371. பெயல் தொடங்கினவே!

பாடியவர் : ஔவையார்.
திணை : முல்லை.
துறை : வினை முற்றி மறுத்தரா நின்றான் பாகற்குச் சொல்லியது.

[(து-வி.) சென்ற வினையானது முடிந்ததன் பின்னே, தேரேறித் தன் ஊர் நோக்கி வருவானாகிய தலைவனின் உள்ளத்திலே, தலைவியின் நினைவே மேலோங்கி நிற்கின்றது. குறித்த கார்காலமும் தொடங்கியதால், அவள் வருந்துவாளே என்ற நினைவும் தொடர்கிறது. அவன், தேரை விரையச் செலுத்துமாறு பாகனைத் தூண்டுவதாக அமைந்த செய்யுள் இது.]


காயாங் குன்றத்துக் கொன்றை போல,
மாமலை விடரகம் விளங்க மின்னி,
மாயோள் இருந்த தேஎம் நோக்கி,
வியலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப்
பெயல்தொடங் கினவே பெய்யா வானம் 5
நிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி
அழல்தொடங் கினளே ஆயிழை; அதனெதிர்
குழல்தொடங் கினரே கோவலர்—
தழங்குகுரல் உருமின் கங்கு லானே!

தெளிவுரை : பாகனே! காயா மரங்களையுடைய மலையினிடத்தே கொன்றைப் பூக்கள் மலர்ந்து சரம் சரமாகத் தொங்கும்; அதனைப்போல, பெரிய மலைப்பிளப்பிடங்கள் விளங்கித் தோன்றுமாறு மேகங்கள் மின்னலிடுகின்றன. மாமை நிறத்தவளாகிய அவள் இருந்த இடத்தை நோக்கியும் அவை செல்லுகின்றன. அகன்ற கரிய ஆகாயத்திடமெல்லாம் மறைந்து படும்படியாக எங்கணும் பரவியும் நிறைகின்றன. இவ்வாறாக, இதுவரை பெய்யாதிருந்த மேகங்கள், இதுகாலை மழை பெய்தலையும் தொடங்கிவிட்டன. ஆதலினாலே, ஆராய்ந்தணிந்த கலன்களை அணிபவளான எம் காதலியும், நிழல் விளங்கும் ஒளிவளைகள் நெகிழ்ந்து சோர, ஏங்கியவளாக அழுதலையும் தொடங்கி விட்டனள். அந்த அழுகைக்கு எதிராகக், கோவலரும் மாலைநேரத்திலே வீடு திரும்புவோர், தம்முடைய கொன்றையம் தீங்குழலினை இசைக்கத் தொடங்கினர். இடிமுழக்கம் மிகுதியாகவுடைய இரவுப் போதிலே அவள்தான் யாதாவாளோ? ஆதலின், அவளைக் காக்கும் வண்ணம் யாம் சென்று சேர, விரைந்து தேரினைச் செலுத்துவாயாக என்பதாம்.

கருத்து : 'இன்றிரவுப் பொழுது தொடங்குவதற்கு முன்பாகவே நாம் ஊர்போய்ச் சேரவேண்டும்' என்பதாம்.

சொற்பொருள் : காயா – கரு நீல வண்ண மலர்களையுடைய மரம். கொன்றை – சரக்கொன்றை. கரு நீல மலர் நிரம்பிய குன்றின் இடையிடையே சரக்கொன்றை மலர்கள் தோன்றுவது, இருண்ட வானிடையே மின்னல் ஒளிவிட்டுத் தோன்றுவதுபோலத் தோன்றும் என்க. விடரகம் – மலைப் பிளப்பிடம். விளங்க மின்னி – விளங்கும்படியாக மின்னலிட்டு; பிளப்பிடம் இருளடர்ந்திருப்பினும், மின்னலால் ஒளிபெற்றுப் புறத்துள்ளார்க்குக் காணப்படும் என்பதாம். மாயோள் – மாமை நிறத்தவள். தேஎம் – நாடு; அவன் வேற்றுநாடு சென்றிருந்தவன் என்பதால், இவ்வாறு 'அவள் இருந்த தேஎம்' என்று, அவள் இருப்பிடத்தைக் குறிப்பிடுகின்றான். பாஅய் – பரவி. பெய்யா வானம் – இதுவரை பெய்யாதிருந்த வானம்; பொய்யா வானம் என்பது பாடம் ஆயின், காலத்தே வருதலைப் பொய்த்தலறியாத மேகம் என்று கொள்க. நிழல் திகழ் சுடர்த் தொடி – ஒளியுள்ள வளைகளின்பால் எதிர்ப்படும் பொருள்களின் நிழல் தோன்றும் என்பதாம்; இது தொடியின் சிறப்பினைக் காட்டும். தழங்கு குரல் – முழங்கும் குரல்.

விளக்கம் : அவன் வேற்று நாட்டிலிருந்தமையால், இவ்வாறு தன் வீடிருக்கும் தன் நாட்டிடத்துங் கார்காலம் தொடங்கியிருக்கும்; தொடங்கியிருந்தால், அவள் ஏங்கி அழத்தொடங்கிவிடுவாள்; ஆகவே, விரைந்து செல்லுதல் வேண்டும் என்று நினைக்கின்றான். அழல் தொடங்கினளே, குழல் தொடங்கினரே, என்று உரைப்பது உறுதிபற்றியாகும். அவன் நினைவோட்டத்தில் அவள் நிழலாடிய துயரநிலைமை எனினும் பொருந்தும்; தெளிவுபற்றி வந்த கால வழுவமைதி என்று கொள்க. தேரினை விரைந்து செலுத்துக என்று சொல்லாதிருப்பினும், தலைவனின் ஏக்கத்தை உணர்பவன் விரையச் செலுத்துவான் என்பதாம். வானம் பெயல் தொடங்கியது காலத்தை நினைவுபடுத்தி, நம் வராமையை நினைப்பித்து ஏங்கச் செய்யும்; மாலைக்காலத்துக் கோவலர் குழலோசை அத்துயரை மேலும் ஊதிஊதி மிகுதியாகக் கனலச் செய்யும்; இதன்மேல், இரவில் எழும் இடிக்குரல் முழக்கத்திலே அவள் நிலைதான் யாதாகுமோ? என்று தலைவன் வருந்தியதாகக் கொள்க.

பயன் : தலைவன் விரைவாகத் தன்னூர் அடைந்து, மனைவியின் துயரைப் போக்கி மகிழச் செய்வான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/371&oldid=1698691" இலிருந்து மீள்விக்கப்பட்டது