நற்றிணை நாடகங்கள்/நீயோ அறிவாய்!

1. நீயோ அறிவாய்!



1

அவன் வருகிறான். "அவளைக் காண்பதும் இன்பம்; அவள் சொல் கேட்பதும் இன்பம்; அவளோடு பேசுவதும் இன்பம்; அளவளாவுவதும் இன்பம்; அணைப்பதோ பேரின்பம்"—இவ்வாறு இன்புறத் துடிதுடிக்கிறது அவன் உள்ளம்; ஆனால், ஏமாற்றமே அடைகிறது. அவளைக் காணோம். அவளோடு விளையாடிவரும் தோழிமாரையும் காணோம். தானும் அவளும் தனித்துக் களித்த இடம் எல்லாம் அவன் சென்று பார்க்கின்றான். தினைப்புனம் வறிதே கிடக்கின்றது. அருவியோ தனித்துப் புலம்புகிறது. அந்த இடங்கள் எல்லாம் உயிரற்ற உடல்போலத் தோன்றுகின்றன. "என்ன ஆயினள்! எங்குப் போயினள்! என் உயிரே! எவ்வாறு வாழ்வேன் இனி!" என்று அவன் புலம்புகின்றான்; கலங்குகின்றான்; செய்வதறியாது பெருமூச்சு விடுகின்றான்; வெறி கொண்டவன்போலத் திகைத்து நிற்கின்றான்.

2

மலைமேல் அழகிய இடம் அஃது. எதிரில் அருவிஉயர்ந்தே தோன்றுகிறது. அங்கு அருவியில் ஆடுவோர் ஒருவரும் காணோம். அஃது ஒரு மறைவான சூழல்; பெண்களே தனித்துக் குளிக்கும் இடம். முன்னாள் போலவே ஆடிப்பாடி நகை முகம காட்டிப்போக அவள் அங்கே தோன்றவில்லை. சுற்றிலும் பழமும் பூவும் பொலியும் மரங்கள் அடர்ந்துள்ளன. அப்பாலே தினைப்புனம் செழித்து வளர்ந்துகிடக்கின்றது.

கீழே பார்க்கிறான் அவன். குறவர் குடியிருப்பே தோன்றுகிறது. அதில், நடுவே ஒரு வீடு திறந்துவிளங்குகிறது. ஆம்; அதுதான் அவள் வீடு. முற்றத்தில் இத்தனை நாள் ஆடுகிற பெண்கள், இன்று வீட்டின் புறக்கடையில், பெண்களே புழங்கும் உள்வெளியில் ஆடுகின்றார்கள். ஆம்; அவளுடைய தோழிமார் கூட்டமே அஃது. இதோ அவளும் நிற்கிறாள்; முற்றத்தைப் பார்க்கிறாள்; மேல் நோக்கிப் பார்க்கிறாள். அவள் வெளியில் போகலாகாது எனத் தடை ஒன்று உண்டு என்பது தெளிவாகிறது.

"இனி எவ்வாறு சென்றடைவேன்?" என்று அவன் உள்ளம் வெடித்து ஒலிக்கிறது. அவனுக்கு முன்னாள் நினைவு வருகிறது. முன்னாள் பார்த்தது பார்த்தபடியே, அவன் கண்ணை விட்டகலாமல் காட்சி அளிக்கிறது. அவன் கருத்தாழத்தில் முறுகி எழுந்த காட்சி அது.

3

நீலப்பட்டு உடுத்தது போன்ற நெடுங்குன்றம்—அது நிறைய அடர்ந்துள்ள பச்சைப் பசுங்காடு—அந்தப் பச்சிருளைப் பிளந்துகொண்டு வெள்ளிப் பாற்கடலே வெளிப்படச் சிற்றிடம் பெற்று வளைந்து திரும்பிப் பின் நேரே உயரத்தில் இருந்து கீழே துள்ளி விழுவது போன்ற அருவி—அதுவோ பாறைமீது விழுந்து பல பல அருவிகளாய்ச் சிதறுகின்றது. சிதறுண்ட அவை பாடிக்கொண்டே கை கோத்துக் கூத்தாடிப் படிப்படியாய்க் கீழ் இறங்கிவந்து பாய்கின்றன. இவ்வாறு ஓர் அழகிய இயற்கைக் காட்சி இயைந்துநிற்கிறது.

