362. நீ விளையாடுக!

பாடியவர் : மதுரை மருதனிள நாகனார்.
திணை : பாலை.
துறை : உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது.

[(து-வி.) தலைவன், தலைவியை, அவள் தமரறியாமல், தன்னூர்க்கு அழைத்துச் செல்லுகின்றான். இடைவழியில், அவள் சோர்வு கண்டு, அவளைத் தேற்றுவானாகச் சொல்லுகின்ற முறையிலே அமைந்த செய்யுள் இது.]


வினையமை பாவையின் இயலி, நுந்தை
மனைவரை இறந்து வந்தனை; ஆயின்,
தலைநாட்டு எதிரிய தண்பெயல் எழிலி
அணிமிகு கானத் தகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டும், கொண்டும் 5
நீவிளை யாடுக சிறிதே; யானே,
மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி,
அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்;
நுமர்வரின், மறைகுவென்—மாஅ யோளே! 10

தெளிவுரை : மாமை நிறத்தை உடையவளே! வினைத்திறன் அமைந்த பாவைபோல் இயங்கினையாய், நின் தந்தையின் மனையின் எல்லையைக் கடந்து, என்னோடும் வந்தனை. ஆதலாலே, முதற்பெயலைப் பெய்யத் தலைப்பட்ட தண்ணிய பெயலையுடைய மேகமானது பெய்தலினாலே, அழகுமிகுந்த காட்டினது அகன்ற பக்கங்களிலே பரந்துள்ள, விரைந்த செலவையுடைய சிவந்த தம்பலப் பூச்சிகளைப் பார்த்தும், பிடித்துக் கொண்டும், நீதான் சிறிதுபொழுது விளையாடியிருப்பாயாக. யானோவென்றால், இளங்களிறு உரித்துவிட்ட பருத்த அடியையுடைய வேங்கை மரத்தின், மணற்பரப்பினையுடைய பக்கத்தின், பெரிய பின்பக்கமாக மறைந்திருந்து, எவராயினும் போரிடுதற்கு வருவாராயின் அஞ்சாதே போரிட்டு அவரை ஓடிப்போகச் செய்வேன்; நின் சுற்றத்தார் தேடி வந்தனராயின் அம்மரத்தின் பின்னேயே நன்றாக மறைந்து கொள்வேன்; காண்பாயாக.

கருத்து : 'நின்பால் அன்பும், நின்னைக் காக்கும் வலிமையும் உடையவன்' என்றனனாம்.

சொற்பொருள் : வினை – கைவினைத்திறம். பாவை –எந்திரப் பாவை. இயலி – நடந்து வந்து, மனைவரை – வீட்டின் எல்லை. இறந்து – கடந்து, தலைநாள் – முதல்நாள். அணி – அழகு. செம்மூதாய் – தம்பலப் பூச்சிகள். கண்டும் – அது ஓடும் அழகினைக் கண்டும்; கொண்டும் – கையிற் பற்றி அதன் மென்மையும் அழகும் வியந்தும். மழகளிறு – இளம் களிறு. உரிஞ்சிய – உரிந்திட்ட. மணல் இடு மருங்கின் – மணல் இடப்பெற்றுள்ள பக்கத்திலே. இரும்புறம் – பெரிய பின்புறம். மாஅயோள் – மாமை நிறத்தவள்; மாயவள் போன்றாளும் ஆம்.

விளக்கம் : 'எந்திரப் பொற்பாவை போல இயங்கி' என்றது, அவள்தான் தன் அறிவினால் எதனையும் ஆராயாமல் காதல் வேகத்தாலே இயக்கப்படும் பொம்மைபோல இயங்கி என்பதாம். தம்பலப் பூச்சிகளைப் பற்றி விளையாடுதல் சிறுமியர் மரபு. இதனால் கார்காலம் வந்தது என்பதையும், அது மணவினைக்கான காலமாகும் என்பதனையும் உணர்த்தினன். 'அமர்வரின்' – போர் வந்தால் என்றது, ஆறலைக்கள்வரோ பிற கொடியரோ போருக்கு வந்தால் என்றதாம். 'பெயர்க்குவென்' என்றது, அவரை ஓட்டுவேன் என்று ஆண்மை தோன்றக் கூறியதாம். நுமர் வரின் மறைகுவன் என்றது, அவருக்கு ஊறுவிளைவிக்கும் கொடுமை தன்பால் இல்லை என உரிமை காட்டிக் கூறியதாம். இதனால் அவன் வல்லமையும் அன்பும் காணும் தலைவி, தன் மயக்கம் நீங்கி, மகிழ்வுடன் அவனைப் பின்பற்றிச் செல்வாளாவள் என்பதாம்.

இறைச்சி : வேங்கையானது, மழகளிறு தன் பராரையினை உருஞ்சிய பின்னும், தன் நிலையிற் குன்றாது நின்று செழித்திருக்குமாறு போலத் தானும் எத்துயர் வரினும் குன்றாது, அவளைக் காத்து நிற்கும் வலிமையாளன் என்பதாம்.

பயன் : அவள் அச்சமும் சோர்வும் நீங்கியவளாக அவனுடன் அவனூர் செல்வாள் என்பதாம்.

பாடபேதம் : அகன்றலைப் பறந்த.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/362&oldid=1698680" இலிருந்து மீள்விக்கப்பட்டது