72. நட்பு மறையுமோ?

பாடியவர் : இளம்போதியார்.
திணை : நெய்தல்
துறை : தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

[(து–வி.) தலைவன் சிறைப்புறமாக. அவனைத் தலைவியை வரைந்துகொள்ளத் தூண்டக் கருதினனாகிய தோழி, இவ்வாறு தலைவிக்கு உரைப்பாள் போல், அவனும் கேட்குமாறு கூறுகின்றாள்.]

'பேணுப பேணார் பெரியோர்' என்பது
நாணுத்தக் கன்றுஅது காணுங் காலை
உயிர் ஓரன்ன செயிர்தீர் நட்பின்
நினக்குயான் மறைத்தல் யாவது? மிகப்பெரிது
அழிதக் கன்றால் தானே கொண்கன் 5
யான் யாய் அஞ்சுவல்' எனினும், தான்எற்
பிரிதல் சூழான் மன்னே; இனியே
கானல் ஆயம் அறியினும், 'ஆனாது,
அவர்வந் தன்றுகொல்?' என்னும்; அதனால்
'புலர்வது கொல்அவன் நட்பு'எனா
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத் தானே! 10

தோழி! 'பேண வேண்டுவன எனப் பிறர் கருதும் பொருள்களைப் பெரியோர் விருப்பமுடன் பேணமாட்டார்கள்' என்பார்கள். அவரது அந்த நிலைதான் ஆராயுங்காலத்தே பெரிதும் வெட்கத்தைத் தருவதாகின்றது. இருவரும் ஓர் உயிரேயாய் அமைந்தாற்போலும் குற்றமற்ற செறிந்த நட்பினை உடையவளான நினக்கு, யான் ஒன்றை மறைத்தல் என்பதும் எத்துணைக் குற்றமாகும்? முன்காலத்தே, யான் "தாய் அறிதல் கூடுமென யான் அஞ்சுகின்றேன்' எனக் கூறினாலும், தான் என்னைப் பிரிந்திருத்தலைக் கருதானாய் உடனிருத்தலையே நாடியவனாக இருந்தனன். இதுகாலை அதுதான் கழிந்தது. கானலிடத்து விளையாட்டயர்கின்ற ஆய்மகளிர் அறிந்தாலும், இக்களவு மறைகடந்து வெளிப்பட அதனால் பழிச்சொற்களும் வந்தடையுமோ?' என்று கூறி அகன்று போகின்றான். அதனால், அவன் நட்புத்தானும் இல்லையாகிப் போகுமோ என்று கருதி, யானும் என் உள்ளத்தே அஞ்சா நிற்பேன். அந்த அச்சந்தானும் மிகப்பெரிதாக எனக்கு அழிவைத் தருகின்றதாயுள்ளதே?

கருத்து : 'அவனது நட்புச் செறிவினே தளர்ச்சியைக்கண்டேன்' என்பதாம்.

சொற்பொருள் : பெரியோர் – பெருந்தகுதி உடையோர்; என்றது, தலைவனைக் குறித்துக் கூறியதாம். செயிர் – குற்றம். சூழல் – கருதல். கானல் – நெய்தலங்கானல்.

விளக்கம் : இத்துறைக்கு இயையக் கொள்வதாயின், தோழி, தலைவியின் கருத்தைத் தன்னுடைய கருத்தாகக் கொண்டு, தலைவனுக்கு வரைதல் வேண்டுமென்பதை அறிவுறுத்தக் கருதினளாய்ச் சொன்னதாகக் கொள்க. 'உயிரோர் அன்ன செயிர்தீர் நட்பு' என்பது, நட்பினிற் சிறந்த நிலை: உடலால் இருவராயினும் உயிரால் ஒருவரேயாகிப் பிறரது இன்பதுன்பங்களைத் தமதாகவே கொள்ளும் கலப்பு இது. இதனால் 'மறைத்தல் யாவது?' என்கின்றாள், 'தாயறியின் ஏதமாம்' என்றபோதும் பிரியக்கருதாத பேரன்பினன், 'தோழியர் அறிவர்' எனக் கூறிப் பிரிந்துபோதலை, அவனது அன்பின் தளர்வாகக் கொண்டு கூறுகின்றாள். இந்த அச்சம் நீங்கவும், சூளுரைத்த சொற் பேணவும். அவன் தலைவியை முறையாக மணந்து கொள்ளவே விரைய மேற்கொள்ளுதற்கு உரியதென்பதாம்.

மேற்கோள் : 'தலைவி, தலைவனோடு தன் திறத்து ஒருவரும் ஒன்று உரையாதவழித் தனது ஆற்றாமையால், தன்னொடும் அவனோடும் பட்டன சில மாற்றம் தானே கூறுதலும் உள' என்னும் விதிக்கு மேற்கோளாக, இச் செய்யுளைத் தலைவி கூற்றாகக் காட்டுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர்- (தொல். பொருள். சூ. 111 உரை.)

இனி, 'வேற்று வரைவுவரின் அது மாற்றுதற்குக் கூறிய தலைவியின் கூற்றாக இச் செய்யுளைக் காட்டி, அச்சத்தின் அகறற்குச் செய்யுள்' என உரைப்பர் இளம்பூரணனார். (தொல்.பொருள். சூ. 109 உரை.).

இவையிரண்டும், இச் செய்யுளைத் தலைவி கூற்றாகக் கொள்ளவே சிறப்புடைத்தெனக் காட்டும். அவ்வாறு பொருத்திக் கண்டும் பொருளுணர்ந்து இன்புறுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/072&oldid=1731482" இலிருந்து மீள்விக்கப்பட்டது