குயிலோடு மாறு கூவியும், மயிலோடு மாறு ஆடியும் மரங்களைச் சுற்றிக்கொள்ளும் கொடிகள்போல வளைந்து வளைந்து மலர் பறித்தும் உயிர் ஒளி வீசுகின்றார்கள் சில பெண்கள். அவர்கள் அனைவரும் ஓர் உயிர்போல் இயங்குகின்றனர். அவர்களது உயிராக ஒருத்தி விளங்குகிறாள்; அவளே அவனது உயிராகவும் இயங்குகிறாள், அவனுடைய கண்ணிலும் கருத்திலும்.

அந்தத் தோழிமார் கூட்டத்தில் அவள் ஒருங்கு இயைந்துவிடுகிறாள். ஒரே குரல் ! ஒரே பாட்டு ! ஒரே ஆடல் ! ஒரே பேச்சு ! ஒரே உயிர் ! இயற்கையோடு இயைந்து இயற்கையே உடலாய், இயற்கையே உயிராய்,

இயற்கையே அணிகலனாய், இயற்கை வாழ—இயற்கையே உலகமாய் ஓங்க—இன்பமாய்ச் சிறக்க—இயங்கி வருகிறது இந்தக் கூட்டம், இந்த ஆயம். அன்பின் பேர்ஒளி விளக்கே இந்த ஆயம்; இதன் உயிர்ச் சுடர் அவள்.

"என்னிடமும் அன்பில் குழைந்து உருகினாள்; தனக்கு என ஒரு தனி நிலை இல்லாதபடி என்னோடு ஒன்றாயினாள். என் கல்மனம் இதனுயர்வை அறியாது போயிற்றே! அறியாது போயிற்றே! அந்தோ அறியாது போயிற்றே!" என்று துடிதுடித்துப் புலம்புகின்றான் அவன்.

நீராடப் புகுகின்றனர் இப் பெண்கள். தோழியரே முன் செல்கின்றனர். நீரோட்டத்தோடு செல்லும் புல்போல அவர்களோடு அவளும் போகின்றாள். அவள் அவனோடு கூடியதும் அப்படித்தானே!

அவள் எண்ணம் எல்லாம் அவனே. அவள் உயிர் எல்லாம் அவனிடமே ஓடி வந்து புகுந்துகொண்டது. வெற்றுடலாக அசைகிறாள் அவள்; அவர்கள் இயக்க இயங்குகிறாள். அவர்களது அன்பின் ஆற்றல் அவளை நகையாடச் செய்கிறது; அருவியாடச் செய்கிறது. உயிர் கொடுக்கும் ஒப்பற்ற சமுதாயம் அன்றோ, அந்த ஆயம்! அவளுடைய மனமோ வேறோர் இடத்தில்—அவன் உள்ளத்தில்—சிறையுண்டுகிடக்கின்றது. "அவள் அருவியாடுவதிலும் அந்த உண்மை இப்போது நன்றாக விளங்குகிறது; நேற்று விளங்கவில்லையே!" என்று நைகிறான் அவன்.

