395. நலம் தந்து சென்மே!

பாடியவர் : அம்மூவனார்.
திணை : நெய்தல்.
துறை : 'நலம் தொலைந்தது' எனத் தலைவனைத் தோழி கூறி, வரைவு கடாயது.

[(து-வி.) தலைமகன் வரைந்து வருவதற்குக் கருத்தின்றிக் காலம் தாழ்த்தானாக, களவு உறவையே விரும்பி வரக்கண்ட தோழிக்கு அவன்பால் ஆத்திரம் உண்டாகின்றது. அவள் அவனால் தாம் நலனழிந்த கொடுமையைக் கூறிப் பழித்துப் பேசுவதன்மூலம், அவனை வரைந்து வருவதற்கு விரையுமாறு தூண்டுகின்றாள். அவள் பேச்சாக அமைந்த செய்யுள் இது.]


யாரை எலுவ? யாரே நீ எமக்கு
யாரையும் அல்லை; நொதும லாளனை!
அளைத்தாற் கொண்கநம் மிடையே நினைப்பின்
கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் குட்டுவன்
வேந்தடு களத்தின் முரசதிர்ந் தன்ன 5
ஓங்கல் புணரி பாய்ந்தாடு மகளிர்
அணிந்திடு பல்பூ மரீஇ ஆர்ந்த
ஆபுலம் புகுதரு பேரிசை மாலைக்
கடல்கெழு மாந்தை அன்னஎம்
வேட்டனை அல்லையால், நலந்தந்து சென்மே! 10

தெளிவுரை : நண்பனே! நீதான் எமக்கு யாராகும் தன்மையை! நீதான் யாரிடத்து நட்பு உடையை! எண்ணிப் பார்த்தால், நீதான் எமக்கு யாராகவும் தோன்றுவாயல்லை. அயலான் போலவே உள்ளனை. நம்மிடையே உள்ளதாம் உறவைப்பற்றி நினைத்தால், அதன் தன்மையானது அவ்வாறு தான் உள்ளது. கடிய பகடாகிய யானையையும் நெடிய தேரினையும் உடையோனாகிய குட்டுவன், பகைவேந்தரை அடுகின்ற போர்க்களத்தினிடத்தே வெற்றி முரசமானது அதிர்ந்தாற் போல, ஒலியைக் கொண்ட அலைகள் உயர்ந்து எழுந்து வருகின்ற கடலிலே, பாய்ந்து நீர்விளையாட்டு அயர்கின்ற பெண்கள் அணிந்திருந்த பலவான பூக்களும் வீழ்ந்து ஒன்றோடு ஒன்று கலந்துவர, அவற்றைத் தின்ற மூதாவானது, மீண்டும் தான் தங்கியுள்ள இடத்தினுட் புகாநின்ற, பெரும்புகழுடைய மாலைக் காலத்திலே விளங்கும், கடல் வளம் நிரம்பிய மாந்தை நகரைப் போன்ற எம்மையும் நீதான் விரும்பினாய் அல்லை; ஆதலின், நின்னாலே யாம் இழந்துவிட்ட எம் பழைய நலனையாவது தந்துவிட்டு நின் போக்கிலே செல்வாயாக.

கருத்து : 'எம் நலனை நின்னால் இழந்து வாடினோம் என்பதாம்.

சொற்பொருள் : எலுவ – தோழ, நண்ப. நொதுமலாளன் – அயலான். பகடு – போர்க்களிறு. குட்டுவன் – சேரருள் ஒருவன். வேந்தடு களம் – பகை வேந்தரைக் கொன்றழித்த போர்க்களம். முரசு – வெற்றி முரசு. புணரி – அலை. மரீஇ ஆர்ந்த – கலவையாகத் தின்ற. பேரிசை – பெரும்புகழ்; பேராரவாரமும் ஆம். மாந்தை – மாந்தைப் பட்டினம்; மரந்தை எனவும் வழங்கும்.

உள்ளுறை : கடலாடும் மகளிர் கூந்தலிலிருந்து கழிந்து கடலலையோடு கரையிலே ஒதுங்கிய பலவகையான பூக்களையும் முதிர்ந்த பசுவானது தின்னும் என்றனள்; இது நின்னால் நலனுண்டு கைவிடப்பெற்றுத் துயருற்றுற்றிருக்கும் தலைவியை ஏதிலார் வந்து மணம் பேசிக்கொள்வற்கு முற்படுவர் என்று குறிப்பாற் கூறியதாம்.

விளக்கம் : மகளிர் அலைகடலிலே பாய்ந்து பாய்ந்து கடலாடி மகிழும் ஆரவாரத்திற்கு, குட்டுவன் வேந்தடு மயக்கத்து முரசின் அதிர்வை ஒப்புமையாகக் கூறினது மிகவும் சிறப்பாகும். அலையலையாக வரும் எதிர்ப்பணிகளை மோதி வீழ்த்தி வெற்றிகொள்ளும் செயலும், அலைபாய்ந்து நீராடும் செயலும் போர்க்களத்தை நினைப்பிக்கும். முல்லையிலே காடு சென்று மேய்ந்து பசுக்கள் வீடு திரும்பும் மாலைக் காலம் என்பர்; அதுபோலவே இங்கே கடற்கரையிலே பூக்களைத் தின்றுவிட்டு பசு வீடு திரும்பும் மாலை என்று கூறினர். 'ஓங்கற் புணரி' என்பதனை, கடற்கரையிலுள்ள உயர்ந்த பாறைகளிலே மோதும் அலைகள் எனக்கொண்டு, அப்போது எழும் ஒலி போர் முரசின் ஒலிபோன்று இருக்கும் என்றும் சொல்லலாம். 'வேட்டனை அல்லையால் நலம் தந்து சென்மே' என்பது அவனைச் சுட்டெரிக்கும் சுடுசொற்கள். அவன் தன் குறையறிந்து விரைவில் மணம்பேசி வருதற்கு ஆவன செய்வான் என்பதாம்.

பயன் : தலைவன் மணம்பேசி வந்தானாகத், தமரும் இசைவு சொல்ல, அவர்கள் மணந்து, பிரியாத இல்லற இன்பத்திலே திளைப்பர் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/395&oldid=1698736" இலிருந்து மீள்விக்கப்பட்டது