364. பல்நாள் வாழலேன்!

பாடியவர் : கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்.
திணை : முல்லை.
துறை : தலைமகள் வரைவிடை மெலிந்தது.

[(து-வி.) தலைமகளை வரைவிடை வைத்துப் பிரிந்து சென்றான் தலைமகன். அவன் மீண்டுவருவதாகக் குறித்துச் சென்ற பருவம் வந்து கழிந்தும், அவனை வரக்காணாததால் தலைவியின் துயரம் அளவு கடந்து பெரிதாகின்றது. அவன் தன் நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்
மயங்கிருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி
ஆர்கலி வானம் நீர்பொதிந் தியங்கப்
பனியின் வாடையொடு முனிவுவந் திறுப்ப
இன்ன சில்நாள் கழியின், பல்நாள் 5
வாழலென் வாழி—தோழி!—ஊழின்
உருமிசை அறியாச் சிறுசெந் நாவின்
ஈர்மணி இன்குரல் ஊர்நணி இயம்பப்
பல்லா தந்த கல்லாக் கோவலர்
கொன்றையந் தீங்குழல் மன்றுதோறு இயம்ப, 10
உயிர்செலத் துனைதரும் மாலை,
செயிர்தீர் மாரியொடு ஒருங்குதலை வரினே!

தெளிவுரை : தோழீ! நெடுங்காலம் நீதான் வாழ்வாயாக. தலைவர் வருவேம் என்று சொல்லிய பருவமோ கழிந்துவிட்டது. பகற்போதும் இருள்மிகுந்த நடுயாமத்துக் காரிருளோடு சேர்ந்து நிரம்பிய இடிமுழக்கையுடைய மேகங்கள் நீர்நிறைந்து வானத்தே இயங்க, வாடைக்காற்றோடு பனிக்குள்ள சினமெல்லாம் என்மீது வந்து மோதுகின்றது. இப்படிச் சிலநாட்கள் கழிந்ததானால்—

முறையே இடிமுழக்கத்தை அறியாத, சிறிய செவ்விய நாவினையுடைய மணியின் குளிர்ந்த இன்னோசை, ஊரிடத்தே புகுந்து ஒலிக்கும்படியாகப் பலவான ஆநிரைகளைச் செலுத்தி வந்த, பிற தொழிலைக் கல்லாத கோவலர்களின், கொன்றைப் பழத்தாலே செய்துள்ள அழகான இனிய புல்லாங்குழலின் ஒலியும் மன்றிடந்தோறும் ஒலியா நிற்கும். என் உயிர் செல்லும்படியாக விரைந்துவருகின்ற மாலைப் பொழுதானது, குற்றந்தீர்ந்த மாரியுடனேயும் சேர்ந்து ஒன்றுகூடி வருமானால், அப்பாலும் பல நாட்கள், நான் உயிர் வாழ்ந்திருக்கவே மாட்டேன், காண்பாயாக!

கருத்து : 'இனிச் சாவுதான் எனக்கு அமைதி தரும்' என்பதாம்.

சொற்பொருள் : எல்லையும் – பகலும். மங்குல் – காரிருள். முனிவு – சினம். இறுப்ப – வந்து தங்க. ஊழின் – முறையாக. உரும் – இடி. ஈர்மணி – குளிர்ந்த ஒலிசெய்யும் மணி. இயம்ப – எழுந்து ஒலிக்க. கல்லா – கல்லாத; வேறு ஒரு தொழிலையும் கற்றிலாத. மன்று – ஊர்மன்று; வந்த மாடுகளை ஒருங்கு சேர்த்துச் சரிபார்க்கும் மந்தைவெளி. துனைதரும் – விரையும். செயிர் – குற்றம்.

விளக்கம் : 'கிடங்கில்' என்பது இந்நாளையத் திண்டிவனம் பக்கத்திருந்த ஓர் ஊர் என்பர் ஔவை. 'உருமிசை அறியாச் சிறு செந்நாவின் ஈர்மணி' என்றது, அது தான் இனிதாக ஒலிப்பதன்றி, எக்காலத்து உருமிசைபோலக் (இடியொலி போல) கடிதாக ஒலித்தல் இல்லை என்பதற்காம். 'செயிர்தீர் மாரி' என்றது, அது தன் காலத்தே பொய்க்காதாய் வந்து பெய்தலால். சொன்ன காலம் கழிந்தது; மாலையும் வாடையும் வந்து என்னை வருத்திக் கொல்லும் என்றால் அவற்றுக்குத் தப்பி இனியும் பல நாட்கள் உயிர்வாழ இயலாது என்பது தலைவியின் துயரக் குரலாகும். 'பல்லான்' என்பது பசுவினப் பெருக்கையும், 'மன்றுதோறிசைப்ப' என்றது, அவை கூடும் மன்றுகளின் பெருக்கத்தையும் காட்டுவதாம். 'கல்லாக் கோவலர்' என்பது, பிரிந்தாரைத் தம் குழலொலி வருத்தும் என்பதைக் கல்லாதவரான கோவலர் எனினும் ஆம்; ஆகவே, அவர் மிக்க இளம் பருவத்தாராதலும் பொருந்தும்.

பயன் : இதன் பயனாகத் தலைவியின் வேதனை மிகுதி கண்டு, 'அவர் விரைய வருவார்; சொற்பிழையார்' எனத் தோழி ஆற்றுவிப்பாள்; அது கேட்டுத் தலைவியும் சிறிது அமைதி அடைவாள் என்பதாம்.

பாடபேதங்கள் : நீர் பொழிந்து இயங்க; முனிவு மெய்ந்நிறுப்ப; ஊர்வயின் இயம்ப மன்றுதோறு இசைப்ப.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/364&oldid=1698682" இலிருந்து மீள்விக்கப்பட்டது