இந்தப் பெண்களோ அருவிகளையும் தோழிமாராகக் கொண்டு எதிரே துள்ளிக் குதித்து விளையாடுகிறார்கள்; நீர்வீழ்ச்சியை அணைத்துக்கொள்கின்றனர்; தெறிக்கின்றனர்; தலைமேல் தாளம் கொட்டச் செய்கின்றனர்; உடல் எல்லாம் வீழ நிற்கின்றனர்; நீர் அரமகளிராய் நிலவுகின்றனர்; நீரை வாரி ஒருவர்மேல் ஒருவர் வீசுகின்றனர்; தம் கண்மேல் நீர்வீழ்ச்சியைக் கண் மூடித் தாங்குகின்றனர்; அதனைக் கையால் திருப்பித் தோழிமார் கண்ணில் தாக்கவிடுகின்றனர் ; கண் சிவந்து களித்துச் செருக்கி ஆரவாரிக்கின்றனர். களித்து நிற்கின்றாள்—கண் சிவந்து நிற்கின்றாள் தலைவி. அமலங்களாய் விழிக்கும் அகன்ற கண்கள்—ஒன்றோடொன்று அன்புப் போட்டி இட்டு அகல விழித்து அழகு பெறும் கண்கள்—ஈர அன்புடைய மழைக்கண்கள்—எவர் கருத்தையும் கொள்ளை கொள்ளும் கடவுட் கண்கள்—அணங்கின் கண்கள்—இவற்றைக் காண்கிறான். (அவன் இது முன்னாள் கண்ட காட்சிதான். ஆனால், அன்றைய காட்சியின் பொருள் ஆழம் இன்று தோன்றுகிறது. கருத்தழிகிறான் அவன்). முன்னாள் காட்சி தொடர்கிறது உள்ளதே.

அவனையே நோக்கித் தோழிமாரோடு நடந்து செல்கிறாள் அவள். எங்கே? ஏன்? அவனை நோக்குகின்ற கண்களில் ஏதேனும் தோன்றுகிறதா? பேசாத பெரு மெளனம்—அதனை அறிவார் யார்? அவனைக் கண்ட மகிழ்ச்சி கண்களில் ஈர அன்பாய் மலர்கின்றது; முகமெல்லாம் மலர்கின்றது; புன்னகையாகப் பொலிகின்றது. தனித்துநின்றதுன்பமெலாம் மறைகின்றது. அவனைக் கண்டதும் மகிழ்கிறாள் ; களிக்கிறாள் ; இயங்குகிறாள் ; நடக்கிறாள் ; தோழிமாரோடும் மறைகிறாள். எங்கே? ஏன்?

4

இன்று அந்தக் காட்சியின் பொருள் விளங்குகின்றது. அவளது அருள், தன்னையே மாறிக் கொடுத்துதவித் தான் கெட்டு நிற்கும் பேரருள் இவ்வாறு தோன்றுகிறது. பார்வையும் முறுவலும் அவளது தலையன்பின் மலர்ச்சி; அவள் தந்த பரிசில். மறக்க-முடியுமா அவன்? தான் அற்ற நிலையில் அவனைக் கண்டதும் தன் தனிநிலை எல்லாம் மறந்து நிற்கிறாள் அவள். அவனையே நம்புகிறாள். இவ்வளவும் அவனுக்கு இன்று தெளிவாகிறது.

"ஐயோ, அறியாமற் போனேனே ! இந்தச் சீரணங்கு —பேரருளின் திருவருளால் வீட்டிலாடி வந்தவள்—எனக்காக வீட்டை விட்டுப் புறம் புறம் திரிந்தாள்—தோட்டத்தில் ஆடினாள்—தினைப்புனம் காத்தாள்; கிளியோடும் குருவியோடும் பேசினாள்; அருவியோடு ஒன்றாய் ஆடினாள்; இவ்வாறு தன் அன்பைச் சுற்றும் முற்றும் அகல அகலப் பரப்பிவிட்டு அலர்கிறாள். என் குடியையும் அதனுள் அடக்கிக்கொண்டு என் வீட்டில் என்னை மணந்து வாழ விரும்பிய அருளுள்ளத்தின் மலர்ச்சியே இது; வெற்றாட்டம் என வெறுமனே நின்றேன். இத்தனைக்கும் பொருள் இதுவே அன்றோ? அதனை உணராமற் போனேன். 'கடையை விரித்தேன்; வாங்க வேண்டியவர் வாங்கவில்லை. கடையைச் சுருட்டிக்கொண்டேன்' என்றுகூட முணுமுணுக்காமல் வீடு திரும்பினாள்" என்று பெருமூச்சு விடுகிறான்.

