நற்றிணை-2/366
366. பிரிவோர் மடவர்
- பாடியவர் : மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்.
- திணை : பாலை.
- துறை : உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.
[(து-வி.) இல்வாழ்விலே விருந்தோம்புதல் தலையாய அறமாகும். அதற்குப் பொருள் வசதியும் வேண்டும். ஆகவே மனைவியைப் பிரிந்து சென்றேனும் பொருள் தேடிவர நினைக்கின்றான் தலைவன். அந்த நினைவோடு, பிரிந்தால் நலிந்து நலனழியும் மனைவியையும் நினைக்கின்றான். இல்வாழ்வின் ஆதாரமே அவள்தானே! அவளை வருந்தச் செய்து விருந்தறம் செய்தல் முடியுமா? எண்ணம் சிதறுகிறது! அவன் தன் நெஞ்சுக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]
அரவு கிளர்ந்தன்ன விரவுறு பல்காழ்
வீடுறு நுண்துகில் ஊடுவந்து இமைக்கும்
திருந்திழை அல்குல் பெருந்தோட் குறுமகள்
மணியேர் ஐம்பால் மாசறக் கழீஇக்
கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி
5
மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த
இரும்பல் மெல்லணை ஒழியக் கரும்பின்
வேல்போல் வெண்முகை விரியத் தீண்டி
முதுக்குறைக் குரீஇ முயன்றுசெய் குடம்பை
மூங்கி லம்கழைத் தூங்க ஒற்றும்
10
வடபுல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழி, இவ் உலகத்தானே!
தெளிவுரை : நெஞ்சமே நீ வாழ்க! பாம்பானது தலையுயர்த்துப் படமெடுத்தாற் போன்றதும், பலவாகக் கலந்துள்ள பல கோவைகள் வீழ்ந்திருந்தலைப் பொருந்திய நுண்மையான துகிலினது ஊடாக வெளித்தோன்றித் தோன்றி இமைப்பதும், திருந்திய இழைகளை அணிந்திருக்கப் பெற்றதுமான அல்குல் தடத்தையும், பெருத்த தோள்களையும் கொண்ட இளமடந்தை நம் மனைவி. அவள்தான், நீலமணிக்கு ஒப்பான தன் கூந்தலை மாசில்லாதபடி தூய்மையாகக் கழுவி, கூதிர்காலத்தே பூக்கும் முல்லையின் குறுகிய காம்புடைய மலர்களை இளைய பெண் வண்டுகளோடு ஆண் வண்டுகளும் மொய்க்குமாறு சூட்டிக் கொள்பவள். கருமையானதும் பலவான மென்மை சேர்ந்ததுமான அந்தக் கூந்தலணையிலே துயிலும் இன்பத்தைக் கைவிட்டு,
கரும்பின் வேல்போன்ற வெண்மொட்டு விரியும்படியாகத் தீண்டி, அறிவுமிகுந்த தூக்கணங் குருவியானது முயற்சியெடுத்துச் செய்தமைத்த கூடானது, மூங்கிலின் அழகிய கழையிடத்தே தொங்கியபடியிருக்க, அதை அசைத்து வருத்தும் வடபுல வாடைக்காற்று; அத்தகைய பருவத்தில் மனைவிமாரைப் பிரிவோரே இவ்வுலகத்திலே மிகுந்த அறியாமை உடையவராவர்; ஆதலினால், நாமும் அவளைப் பிரியோம் என்பதாம்.
கருத்து : இவளை வாடவிட்டுப் பிரியோம் என்பதாம்.
சொற்பொருள் : அரவு – நல்லபாம்பு. கிளர்தல் – தலையுயர்த்துப் படம் விரித்தாடுதல். விரவுறு – கலப்புக் கொண்ட. காழ் – வடம். வீடுறு – வீழ்தல் பொருந்திய. ஊடுவந்து – இடையிடையே தோன்றி. இமைக்கும் – கண் சிமிட்டுவது போலத் தோன்றியும் மறைந்தும் அழகுகாட்டும். குறுமகள் – இளமடந்தை; காமநுகர்வுக்கு உரிய பருவத்தள் என்று குறித்துக் கூறியது. கூதிர் – வாடைக்காலம். கால் – காம்பு. அலரி – அலர்ந்த மலர். மாதர் வண்டு – பெண்வண்டு; அழகிய வண்டெனினும் ஆம், பிரிய – கட்டு அவிழ்ந்து பிரிய. தீண்டி – கோதி; அதன் ஓரத்தை நாராகக் கிழித்துப் போவதன் பொருட்டுக் குருவி கரும்பின் மொட்டைக் கோதும் என்க. முதுக்குறை – அறிவு நிரம்பிய. ஒற்றும் – தாக்கி மோதும். மடவர் – மடமை உடையவர்.
இறைச்சிகள் : 1) மணமற்ற கரும்பின் மலரைத் தீண்டித் தான் கூடு கட்டுவதற்குரிய நாரினைக் குருவி பெறுவது போலத், தானும் இன்பமற்ற வேற்றுநாட்டிற்குச் சென்று, இல்லத்துப் பொருள் வளத்தைச் செம்மைப்படுத்த வேண்டும் கடமைகளைச் செய்வதற்கு உரியவன் என்று நினைத்தான் அவன் என்க.
2) குருவி தன் கூட்டை மூங்கிலிலே கட்டியிருப்பினும், வாடைக் காற்று மூங்கிலையே அசைத்தாட்ட, அதனுடன் அக்கூடும் ஆடியாடி வருந்தும் என்றது, இவ்வாறே பிரிவாலே நலிந்திருக்கும் தலைவியும், பாதுகாவலான வீட்டில் இருந்த போதும், பிரிவின் துயரத்தை வாடையானது மிகுதியாக்கி நலிவிக்கத், துன்புறுவள் என்பதாம்.
விளக்கம் : வண்டினம் மொய்க்கும் முல்லையின் விரிந்த மலரைக் கூறியது மாலைக்காலத்தை உணர்த்தற்காம்; முல்லை மலர்வது மாலையாதலின் என்று கொள்க. 'மணியேர் ஐம்பால் மாசறக் கழீஇ... முல்லை சூடி' என்றது, காமம் நுகரத்துடிக்கும் இளமகளிர் மாலையிலும் நீராடித் தம்மை ஒப்பனை செய்து காதலரை இன்புறுத்துவர் என்பதைக் காட்டுவதாம். அந்தப் பழக்கம் பிரிவுக்காலத்திலும் தொடர்ந்தாலும், அவள் துணைபெற்று மகிழாது, வாடையும் மாலையும் தாக்கி வருத்தத் தளர்ந்து நலிவாள் என்று நினைத்துத், தலைவன் கலங்குகின்றான் எனக் கொள்க.
பயன் : தலைவன், தான் பொருள்தேடிவரப் பிரிந்து போவதைச் சிறிது காலம் ஒத்திப்போட்டுத், தன் ஆசை மனைவியுடன் இனிதாகக் கூடி வாழ்ந்திருப்பன் என்பதாம்.