13. அழாதிருப்பாயாக!

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : இயற்கைப் புணர்ச்சியின் பிற்றைஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி. தலைவி, மறைத்தற்குச் சொல்லியது.

[(து–வி.) தலைவியின் மேனியிடத்துத் தோன்றிய மாறுபாடுகளைக் கண்டு ஐயுற்ற தோழி, இயற்கைப் புணர்ச்சிக்குப் பிற்றை நாளிலே, தலைவியிடம் அதுபற்றிக் கேட்கின்றாள். அவள், தன் களவை மறைத்துக் கூறத், தோழியும் தான் அவளது ஒழுக்கத்தை அறிந்தமையினை மறைத்தவளாக, இப்படிக் குறிப்பாகக் கூறுகிறாள்.]

எழாஅ யாகலின் எழில்நலந் தொலைய
வழாஅ தீமோ நொதுமலர் தலையே
ஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த
பகழி யன்ன சேயரி மழைக்கண்
நல்ல பெருந்தோ ளோயே! கொல்லன் 5
எறிபொற் பிதிரின் சிறுபல் காய
வேங்கை வீயுகும் ஓங்குமலைக் கட்சி
மயிலறிபு அறியா மன்னோ;
பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே!

தினைப்புனத்தைக் காத்திருக்கும் குன்றவர்கள், புனத்தை மேய்ந்த விலங்கினைக் கொன்று வீழ்த்தியபின் பறித்துத் தம் கையிற்கொண்ட குருதிதோய்ந்த அம்பினைப்போல விளங்கும். செவ்வரி பரந்ததும் குளிர்ச்சி உடையதுமான கண்களையும், நன்றாகப் பெருத்த தோள்களையும் உடையவளே! கொல்லனது உலைக்கூடத்தே அடிக்கப்படும் இரும்பினின்றும் சிதறும் பொறியினைப் போலச், சிறுத்த பல காய்களையுடைய வேங்கையின் பூக்கள் உதிர்கின்ற, உயர்ந்த மலையிடத்துக் கூட்டிலிருக்கும் மயில்கள் அறிந்ததனை அறியாவண்ணம், பசிய புறத்தையுடைய கிளிகள் நெருங்கிய தினைக்கதிர்களைக் கவர்ந்துபோகின்றன. அதனைக் கண்டும், நீ அவற்றை ஓட்டுதற்கு எழுந்தாயில்லை. ஆகலின், நின் அழகிய நலமெல்லாம் கெட்டுப்போகுமாறு, அயலாரிருக்கும் இவ்விடத்தே, அழாதிருக்கும் அதனையேனும் இனிச் செய்வாயாக!

கருத்து : 'நின் களவுறவை யானும் அறிவேன்" என்பதாம்.

சொற்பொருள் : எழில் நலம் – எழிலாகிய நலமும் ஆம். நொதுமலர் – அயலார். மா – விலங்கு; தினைக் கதிரைக் கவருவதற்கு வரும் பன்றியும் யானையும் முதலாயின. பொன் – இரும்பு. பிதிர் – பொறி. கட்சி – கூடு; தங்குமிடம். பயிர் குரல் – நெருங்கிய தினைக்கதிர்கள்.

விளக்கம் : அழுதால் அயலார் களவுறவை அறியவும், அதனால் ஊரலர் மிகவும் நேருமாதலின், அழாஅல்' என்றனள். 'நொதுமலர்' என்றது. அயலிலாட்டியாரான பிறரை. 'மாவீழ்த்துப் பறித்த பகழி' குருதிக் கறையினாலே நிறம் பெற்றுத் தோன்றும்; அத் தன்மையாகச் செந்நிறம் பெற்றன கண்கள் என்றனள். 'அழா அதீமோ' என்றது, அழுதால் பிறர் அறிந்து இல்லத்தாரிடம் கூறுதலால், அவர் இனித் தினைப்புனம் செல்லவேண்டா என்றனராயின், நின் காதலனைச் சந்திப்பதும் இனி இயலாதுபோம் என்றதாம். மறைத்துக் கூறுதல், 'சுனையாடியதாலும் பொழிற்கண் விளையாட்டயர்தலாலும் கண்கள் சிவந்தன' என்பது போலக் கூறுதல். காவலர் மா வீழ்த்துப் பறித்த பகழிபோன்ற கண்' என்றது. 'கானவன் ஒருவனை நினக்கு ஆட்படுத்திக் கொண்டதாற் சிவந்த கண்' என்றதுமாம்.

இறைச்சி : வேங்கை மலர் உதிர, ஓங்கும் மலையிடத்துக் கூட்டிலிருக்கும் மயில், கிளிகள் தினைக் கதிர்களைக் கவர்ந்து செல்லுதலை அறியும்; அவை அறியா எனக் கிளிகள் தினைக் கதிர்களைக் கவர்ந்து செல்லும் என்றனள். அவ்வாறே, பரணிடத்திருக்கும் தான் அறியவில்லை எனக் கருதித் தலைவன் தலைவியைக் களவிற்கூடிச் சென்றனன் எனினும், தான் அதனை நன்கு அறிந்திருத்தலை உணர்த்துகின்றனள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/013&oldid=1731260" இலிருந்து மீள்விக்கப்பட்டது