"அம் மட்டுமா!" என்று புகைந்தெழுகிறது அவன் உள்ளம். "பாழான நெஞ்சமே! நீ இதனை அறிந்தாயா? உயிர்க்கு உயிராம் தோழிமாரையும் பிரியத் துணிந்தாள்; பெற்ற தாயாரையும் பிரியத் துணிந்தாள்; உயிரினும் சிறந்த நாணமும் விட்டாள்; அச்சம் நீங்கினாள்; மடம் எலாம் ஒழிந்தாள்; உன்னோடு அளவளாவினாள்; புறத்தே எல்லாம் நம்மைக் காண அலைந்து திரிந்தாள். நீ என்ன செய்தாய்? தன்னல இன்பமே கருதி, அவளை அணைத்ததன்றி வேறென்ன எண்ணினாய்? வேறெதற்கு உருகினாய்? உடனிருந்து வாழத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனையோ?"

"இன்று அவள் நிலை என்ன? அறிவாயோ பேய் நெஞ்சே ! தோழியர்க்கும் தோன்றாத ஒளிவு ! தாயர்க்கும் தெரியாத களவு ! தன் மனத்திற்கும் தெரியாத மறைவு ! இப்படியுமா அவள் வாழ்வது ! உன்னால்—உன்னால்—உள்ளக் களங்கமில்லாத கற்புள்ளம், பொய்யுலகின் பொல்லாத இகழ்ச்சிக்கும் ஆளாகி உள்ளதே! மானமழிந்தபின் உயிர் வாழ்வரோ பெரியோர்? 'வெளியே வரலாகாது' என்று பெற்ற மனமும் இது கேட்டுக் குமுறித் தடுக்கின்றது. அவள்மேல் தவறுண்டோ? சுட்டியும் காட்டியும் பேசத் தகுந்தவளோ அவள்? ஏன் இந்த ஐயம் எழுந்தது? சிவந்த கண்களின் காட்சி கண்டு மகிழ்ந்தேன் நான் ; பழியே தின்பாருக்கு விருந்தாயிற்று அக்காட்சி! நீரில் விளையாடிச் சிவந்த கண்களைக் கள்ளக் காதலனோடு கலந்து களித்துச் சிவந்த கண்கள் என்று பாழுலகம் பழி தூற்றியதோ? ஐயோ! பழியைக் கேட்டாளோ தாய்? ஐயந்தான் கொண்டாளோ? அன்புச் சமுதாயத்தை எவ்வாறெல்லாம் சிதறத் தகர்த்துள்ளேன், ஏ நெஞ்சே ! அவள் போனபின் இத்தனையும் நினைக்கின்ற நின் அறிவே அறிவு!

"என்னையே அறிந்து அவளை அறியாமல் இருந்த நான், தன்னையே மறந்து அவளையே அறிந்த அவளுடைய உயிர்த்தோழி கூறியதையும் உணராமற் போனேன். என்ன அறியாமை! அத் தோழியைப் பார்த்து 'நீ அறியாய் அவளை; நான் அறிவேன்' என்று இடித்துரைத்தேனே! நெஞ்சே! நீயோ அவளை அறிவாய்? நீயோ அறிவாய்?" என்று தோழியோடு பேசிய தனை நினைத்துப் புலம்புகிறான்.

5

தோழியின் பேச்சும் நினைவுக்கு வருகிறது. சொல்கொண்டு தோழி எழுதிய உயிர் ஓவியம் அவன் மனக்கண் எதிரே தோன்றுகிறது இதோ.

மிக நீண்டு வளர்ந்த தினையை வளர்க்கும் மலை நாட்டார் வாழும் குறிச்சிச் சீறூர் தெரிகிறது. தோட்டமும், நடுவில் வீடுமாக அமைந்த குடியிருப்புக்களின் முடிமணியாக நண்ணடுவே அழகாக ஒரு தோட்டம் மிகப் பரந்து விளங்குகிறது. அகன்று நீண்ட தோட்டத்தின் இடையே எழுந்து ஓங்குகிறது தலைவி வீடு—அவள் வீடு.

