25. பண்பற்ற செய்தி!

பாடியவர் : பேரிசாத்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தலைமகளைத் தோழி குறைநயப்புக் கூறியது.

[(து–வி.) தலைவன், தோழியின் உதவியைப் பெற்றுத் தலைவியைக் கூடுதற்கு முயல்கின்றான். அவனுக்கு உதவுவதற்கு விரும்பிய தோழி, தலைவியிடத்தே சென்று, தான் அவனை விரும்பினாற்போலப் படைத்துக் கூறுகின்றாள். தோழியின் பேச்சிலே பொதிந்திருந்த கருத்தை உணர்ந்த தலைவி, தானும் தலைவனை விரும்புகின்றவளாகின்றாள்.]

அவ்வளை வெரிநின் அரக்குஈர்த்தன்ன
செவ்வரி இதழ சேண்நாறு பிடவின்
நறுந்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப்
பொன்உரை கல்லின் நன்னிறம் பெறூஉம்
வளமலை நாடன் நெருநல் நம்மொடு 5
கிளைமலி சிறுதினைக் கிளிகடிந்து அசைஇச்
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது
அல்லல் அன்றது காதலம் தோழி!
தாதுண் வேட்கையின் போதுதெரிந்து ஊதா
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி 10
கண்டும், கழல்தொடி வலித்தவென்
பண்பில் செய்தி நினைப்பா கின்றே!

அன்பினை உடையாளான தோழியே! அழகான சங்கினது முதுகிலே செவ்வரக்கைத் தீற்றினாற்போலத் தோன்றும், சிவந்த வரிகளைப் பொருந்திய இதழ்களையுடைய பிடவமலர்களின் மணமானது. நெடுந்தொலைவுக்கும் கமழ்ந்துகொண்டிருக்கும். அம் மலர்களிற் புகுந்து, அவற்றின் நறிய தாதுக்களிலே அளைந்தாடிய வண்டானது, பசுமை நிறத்தைக் கொண்ட பொன்னின் மாற்றை உரைத்துக் கூறுதற்குரிய உரைகல்லினது நல்ல நிறத்தைப் பெற்றிருக்கும். அத்தகைய வளத்தைக் கொண்ட நல்ல நாட்டிற்கு உரியவன் ஒரு தலைவன். அவன், நேற்றைப் பொழுதிலே நம்மோடுங் கூடியிருந்து, கிளைத்தல் மிக்க சிறுதினைப்பயிரிடத்தே வந்து படியும் கிளிகளைக் கடிந்தவனாகத் தங்கியிருந்தான். தன் குறையைச் சொல்லுதற்கேற்ற இடவாய்ப்பினைப் பெறாதவனாகி, அவ்விடம்விட்டு அவன் அகன்றும் போயினான். அவன் அங்ஙனம் பெயர்ந்ததாகிய செயலானது நமக்குத் துன்பந்தருவதன்று. தேனையுண்ணுகின்ற வேட்கையினாலே மலரது செவ்வியைத் தெரிந்து சென்று ஊதாமல், எவ்விடத்தும் சென்று விழுகின்ற வண்டினைப் போன்றவன் அவன். அவனது கெடாத அந்தக் காட்சியைக்கண்டும், என் தொடிகள் தாமே கழன்றன. கழன்ற அத்தொடிகளை மீளவும் செறித்துக் கொண்ட எனது பண்பற்ற செய்தியானது, என்னை அகலாத ஒரு நினைப்பாகவே இருக்கின்றதே!

கருத்து : 'அவன் நின்னை நாடியவன்; அவனுக்கு நீயும் அருள்தலைச் செய்வாய்' என்பதாம்.

சொற்பொருள் : அவ்வளை – அழகிதான வளை. வெரிந் – முதுகுப்புறம் அசைஇ – தங்கி.

விளக்கம் : 'பிடவினது நறுந்தாது புக்காடிய தும்பி பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம் நாடன்' என்றது, 'நின்பாற் கலந்த உள்ளத்தனாகிய அவனிடத்தே. அந்தக் காமத்தாலே ஏற்பட்ட நலிவினை யானும் கண்டேன்' என்றதாம். 'தாதுண் வேட்கையின் போதுதெரிந்து ஊதா வண்டோரன்னன்' என்றது, 'தகுதிப் பாட்டின் மிக்கானாகிய அவன், அவனுக்கு ஏற்புடையள் ஆகாத என்னையும் நயக்கும் குறை பாட்டினனாயினன்' எனப் பழித்ததும் ஆம். 'அவன் கண்டார் காமுறும் பேரழகன்' என்பாள். அவனைக் கண்டதும், தன் தொடி கழன்றன என்றாள். அதனைத் தான் வலித்ததைக் கூறியது, அவனைத் தான் அடைய நினைத்ததாகிய பேதைமையைத் தடுத்துச் செய்த அறிவுச் செயலைக் கூறியதாகும். இதனால், அவன் தலைவிபால் நாட்டம் உடையவன் என்பதனையும், கண்டார் விரும்பும் கவினுடையவன் என்பதனையும், தலைவிக்கே தகுதியானவன் என்பதனையும் தோழி குறிப்பாகப் புலப்படுத்தினாள்; அவன் குறையை ஏற்றருளுமாறும் தலைவிக்குச் சொல்லுகின்றாள்' என்க.

மேற்கோள் : 'குறையநயப்பித்தல்' என்னும் துறைக்கே இச்செய்யுளை நச்சினார்க்கினியரும் மேற்கோள் காட்டினர். (தொல் பொருள். 114 உரை.)

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/025&oldid=1731350" இலிருந்து மீள்விக்கப்பட்டது