88. குன்றம் அழும்!

பாடியவர்: நல்லந்துவனார்.
திணை : குறிஞ்சி.
துறை : சிறைப்புறமாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

[(து–வி.) வரைதற்கு முயலானாகிக் களவுறவினையே வேட்டுவரும் தலைமகன் குறியிடத்து ஒரு பக்கமாக வந்து நிற்பதறிந்த தோழி, அவன் மனத்தை வரைகலிற் செலுத்த நினைத்தாளாய்த் தலைவிக்கு உரைப்பாள்போன இப்படிக் கூறுகின்றாள்.]

யாம்செய் தொல்வினைக்கு எவன்பே துற்றனை?
வருந்தல்; வாழி! தோழி!– – யாம்சென்று
உரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக்
கடல்விளை, அமுதம் பெயற்குஏற் றாஅங்கு. 5
உருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்
தம்மோன் கொடுமை நம்வயின் எற்றி
நயம்பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது
கண்ணீர் அருவி யாக
அழுமே, தோழி! அவர் பழம்முதிர் குன்றே.

தோழி! யாம் செய்த பழிவினைப் பயன் இவ்வாறாயிருக்கவும், இதுகுறித்து நீ எதற்காகவோ மயங்குகின்றனை? வருத்தம் கொள்ளாதிருப்பாயாக! நெடிது வாழ்வாயாக! நம் துன்பத்தினை நாமே சென்று அவருக்கு எடுத்துக் கூறிவருவோம்; எழுவாயாக. பொருந்திய அலைகளை உடையதான கடலிடத்தே விளையும் அமுதமான உப்பானது, மழையிடத்துப் படின் உருகி ஒழிதலைப்போல, நீயும் இத்துன்பத்திற்கு ஆற்றாயாய் உருகியழிதலைக் கண்டு யான் அச்சமுறுகின்றேன். தன் தலைவன் நம்பாற் செய்த கொடுமையினை நினைந்ததாய், அவர்க்கு உரியதான பழங்கள் உதிர்ந்துகிடக்கின்ற வளத்தையுடைய குன்றமானது, நம்பாற் பெரிதும் அன்புடைமை கொண்டதாதலினாலே, நம் வருத்தத்தைப் பொறுக்கமாட்டாதாய்க், கண்ணீரை அருவியாகச் சொரிந்தபடியே அதோ அழுதபடியிருக்கின்றது. அதனையும், நீயே காண்பாயாக!

கருத்து : 'தலைவரது அன்பினைத் தவறாதே பெறுவோம்; அதனால் நீயும் ஆற்றியிருப்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : தொல்வினை – பழவினை: ஊழ்வினை. பேதுறல் – மயங்கியழிதல், புணர்திரை – பொருந்திய அலைகள். கடல்விளை அமுதம் – உப்பு. உருகி உகுதல் - கரைந்து அழிந்து போதல். தம்மோன் – தம்மை உடையானாகிய தலைவன். எற்றி – நினைந்து. நயம் – அன்பு. பழமுதிர் குன்று – பழம் உதிரும் குன்றம்: பழம் உண்பாரற்று மரங்களிடத்தேயே முதிர்ந்து கிடக்கின்ற வளமுடைய குன்றமும் ஆம்; ஆசிரியர் நல்லந்துவனாரின் பாடலாதலின், இச்சொற்கள் பழமுதிர் சோலைக் குன்றத்தைக் குறிப்பவும் ஆகலாம்.

விளக்கம் : 'கூட்டிய தொல்வினையானது விரைந்து வரைந்து கோடலைச் செய்யுமாறு தலைவனைத் தூண்டாதுபோயின். அதற்கு யாம் மயங்குவது எதற்காகவோ' என்பாள், 'யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?' என்கின்றாள். கூட்டிய அது மீளவும் மணவினையால் ஒன்றுபடுத்துதலையும் தவறாதே நிகழ்த்தும் என்பதாம். மழைவாய்ப்பட்ட உப்புக் குன்றம் கரைந்து ஒழிதலைப் போலக் காமநோயின் வாய்ப்பட்ட தலைவியின் உடலும் சோர்ந்து அழிகின்றது என்கின்றார். 'குன்றம் அருவியாக அழும்' என்றது, அதற்குரிய அன்பு தானும் அவர்பால் இல்லாதாயிற்றே என வருந்தியதாம். இவற்றைக் கேட்கும் தலைவன். விரைய மணந்து கொள்ளற்கான முயற்சிகளைக் கடிதாக மேற்கொள்வான் என்பதும் தெளிவாகும்.

உப்பு மழையிலே 'அழிதலைக் காமநோயால் நெஞ்சழியும் தலைவியரது நிலைக்குப் பிறரும் உவமிப்பர். 'உப்பியல் பாவை உறையுற்றதுபோல, உக்கு விடும் என் உயிர்' (கலி 138) எனவும், 'சுடும்புனல் நெருங்க உடைந்து நிலையாற்றா, உப்புச் சிறைபோல் உண்ணெகிழ்ந்துருகி (பெருங்.3.20)' எனவும், 'உப்பு ஒய் சகடம் பெரும்பெயல் தலைய வீழ்ந்தாங்கு' (குறுந் 165) எனவும் வருவன காண்க.

'கண்ணீர் அருவியாக, அழுமே தோழி, அவர் பழம் முதிர் குன்றே' என்பதனாற் குறித்த கார்காலத்தினது வரவினைக் காட்டி உரைப்பதும் ஆகும்.

மேற்கோள் : இது பிரிவிடைத் தோழி இயற்பழித்து வற்புறுத்தது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் – (தொல். பொருள்.சூ.114. உரை மேற்கோள்.)

பாட பேதங்கள் : உருகி அல்குதல் அஞ்சுவல்; நம்வயின் ஏற்றி; சுழலுமே தோழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/088&oldid=1731523" இலிருந்து மீள்விக்கப்பட்டது