அவ் வீட்டின் முற்றத்தே ஆர அமரக் கூடி இருக்கின்றனர் குன்றக் குறவர்கள். அவர்கள் தினை கொய்ய நாள் பார்க்கிறார்கள். அது தான் மலையரசன் வீடு. மலைநாடனின் உயிரான காதல் மகளே அவள். "ஒரே பெண்—இளம் பெண்—அவன் அன்பையே நம்பும் பெண்—நன் மலைநாடன் காதல் மகள்—மலையரசனுக்கு உயிரான மகள்" என்று தோழி கூறியது காதில் விழுகிறது.

"அன்புச் சமுதாயத்தின் உண்மை நிலையை என் உளங் கொளக் கூறி வழி காட்டுகிறாள்" என முன் அவன் உணரவில்லை. "இந்த இன்பச் சூழலை—அன்பான தந்தையைப் பிரிவாளோ?" என்றே தோழி வினவுவதாகப் பொருள் கொள்கிறான்; "நான் அறிவேன் அவள் மனத்தை. யான் இன்றி அவள் வாழாள் என்பது தோன்றப் பேசுகிறான்.

"கொழுவிய தினையின் விளைவு — செழுமையான பலாப்பழம் — அடர்ந்திருண்ட தோட்டம் — மலைநாடன் எம் அப்பன்" என்று தோழி கூறிய விளக்கம் ஏன் ? "அவள் குடிக்கு ஒவ்வாத குடி அவன் குடி” என்று தோழி கருதுகிறாள் என நினைக்கின்றான். "ஒத்த குடியும் ஒவ்வாத குடியும் யார் அறிவார்? என்னோடு மனமொத்துப்போன அவள் அன்றோ அறிவாள்? நீ எப்படி அறிவாய்?" என்று உள்ளுக்குள் முணுமுணுக்கிறான் அவன்.

"சேற்றிற் பிறக்கவில்லையா செந்தாமரை" என்று குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறான்; "இவ்வாறு பேசி எங்களைப் பிரித்துவைக்க முடியாது" என்பது தோழி மனத்தில் உறைக்கும்படி உறுதி கூறுகிறான்.

முன் நடந்தது இப்படி.

6

"இவற்றின் உண்மைப் பொருளை அறியாமற் போனேனே! தோழி மனம் புண்பட என்ன என்ன கூறினேன்!" எனத் தன்னைத் தானே நொந்துகொள்கிறான் அவன், இன்று.

"ஐயோ! அறியாமையால், தோழியை அறியாதவள் என்றேனே! தோழி காட்டிய அன்பு வழியில்—இயற்கை வழியில் சென்று அவளை அடைய முடியாமல் அறியாமைச் செருக்கில் ஆழ்ந்து எனக்கும் அவளுக்கும் கேடு சூழ்ந்தேனே!" எனக் கவலைப்பட்டுக் கருத்தழிகிறான் அவன். தினைக் கதிரின் கொழுமை—இலைகளின் நீட்சி—பலாவின் செழுமை—மரங்களின் உயர்ச்சி—அடர்த்தி—இவை எல்லாம் நிலத்தின் வளம் என அவன் அறிவான். ஆனால், அவர்களோ இவை அனைத்தும் அறத்தின் கொழுமை—கற்பின் விளைவு — அன்பின் உயர்வு — இன்பத்தின் அடர்த்தி—நேர்மையின் நீட்சி என்று கருதுகின்றார்கள். இக் கருத்து அவனுக்கு இப்போது நன்கு விளங்குகிறது. "நன்மலை நாடன்" என்று தோழி கூறியதின் பொருள் தெளிவாகிறது. "நன்மையே, அறமே, கற்பே, அன்பே இந்த வளம் அனைத்தும்" என்று தோழி கூறியதின் உட்பொருள் அவன் உள்ளத்தே உறைக்கின்றது. "நல்வாழ்வு வாழக் கற்பு நெறியில் உடனே மணஞ் செய்யத் துணியாது போனேனே!" என வருந்துகிறான் அவன்.

