60. சாயும் நெய்தலும்!

பாடியவர் : தூங்கலோரியார்
திணை : மருதம்
துறை : சிறைப்புறமாக உழவற்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பறிவுறீஇயது.

[(து–வி.) தலைவன் சிறைப்புறமாக நிற்பதறிந்த தோழி, அவனுக்குத் தலைவியின் இற்செறிப்பினை உணர்த்தக் கருதுகின்றாள். உழவர்க்கு ஆணையிடுவது போல நுட்பமாக இப்படிச் சொல்லுகின்றாள்.]

மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின்
பெருநெற் பல்கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது, தண்புலர் விடியல்,
கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ்சோறு 5
கவர்படு கையை கழும மாந்தி,
நீர்உறு செறுவின் நாறுமுடி அழுத்த நின்
நடுநரொடு சேறி ஆயின், அவண
சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம்மில்
மாஇருங் கூந்தல் மடந்தை
ஆய்வளைக் கூட்டும் அணியுமார் அவையே. 10

மலையினைக் கண்டாற்போலத் தோன்றும் நிலையினைப் பொருந்திய, உயர்ச்சிகொண்ட பல நெற்கூடுகளை ஒருங்கே சேரக் கட்டி வைத்திருக்கின்ற தலைவியது வீட்டாரின் பொருட்டாக, எருமையை ஓட்டியபடி உழுதற்குச் செல்லுகின்ற உழவனே! இரவெல்லாம் உறக்கங் கொள்ளாயாய்க், குளிர்ச்சிகொண்ட இருள் நீங்கும் விடியற்பொழுதிலே, கருங்கண்களையுடைய வராஅலின் பெரிதான ஊன்துண்டுகளின் மிளிர்வையோடு கூடிய உணவுக்குரிய அரிசியாலே சமைத்த மிக்க சோற்றுத் திரளைகளை, விருப்பமிக்க கையை உடையையாய்த் திகட்டுமளவுக்கு வாங்கி உண்டதன் பின்னர், நீர்மிகுந்த வயற்புறங்களிலே நாற்றுமுடிகளை நடுதற் பொருட்டாக, நடுதற்கு உரியவரான நின் உழத்தியரோடுஞ் செல்வாயானால், நீ உழுதலைச் செய்யும் அவ் வயல்களிடத்தேயுள்ள கோரைகளையும் நெய்தற் பூக்களையும் களைந்து எறிந்துவிடாது பேணிக்கொணர்வாயாக. எம் இல்லிடத்தேயுள்ள மிக்க கரிய கூந்தலையுடையாளான தலைவிக்கு, அழகிய வளைகளாகவும், உடுத்தும் ஆடையாகவும் அணிந்து கொள்ளற்கு உரியன அவைதாம்!

கருத்து : 'தலைவி இற்செறிக்கப்பட்டாள்; விரைவிலே மணந்து கோடற்கு முயலுக' என்பதாம்.

சொற்பொருள் : நெற்கூட்டு – நெற்கூடுகளையுடைய. நிவப்பு – உயர்வு மிளிர்வை – ஒளி செய்து விளங்கும் தன்மை. புகர்வை அரிசி – உணவுக்கு உரித்தான அரிசி. கழும மாந்தல் - திகட்டுமளவுக்குத் தின்னல். நடுநர் – உழத்தியர். சாய் – கோரைப்புல்.

விளக்கம் : 'விடியலில் உழச்செல்லும் உழவனைக் காணவரும் தோழி, 'கண்படை பெறாது' என்றது, தலைவியும், தானும் இரவு முற்றவும் கண்படை பெறாதிருந்த வருத்தத்தின் மிகுதிப்பாட்டைக் கூறியதாம். 'கழும மாந்தி நடுநரோடு சேறியாயின்' என்றது. 'அம்மயக்கத்தாலும், நடுநரோடு பேசிக்களிக்கும் இன்ப மயக்கத்தாலும் பேணாது போகாதே, கருத்துடன் சாயும் நெய்தலும் பேணுக' என்றதாம். "எம்மில் மாயிருங் கூந்தல் மடந்தை" என்றதால், தலைவி இற்செறிக்கப்பட்டதனையும் உணர்த்தினள். 'உழுங்காலத்து அவற்றைப் பிடுங்கிப் பேணிவைத்திருந்து இல்லிற்குக் கொண்டுவர வேண்டும்' என்பது தோழியின் உரையாகும். கோரையை வளையாகக் கையிற்கூட்டுவதும், நெய்தலின் தழையைத் தழையுடையாகக் கொள்வதும் அந்நாள் மருதநில மகளிரது வழக்கமாகும்.

உள்ளுறை : உழத்தியர் ஆக்கிய வராற் கறியோடு சோற்றையுண்டு தொழிற்குச் செல்லும் உழவனைக் கூறியது. அவ்வாறே தலைவியும் தலைவனை மணந்து இல்லத்தலைவியாகத் திகழ்தலிலே நாட்டமிகுந்தனள் என்பதற்காம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/060&oldid=1731453" இலிருந்து மீள்விக்கப்பட்டது