380. ஒத்தனெம் அல்லேம்!

பாடியவர் : கடலூர்ப் பல்கண்ணனார்.
திணை : மருதம்.
துறை : பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.

[(து-வி.) : பரத்தையிடமிருந்து பிரிந்து தலைவியை விரும்பியவனாக வருகின்றான் தலைவன். தலைவியோ ஊடியிருக்கின்றாள். அவளிடம் சமாதானம் பேசுவதற்குத் தலைவனிடம் பணி செய்யும் பாணன் செல்லுகின்றான். அவனிடம், தலைவி மறுத்து உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.]


நெய்யும் குய்யும் ஆடி மையொடு
மாசுபட் டன்றே கலிங்கமும்; தோளும்
திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப்
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;
வாலிழை மகளிர் சேரித் தோன்றும் 5
தேரோற்கு ஒத்தனம் அல்லேம்; அதனால்
பொன்புரை நரம்பின் இன்குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்;


கொண்டுசெல் பாண!—நின் தண்துறை ஊரனை
பாடுமனைப் பாடல்; கூடாது நீடுநிலைப் 10
புரவியும் பூண்நிலை முனிகுவ,
விரகுஇல மொழியல், யாம் வேட்டதில் வழியே.

தெளிவுரை : பாணனே! எம் ஆடையோ நெய்யும் நறும் புகையும் படிந்ததாய் கருமைநிறத்தோடு மாசுபட்டிருக்கின்றது. சுணங்குடைய மென்மையான கொங்கைகளின் இனிதான பாலானது சுரந்து பெருகும்படியாக எம் புதல்வனை அணைத்துக் கொள்வதாலே, எம் தோள்களும் ஈன்றதன் அணிமைக்குரிய பால் நாற்றம் உடைத்தாயிருக்கும். தூய அணிகளணிந்த பரத்தையரின் சேரியிடத்தே காணப்படும் தேரோனாகிய நம் தலைவனுக்கு, அதனால் நாம் இயைந்தவர் ஆகமாட்டோம். அதனாலே, பொன் போன்ற நரம்பினிடத்தே இனிய குரலை எழுப்புகின்ற சிறிய யாழை இசைத்துப் பாடுதலிலே நீ வல்லவனே என்றாலும், இவ்விடத்தே எம்மைத் தொழுது நிற்றல் வேண்டா. சிறந்த எமதுமனையிடத்தே நின்று நீதான் பாடுதலைச் செய்யாதபடியாக, நெடும்பொழுதுக்கு நிற்றலையுடைய, தேரிற் பூட்டிய குதிரைகளும், வெறுத்துக் கனைக்கின்றன காணாய். யாம் விரும்பியது என்பது இல்லாதவிடத்துப் பயனில்லாத சொற்களைப் பேசவேண்டா. நின் தண்ணிய துறையுடைய ஊரனை அப்பரத்தையர் சேரிக்கே கொண்டுபோய் விடுப்பாயாக! அதனால், பொன்பெற்று நீயும் உவப்பாயாக என்பதாம்.

கருத்து : தலைவனை ஏற்க எம் மனம் இசையாது என்பதாம்.

சொற்பொருள் : நெய் – வாலாமை நீங்க ஆடும் நெய் அல்லது எண்ணெய். குய் – தாளிதப் புகை. ஆடி – ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து படிந்து. மையோடு – மைபோலக் கருமையோடு. மாசு – அழுக்கு. கலிங்கம் – உடை; மென்பூங் கலிங்கம் எனலாம். திதலை – தேமற்புள்ளிகள். தீம்பால் – இனியபால். பிலிற்ற – பீச்சிட. புல்லி – அணைத்து. புனிறு – ஈன்றதன் அணிமையிலே உண்டாவது போன்றவொரு பால் மணம், வாலிழை – ஒளி செய்யும் அணிகள். மகளிர் – (இங்கே) பரத்தையர்; மனைவி அழுக்குப் படிந்த உடையும், புதல்வனை அணைத்துப் பால்நாறும் தோளும் உடையவளாக இருக்கப் பரத்தையர் ஒளி செய்யும் அணிகள் பூண்டு ஆடம்பரமாயிருப்பர் என்பதாம். சேரி – சேர்ந்திருக்கும் இடம். தேரோன் – தேருடைய தலைவன்; தலைவனது வளமை சுட்டியது. சீறியாழ் – சிறிய யாழ். எழாஅல் – எழுப்புதல்; யாழிசைத்து ஒலியெழுச்செய்து மயக்குதல், பாடுமனை – சிறந்த மனை; தலைவியிருக்கும் மனை; பாடுகிடக்கும் மனையெனக் கொண்டு, அவள் விரதநெறி ஓம்பியிருக்கும் மனை எனலும் ஆம்; விரதம் தலைவனை இனிக் கூடோம் என்பது. பூணிலை – பூண்டிருக்கும் நிலை. முனிகுவ – வெறுப்ப. விரகு – பயன்தரும் தகுதிப்பாடு. வேட்டது – விரும்பியது.

விளக்கம் : தன்னையும் புதல்வனையும் மறந்து, பரத்தை தரும் இழிந்த இன்பமே பெரிதென மயங்கி, அவ்வீடே கதியெனச் சுற்றும் அவனுக்கும் எமக்கும் இனி எந்த உறவும் வேண்டாம்; இங்கே நின்று வீண்பேச்சுப் பேசுதலும் வேண்டாம்; நின் தலைவனுடனும், யாழுடனும் அங்கேயே போவாயாக என்று சீறுகின்றாள் தலைவி.

பாடபேதம் : மாசு பட்டின்றே; தீம்பால் பனிற்ற; புனிறு நாறு வம்மே; பாடல் பாடல் கூடாது நீடலின் பூணிலை பொறாஅ.

பயன் : பாணன் நிகழ்ந்தது சொல்லக் கேட்கும் தலைவன், தான் குடிமரபு குன்றியமைக்கு நொந்து, தலைவியைப் பணிந்து பலப்பல சொல்லித் தெளிவித்து, மகிழ்ச்சி செய்வான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/380&oldid=1698702" இலிருந்து மீள்விக்கப்பட்டது