7

"தினை அறுத்தல், தினை கொய்தல்" என்பது வயிறு வளர்ப்பார் பேச்சு. இயற்கையோ டியைந்து வாழும் இக்குறவர்களும் தினையுண்டுதான் வாழ்கின்றனர். ஆனால், அவர்கள் தினையறுப்பது ஏன்? அவர்கள், தினையின்கால் தினைக்கதிரின் கொடுமையால் வளைந்து செம்மைநிலை கோணி வருந்துவது காண்கின்றார்கள்; அந்தக் கொடுமைக் கோணலை நீக்கிச் செம்மையாக்கி இன்பம் கொடுக்க அறுவடை செய்கின்றனர். அன்பும் அறச்செம்மையும் அவர்கள் உள்ளத்தைக் குழைக்கின்றன; உணவும் ஊட்டுகின்றன. அத்தகையது அவள் பிறந்த குடி.

"ஓரறிவுயிராம் தினையொடும் ஒத்துத் துடிக்கும் அவர்கள் நெஞ்சம் குழந்தைகளோடு குழைந்து குழவி நெஞ்சமாகிறது. குழவிகள் ஆடும் முற்றத்தில் குழந்தைகளோடு குழந்தைகளாய் மாலையில் அமர்ந்த அவர்கள் விளையாடுகிறார்கள். வாழ்வின் இன்பம் அஃது. அவர்கள் பண்பாடு இவ்வாறு குழவிகளோடு ஆடும் முகத்தான் தலைமுறை தலைமுறையாக அழியாது அவர்கள் குடியில் ஓங்கி வளர்கிறது. அத்தகைய பண்பாட்டில் பிறந்ததுமுதல் விளையாடிவருகிறாள் தலைவி. என்னே இவர்கள் கல்வி முறை! விளையாட்டுக் கல்வி முறை!

"மரங்களும் நீளுகின்றன: கிளைகளும் நீளுகின்றன; இவர்களுக்கு நிழல் கொடுக்க, வளங் கொடுக்க நீளுகின்றன. இயற்கையும் மக்களுமாம் இயைபு இத்தகையது. இவற்றிடையே வானத்தில் கருமுகில்கள் மழையை நினைப்பூட்டி இன்பமாய் ஓடுவதும் தெரிகின்றது. இருட்டில் எவ்வாறு தெரியும்? மின்மினிப் பூச்சியின் ஒளியில் தம் மனத்தைக் குழந்தைகள்போலப் பறிகொடுக்கின்றார்கள் குறவர்கள். அன்புக்கண் காணும் காட்சி இஃது. அங்கே சிற்றொளியும் பேரன்பொளியாம். பெரிய மந்தையுள்ளும் தன் கன்றைத் தாய்ப் பசு பிரித்தறிவது அன்புக்கண் கொண்டன்றோ?

"தினை கொய்வதற்கு அவர்கள் நாள் பார்க்கும் முறையும் இதுவே ஆம். இயற்கையே நாள் வைத்துக் கொடுக்கிறது. இயற்கை வாழ்வு வாழ்வார்க்கே இந்த நுட்பம் தெரியும். நாகரிக வாழ்வு வாழும் யான் இதனை 'அறியாமை' என இகழ்ந்தேன்! இன்றறிவேன் இந்த அறிவின் நுட்பத்தை. இயற்கையோ டியைந்து முனைப்பற்ற நிலையில் தோன்றும் விளக்கம் இது.

