைந்த மயிலானது சோலையிலே ஆடிக்களிக்கும் என்றது, அவனால் தலையளி செய்யப் பெற்ற யான் அந்த இன்பநினைவிலேயே களித்திருப்பேன் என்பதாம்.

பயன் : 'தலைமகளின் மனவுறுதியறிந்த தோழியும், தன் கவலையை மறந்தாளாக நிம்மதி பெறுவாள்' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/357&oldid=1698676" இலிருந்து மீள்விக்கப்பட்டது