நூல்

1. சிறுமை செய்யார்

பாடியவர் : கபிலர்.
திணை  : குறிஞ்சி.
துறை  : பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.

[(துறை விளக்கம்) தலைவன், தலைவியைப் பிரிந்து செல்லும் முயற்சிகளிலே ஈடுபட்டனன். அதனைக் கண்டு, அவன் பிரியின் தலைவிபால் வந்துறும் துன்பப்பெருக்கினுக்கு அஞ்சுகின்றாள் தோழி. அவள், தலைவியிடம் சென்று தன் வருத்தத்தைக் கூறிய பொழுதிலே, தலைவனிடத்தே ஆராக்காதலும் நம்பிக்கையும் உடையவளான தலைவி, தன் சால்பு தோன்ற உரைத்து, இவ்வாறு அவளைத் தேற்றுகின்றாள்.]

நின்ற சொல்லர்; நீடுதோறினியர்:
என்றும் என்றோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்தா தூதி, மீமிசைச்
சந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை; 5
நீரின் றமையா உலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி,
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்

சிறுமையுறுபவோ செய்பறி யலரே!

தோழீ! நம் தலைவர் என்றுமே பிறழ்தலற்றதாகி நிலைபெறுகின்ற சொல்வாய்மையினை உடையவர்; நெடிதாகப் பழகுந்தோறும் பின்னரும், பின்னரும் இனிமை உடையவராக விளங்குகின்ற தன்மையினை உடையவர்: என் தோள்களைப் பிரிகின்றதான அந்தக் குறைபாட்டுச் செயலினை என்றுமே அறியமாட்டாத சிறந்த பண்பினையும் கொண்டவர். வண்டானது, தாமரைப் பூவினது தண்மையான தாதினை ஊதிக்கொண்டுசென்று, மிக்க மேலிடத்ததான சந்தனமரத்தினிடத்தே வைத்திருக்கும் இனிதானவொரு தேனிறாலைப் போல, மேலான தன்மையாளரான அவருடைய நட்பானது, என்றும் நமக்கு மேன்மையினைத் தருவதாகவே விளங்கும். நீர் வளத்தினை இல்லாதே அமைந்திராத இந்தப் பூமியினது இயல்பினைப் போலவே, தம்மை இல்லாதே அமைந்திராத தன்மையினைப் பெற்றுள்ள நம்மையும் விரும்பி, நமக்கு அந்நாளில் அருளினையும் செய்தவர் அவர். நம்முடைய நறுமணம் கமழ் தலையுடைய நெற்றியானது பசலையாலே உண்ணப்பட்டுப் பாழாதலை நினைத்து, அச்சங்கொண்டவர் ஆகுதலாகிய ஒரு சிறுமையினையும், அவர் அடைபவர் ஆவோரோ? அடையார்காண்!

கருத்து : சிறுமையினை அறியார்; ஆதலின் பிரிதலையும் நினையார்' என்பதாம்.

சொற்பொருள் : நின்றசொல் - நிலைபெற்ற சொல்; மாறாத சொல்வாய்மை. 'நீடுதோறு' என்றது, உறவுக்காலத்தின் நெடுமையைக் குறித்தது. புரைமை - உயர்ச்சி. நீர் - நீர்வளம்.

விளக்கம் : 'நின்ற சொல்லர்' என்றதுடன், நீடுதோறு இனியர்' என்றும் சொன்னது, வாய்மை தவறாதவர் மட்டுமன்றி, ஆராப்பெருங் காதலன்பையும் உடையவர் காதலர் என்பதற்காம். தோழி அதனை உணர்தல் இயலாமையால், தலைவி அவளுக்கு உரைத்துக் காட்டுகின்றாள். தாமரைத் தாது தலைவிக்கும், சந்தனமரம் தலைவனுக்கும், தாமரைத் தாதினை ஊதிச்சாந்தில் இறாலை வைத்தவண்டு ஊழிற்குமாகப் பொருத்திக்காணுதற்கு உரியன. நல்லூழின் செயலாலேயே தான் தலைவனோடு கலந்து இன்புறுதற்கு உயர்வுபெற்று விளங்குதலான செவ்வி வாய்த்தது; அஃது என்றும் தன்னைக் கைவிடாது பேணி நிற்கும் என்பதுமாம். அவனது பெருங்காதலை நினைந்து உவகைகொண்டு, அவன் பிரியினும், அவனது பேரன்பின் வயத்தளாகிய தான், அவன் மீண்டு வரும் வரைக்கும் பொறுத்து ஆற்றியிருக்கும் கற்பினை உடையவள் என்பதனைத் தோழிக்குத் தலைவி இவ்வாறு நுட்பமாக உணர்த்துகின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/001&oldid=1731232" இலிருந்து மீள்விக்கப்பட்டது