393. புதுவர் ஆகிய வரவு!

பாடியவர் : கோவூர் கிழார்.
திணை : குறிஞ்சி.
துறை : வரைவு மலிந்தது.

[(து-வி.) தலைவன் வரைவொடு வருவதனை முற்படவே கண்டறிந்த தோழி, அந்தச் செய்தியை மிகவும் மகிழ்ச்சியோடு தலைவியிடம் வந்து. சொல்லி, 'நம்மவர்கள் இசைவார்களோ!' என்று ஆராய்ந்து பேசுவதுபோல அமைந்த செய்யுள் இது.]


நெடுங்கழை நிவந்த நிழல்படு சிலம்பின்
கடுஞ்சூல் வயப்பிடி கன்றீன்று உயங்கப்
பாலார் பசும்புனிறு தீரிய களிசிறந்து
வாலா வேழம் வணர்குரல் கவர்தலின்
கானவன் எறிந்த கடுஞ்செலல் ஞெகிழி 5
வேய்பயில் அடுக்கம் சுடர மின்னி
நிலைகிளர் மீனின் தோன்றும் நாடன்
இரவின் வரூஉம் இடும்பை நாம்உய
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப
நமர்கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன் 10
நேர்வர் கொல் வாழி—தோழி! நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும், நின்
வதுவைநாண் ஒடுக்கமும் காணுங் காலே?

தெளிவுரை : தோழீ! வாழ்வாயாக! நெடியவான மூங்கில்கள் உயரமாகச் செறிந்துள்ள நிழல்மிகுந்த மலையிலே, தலைச்சூலினைக் கொண்டுள்ள இளையபிடியானது, கன்றை ஈன்று வாலாமையால் வருந்தியிருந்தது. பால்மடி சுரந்த பசுமையான அதன் வாலாமையானது தீரும்படியாக, மகிழ்ச்சி மிகுந்ததாய், வெண்மையல்லாத கரிய அதன் களிறானது, வளைந்த தினைக்கதிரைச் சென்று கவர்ந்தது. அதனைக் கண்ட கானவன் எறிந்த கடுமையான செலவையுடைய எரிகொள்ளியானது, மூங்கில்கள் நிரம்பிய மலையடுக்கம் விளங்கும்படி மின்னிச் சென்றதாக, வானத்தேயுள்ள தம் நிலையிலிருந்து பெயர்ந்து வீழும் எரிமீனைப் போலத் தோன்றும் அத்தகைய நாட்டிற்குரியவன் நம் காதலன்.

அவர்தாம், இரவுநேரத்திலே வந்து போதலாகிய நம் துன்பத்திலிருந்து மீண்டு நாம் பிழைப்பதைக் கருதியவராக, நம்மை வரைவதற்கு வந்தனர். அவருடைய வாய்மைக்கு ஏற்றபடியாக, நம்மவர்களும் நம்மை மணம் செய்து கொடுப்பதற்கு இசைந்தனர் என்றால், அவருடன் இசைவாகப் பேசுவார்களோ! நம் காதலரின் புதியவர் போல வருகின்ற வரவினையும், வதுவை நாளிலே காணப்படும் நாணத்தால் ஒடுங்கிய நின் ஒடுக்கத்தையும் பார்க்கும்போது, யானும் மகிழ்வேனே என்பதாம்.

கருத்து : 'இனி மணம்பெற்று மகிழ்வாயாக' என்றதாம்.

சொற்பொருள் : நிவந்த – உயர்ந்து வளர்ந்துள்ள. நிழல்படு – நிழல்பட்டுக் கிடக்கும்; இருண்டடர்ந்த மரங்களையுடைய. கடுஞ்சூல் – தலைச்சூல். வயப்பிடி – இளைய பிடி; வலிய பிடியும் ஆம். உயங்க – வாடியிருப்ப. பசும்புனிறு – பசிய வாலாமை; ஈன்றதன் மிக அண்மை நாட்கள். களி – மகிழ்ச்சி. வாலா – கரிய; வெண்மையற்ற. ஞெகிழி – எரிகொள்ளி. நிலைகிளர் மீன் – விண்வீழ் கொள்ளி; நிலைகிளர் மின் என்று பாடம் கொண்டால் வானத்திருந்து இறங்கிப் பாயும் மின்னல் என்று கொள்க. வாய்மை – சொன்னசொற் பிழையாமை. நேர்வர்கொல் – இசைவார்களோ. வதுவை நாண் ஒடுக்கம் – வதுவை நாளில் மணப்பெண் தலைகவிழ்ந்து இருக்கும் வெட்கம் கவிந்த நிலை; வதுவை நாள் ஒடுக்கம், வதுவை நாண் ஒடுக்கம் என இருவகையும் பொருள் கொண்டு மகிழலாம்.

உள்ளுறை : கன்றீன்ற பிடியின் பசியைப் போக்குவதற்குக் கருதித் தினைகவரவந்த யானையின்மீது கானவன் எறிந்த எரிகொள்ளி விண்வீழ் கொள்ளிபோலத் தோன்றும் என்றனள். இது நீ படும் பிரிவுத்துயரைத் தீர்க்கக் கருதித் தலைவனிடம் யான் இயற்பழித்துரைக்கக் கேட்டதும், அவன்றான் நின்னை வரைதற்கு வந்து நின் மனைமுற்றத்திலே குவித்துள்ள செல்வங்கள் சுடரொளி வீசாநின்றன என்றதாம்.

விளக்கம் : கானவன் வீசும் எரிகொள்ளிக்கும் அஞ்சாதே தன் கன்றீன்ற பிடியின் பசிகளையத் தினைக்கதிரைச் சென்று கொணரும் களிற்றைப் போன்று, தலைவனும் தலைவியின் துயர் களைதற் பொருட்டாக எந்த இன்னற்கும் அஞ்சாத கழிபெருங் காதலன்பு கொண்டவன் என்பதாம். தலைவியின் களவுறவையறிந்த தோழி சொல்லும், 'புதுவர் ஆகிய வரவும்; நின் வரைவு நாண் ஒடுக்கமும் காணும் காலே' என்பது மிகவும் இன்பந்தரும் கற்பனைச் சுவையும் நகைச்சுவையும் மிகுந்த பேச்சாகும்.

பயன் : தலைவி களிப்பிலே மிதப்பவளாவாள் என்பதாம். ஆர்வமும் எதிர்பார்ப்பும் உள்ளத்தை நிறைக்க, நிகழ்வதை அறியத் துடிப்பள் என்பதுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/393&oldid=1698731" இலிருந்து மீள்விக்கப்பட்டது