378. நாடாது இயைந்த நட்பு!

பாடியவர் : வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : (1) தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; (2) தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை வன்பொறை எதிர் மொழிந்ததூஉம் ஆம்.

[(து-வி.) களவிலே வந்தொழுகுவானாகிய தலைவன் ஒருபுறம் வந்து நிற்பதறிந்த தோழி, தலைவியிடம் சொல்வாள் போல, அவனும் கேட்டு வரைவொடு புகுதற்கு முயலும் வண்ணம் சொல்வதாக அமைந்த செய்யுள் இது; (2) தலைவன் பிரிவின்போது வருந்தி நலிந்த தலைமகளிடம், வலிதிற் பொறுத்திருப்பாயாக என்று தோழி சொல்லத், தலைவி தன்னுடைய நிலைமை அவளுக்குப் புலப்படுமாறு கூறியது இது வென்றும்கொள்ளலாம்.]


யாமமும் நெடிய கழியும்; காமமும்
கண்படல் ஈயாது பெருகும்; தெண்கடல்
முழங்குதிரை முழவின் பாணியின் பைபயப்
பழம்புண் உறுநரின் பரவையின் ஆலும்,
ஆங்கவை நலியவும், நீங்கி யாங்கும், 5
இரவிறந்து எல்லை தோன்றலது; அலர்வாய்
அயலிற் பெண்டிர் பசலை பாட
ஈங்கா கின்றால் தோழி! ஓங்குமணல்
வரியார் சிறுமனை சிதைஇ வந்து
பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி, 10
பாடிமிழ் பனிநீர்ச் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே!

தெளிவுரை : தோழீ! யாமமும் நெடும்பொழுதாக வளர்ந்தபடியே மெல்லக் கழியா நிற்கும்; காமநோயும் கண்களை மூடவிடாதாய்ப் பெருகாநிற்கும்; தெளிந்த கடலிலே முழங்கும் அலைகளும், முழவோசைபோல, மெல்லமெல்லப் பழம்புண் பட்டவர்களைப் போலக் கடலிடத்தே புரண்டு இயங்கி அசைந்தபடியிருக்கும். அவை அவ்வண்ணமாக, நம்மை நலிவிக்கவும், எவ்விடத்தும் இரவைக் கடந்து நீங்கியதாகக் கதிரவனும் தோன்றினபாடில்லை.

உயர்ந்த மணற்பரப்பிடத்தே, வரிகள் அமைந்த நம் சிறு வீட்டைக் கலைத்தவனாக வந்து, அதற்கு வருந்தினான் போல நமக்கு அவன்மேற் பரிவுண்டாகுமாறு அவன் சொல்லிய பணிவான பேச்சுக்களை நம்பினோம். பக்கத்திலே ஒலிக்கும் குளிர்ந்த நீர்ப்பெருக்கையுடைய சேர்ப்பனோடு, ஆராய்ந்து பாராதே உடன்பட்டதனால் ஆகிய நட்பினது அளவுதான் என்ன? அலர் கூறும் வாயையுடையவரான அயல்வீட்டுப் பெண்கள் எம் நெற்றியிலே தோன்றியுள்ள பசலைநோயைக் குறிப்பிட்டுப் பாடும் இழிவுதான் நமக்கு ஏற்பட்டது.

கருத்து : 'அவன் உறவால் பெற்றது பழியே' என்பதாம்.

சொற்பொருள் : யாமம் – இரவின் நடுயாமம்; நெடிய கழியும் என்றது, தன் ஆற்றாமையால் தோன்றுவது. படல் – மூடல். ஈயாது – விடாது. பழம்புண் – நெடுநாள் ஆறாத புண். ஆலும் – அசையும்; கடல் அலை புரண்டு புரண்டு ஓயாது இயங்குவதற்குப் பழம்புண்பட்டவர் நோவால் இடையறாது புரண்டு புரண்டு படும் வேதனைமுனகலைக் குறித்தனள். இரவு இறந்து – இரவைக் கடந்து. எல்லை – பகல். அயலிற் பெண்டிர் – பக்கத்துவீட்டுப் பெண்கள். பசலை பாட – பசலை பற்றியே வாய் ஓயாது பாடிக்கொண்டிருக்க. வரியார் சிறுமனை – வரிகள் பொருந்திய சிற்றில். சிதைஇ – சிதைத்து. பணிமொழி – பணிந்து கூறிய சொற்கள். தொட்ட – சொல்லிய. நாடாது – ஆராயாது.

விளக்கம் : நாடாது நட்டலும் ஊழால் விழைவது என்பது 'நாடாது இயைந்த நண்பினது' என்பதால் விளங்கும். 'நாடாது நட்டலிற் கேடில்லை' எனவரும் குறளும் இந்தக் கருத்தை எதிரொலிக்கும். 'மணற்சிற்றில் சிதைத்து, அதன் காரணமாக யாம் வருந்தி நலிந்தேமாக, எம்மைத் தேற்றுமாறு அவன் கூறிய பணிமொழிகளாலே பரிவுற்று, யாம் அவனுடன் கொண்ட நட்பு' என்றது, அன்றும் அவ்வாறு சிறுமனை சிதைத்தான்; இன்றும் நம்மை மணந்துகொண்டு மனையறம் காவாது, அயலிற் பெண்டிராற் பசலைபாடச் செய்து வருத்தினான் என்றுகூறி மனம் வேதனைப்படுதலாம்.

பயன் : (1) கேட்கும் தலைவன் மணவினை புரிதற்கு வேண்டியன விரைவிற் செய்பவனாவான் என்பதாம்; (2) அன்றும் மனைசிதைத்தான், இன்றும் பழிக்கு ஆளாக்கினான் எனக்கூறிப் பெருமூச்சுவிட்டுச் சிறிது ஆறுதல் பெறுதலுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/378&oldid=1698700" இலிருந்து மீள்விக்கப்பட்டது