"மின்மினிப் பூச்சி வழியேக் கருமுகிலைக் காரிருளில் காணும் இவர்கள் சிறிது அலர்—பழிச்சொல்—எழினும் உண்மை உணரும் உணர்வு பெற்றவர்கள். ஆனால், வெறுப்போ தண்டனையோ இல்லை. தினைத்தாளைச் செம்மையாக்கத் தினையை வீடு சேர்க்கின்றனர். தினைத் தாளாய்த் (தலைவியின் ஆணிவேராய்த்) தினையைத் (தலைவியைத்) தாங்கியது (தலைவன்) தாள் செம்மை யுற்று (கற்புநெறி) வாழத் தினையைத் (தலைவியை) வீடுகொண்டு சிலநாள் பிரித்து வைப்பது குறவர் பெருநெறி செம்மையுற வாழ்வதே கற்புநெறி. தினை கொய்யும் காலமே வேங்கை மலரும் காலம். களவு நெறி முடியும் காலமே கற்பு நெறி மலரும் காலம். வேங்கை மலரும் காலமே குறவர் மணவிழாக் கொண்டாடும் காலம்."

" 'அன்புச் சமுதாயம் அன்பின் தலைவியை வாட விடாது ; அன்பு வழிச்சென்று இயற்கை நெறியை உணர்ந்து குடிமரபிற்கேற்ப மணப்பதே முறை' எனத் தோழி கூறிய கருத்து அன்று விளங்கவில்லை. 'தினை அறுத்து, வேங்கை பூத்துக் குலுங்கும் நாளில், மணம் நடைபெறுவது இயற்கையோடியைந்த அவர்கள் இயற்கை வாழ்வின் சிறப்பு' என்று அவள் கூறாமற் கூறியதனையும் அன்று நான் அறியவில்லை. இன்று தெரிந்துகொள்கிறேன் நான்; மணம் செய்துகொள்ளத் தூண்டியதனை அறியாமற்போன என் அறிவின்மை என்னே!" எனக் கழிவிரக்கம் கொள்கிறான்.

8

அவன் உள்ளத்தில் ஒரு புரட்சி எழுகிறது. அவன் மாறுகிறான். முன்னும் அன்பு ஆனவனே அவன். ஆனால், அன்பின் பெருமையை — உண்மை வடிவை இன்று அறிந்ததுபோல் என்றும் அவன் அறிந்ததில்லை. முன்போல் அவளது அன்பு கற்கண்டாய்க் கடையில் இல்லை; வாயில் வந்து இனிக்கின்றது. அவளது அன்புருவம் அன்பாய் நெகிழ்ந்து பாய்கிறது. தன்னை மறக்கின்றான்; அவளே ஆகிறான். அன்பு கண்கொண்டு காணும் அறிவே உண்மை அறிவு, மெய்யுணர்வு என்பது அவனுக்கு விளங்குகிறது. இன்று தன்னலமிழந்து அவள் வடிவமாகவே மாறுகிறான்; அவளாவுகின்றான்; புதியவனாய்ப் புத்துயிர் பெற்றுப் புத்துலகில் வாழ்கிறான்.

இந்தக் கதையினை 12 வரியில் பாடுகிறார் பெருங்கௌசிகனார் என்ற புலவர்:

பொருவில் ஆயமோடு அருவி ஆடி
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக்கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி
மனைவயிற் பெயர்ந்த காலை நினைஇய
நினக்கோ அறியுநள் நெஞ்சே புனத்த
நீடுஇலை விளைதினைக் கொடுங்கால் நிமிரக்
கொழுங்குரல் கோடல் கண்ணிச் செழும்பல்
பல்கிளைக் குறவர் அல்குஅயர் குன்றில்
குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய
பன்மர உயர்சினை மின்மினி விளக்கத்துச்
செல்மழை இயக்கம் காணும்
நல்மலை நாடன் காதல் மகளே !

—நற்றிணை 44.

[ஆயம் — தோழியர் கூட்டம்; முறுவல் — புன்சிரிப்பு; கொடுங்கால் — வளைந்த தாள்; குரல் — கதிர் : ஆசினி — பலா ; படப்பை — தோட்டம்.]