360. சிறக்க நின் பரத்தை!

பாடியவர் : ஓரம் போகியார்.
திணை : மருதம்.
துறை : (1) பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப்பறிந்து வாயில் மறுத்தது; (2) தலைமகள் ஊடிச் சொல்லியதும் ஆம்.

[(து-வி.) (1) தலைமகன், தன்னைப் பிரிந்து கைவிட்டுப் பரத்தையின் உறவிலே களித்துக் கிடந்தான் என்பதனால் தலைவிக்கு அவன்மேல் வருத்தமும் சினமும் ஏற்பட்டன. இவ்வேளையில் ஒருநாள் அவன் மீண்டும் தலைவியின் உறவை நாடித் தன்வீட்டிற்கு வருகின்றான். அப்போது தலைவிமுகங்கொடுத்துப் பேசாது ஒதுங்கி விடுகின்றாள். அவள் குறிப்பறிந்த தோழி தலைவனிடம் கூறுவதாக அமைந்த செய்யுள் இது. (2) தலைவியே தன் ஊடற்சினம் வெளிப்படச் சொல்லியதாகவும் கொள்ளலாம்.]


முழவுமுகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவொழி களத்த பாவை போல
நெருநைப் புணர்ந்தோர் புதுநலம் வௌவி
இன்றுதரு மகளிர் மென்தோள் பெறீஇயர்
சென்றீ—பெரும!—சிறக்க நின் பரத்தை! 5
பல்லோர் பழித்தல் நாணி, வல்லே
காழின் குத்திக் கசித்தவர் அலைப்பக்
கையிடை வை த்தது மெய்யிடைத் திமிரும்


முனியுடைக் கவளம் போல நனிபெரிது
உற்றநின் விழுமம் உவப்பென் 10
மற்றுங் கூடும் மனைமடி துயிலே.

தெளிவுரை : பெருமானே! பலரும் பழித்துப் பேசுதற்கு நாணங்கொண்டனையாய், வன்மையாக இரும்பு முள்ளாலே குத்திப் பாகர்கள் வருத்துதலினாலே துதிக்கையிடத்தே வைத்த கவளத்தினை உண்ணாது, உடலின் மேல் எல்லாம் வாரி இறைக்கின்ற, சினத்துக்கு உட்பட்ட யானைக்கன்றது கவளத்தைப் போல, மிகப் பெரிதும் நீயும் அடைந்துள்ள சீர்மையைக்கண்டு யானும் உவப்படைவேன். மனையிடத்தே வந்து துயில்கின்ற இன்பமானது பிறிதொரு பொழுதும் நினக்குக் கைகூடுவதேயாகும். அதனாலே, முழவின் கண்ணிடத்தே வைத்த மார்ச்சனையானது காய்ந்து போகும்படியாக, முறையோடு கூத்தினை ஆடிய விழாவானது ஒழிந்த களத்திடத்தேயுள்ள ஒரு பாவையைப் போல, நேற்றுப்போதிலே நின்னைச் சேர்ந்தோரின் புதுவதான அழகு நலத்தையெல்லாம் கொள்ளை கொண்டாயாய், இற்றை நாளிலே பாணனால் கொண்டுதரப்படும் மகளிரது மென்மையான தோள்நலத்தைப் பெறும் பொருட்டாக, நீதான் விரைந்து போவாயாக! நின் பரத்தையும் நின்னாலே நாளும் இன்பம் பெற்றுச் சிறப்பாளாக!

கருத்து : 'நின் பரத்தையிடமே செல்க' என்பதாம்.

சொற்பொருள் : முழவு முகம் – முழவின்கண் அடித்து முழக்கும் கண் பகுதி. புலர்ந்து – காய்ந்து; காய்தல் முழக்குதலால். பாவை – கூத்தாடிய பெண். நெருநை – நேற்று. வௌவி – கவர்ந்து கொண்டு. சென்றீ – சென்று வருக. வல்லே – வலிமையாக. காழ் – தோட்டிமுள். கசிந்தவர் – பாகர். கலைப்ப – வருத்த. முனி – யானைக்கன்று; முனியுடைக் கவளம் எனக்கொண்டு சினத்துக்குட்பட்ட கவளம் எனவும் கொள்ளலாம். மனைமடி துயில் – மனைக்கண் பெறுகின்ற இனிய உறக்கம்; இது மனைவியோடு கலந்து மகிழும் இன்துயிலாகும்.

விளக்கம் : அவன் மனை வரவும்கூடப் பல்லோர் பழித்தற்கு நாணியதனாலே நிதழ்ந்ததன்றி, உண்மையான அன்பினாலே ஏற்பட்டதன்று என்று இடித்துக்கூறிப் பழிக்கின்றனள். பாகர் குத்துதலாலே வருத்தமுற்ற யானைக்கன்று உண்ண எடுத்த கவளத்தை உண்ணாது தன் மேலெல்லாம் வாரி இறைத்தாற் போல, நீயும் ஊரார் பழியாலே புண்பட்டு, நின் பாணனாலே தரப்பட்ட பரத்தையை நுகர்தலன்றிக் கைவிட்டனையாய் இங்கே வந்து வீணாகப் பொழுதைக் கழிக்கின்றனை என்று பழிப்பாள். 'உள்ள நின் விழுமம் உவப்பென்' என்கின்றனள். உரை இருதுறைகட்கும் பொருந்தும்.

பாடபேதங்கள் : களத்திற்; பாவை; கையிடைக் கவளம்; கூடுமால் மனைமடி துயிலே.

பயன் : இதனாலே தன் குறையுணர்ந்து நாணிய தலைவன், தலைவிக்கு இதமான பலவும் நயந்து கூறி, அவள் சினந்தணித்துக் கூடி மகிழ்வளிப்பான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/360&oldid=1698678" இலிருந்து மீள்விக்கப்பட்டது