108. யான்தான் நோவேன்!

பாடியவர் : .........
திணை: குறிஞ்சி.
துறை : வரையாது நெடுங்காலம் தந்து ஒழுகவாற்றாளாய தோழி, தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.

[(து–வி) களவின்பத்தை மட்டுமே விரும்பியவனாகக் காதலன் நெடுங்காலம் வந்து போகத், தலைவியை மண வாழ்விலே ஈடுபடச் செய்து மனையறத்திலே ஒன்றுபடுத்தக் கருதிய தோழி, அதனை அவனுக்கு அறிவுறுத்தக் கருதிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

மலையயற் கலித்த மையார் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணையக் கண்ட அம்குடிக் குறவர்

கணையர், கிணையர், கைபுனை கவணர்,
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட! 5
பழகிய பகையும் பிரிவுஇன் னாதே;
முகையேர் இலங்குஎயிற்று இன்னகை மடந்தை
சுடர்புரை திருநுதல் பசப்பத்
தொடர்புயாங்கு விட்டனை? நோகோ யானே!

அழகிய குடியிருப்புக்களிலே வாழ்வோரான குறவர்கள் மலைக்கு அயலிடத்தே தழைத்திருந்த கருதிறங்கொண்ட தினைப்புனத்திடத்தே, துணையினின்றும் பிரிந்த கொடிய யானையானது வந்தடையக் கண்டனர். கணைகளை உடையவரும், கிணைப்பறைகளை உடையவரும், கையிடத்துச் சேர்ந்த கவணிணை உடையவரும், பிறரையும் வருமாறு அழைக்கும் கூப்பீட்டினரும் ஆகக் குடிப்புறத்தே திரண்டு ஆரவாரித்தலைச் செய்யலாயினர். அத்தகைய நாட்டினனாகிய தலைவனே! தொடர்ந்து பழகிய பகையானாலும் அவரைப் பிரிவதென்பது துன்பந்தருவதாய் இருக்கும். இருப்பவும், முல்லை முகைகளைப்போன்று விளங்கு அழகிய பற்களைக் கொண்ட இனிதான மென்னகையினளான தலைவியது. ஒளிகொண்ட அழகிய நெற்றியானது பசலைகொள்ளுமாறு இவளுடைய தொடர்பினை நீதான் எவ்விடத்துக் கைவிட்டனையோ? அதனை எண்ணி நோகின்றாளும் யானே யாவேன்.

கருத்து : 'களவுக் காலத்து இடையீடுபட்டு வருகின்ற, வருகின்ற சிறுபிரிவுக்கே இவள் கலங்கிப் பசந்தாள்; இவளைப் பிரியாதிருக்கும் மணவுறவினைப் பூண்டு இவனைக் காப்பாற்றுக' என்பதாம்.

சொற்பொருள் : களித்தல் – கிளைத்துப் பெருகுதல். மை - எருமை. கடுங்கண்மை – கொடுமை. கணை – அம்பு. கிணை – கிணைப்பறை, விளி – கூப்பீட்டொலி, புறக்குடி – ஊர்ப்புறம். சுடர் – ஒளியெறியும் தன்மை, திரு நுதல் – அழகிய நெற்றி.

விளக்கம் : 'மலையயற் கலித்த மையார் ஏனல்' என்றது தலைவி பகற்குறி பெற்றுக் கூடியதான குறியிடத்தை நினைவுபடுத்திக் கூறியதாம். துணை யானையின் துணையாகிய பிடி; நிறையினின்றும் தனித்து வழிதப்பிய யானையாகக் கொள்ளின், 'துணை' பிற யானைகளையும் குறிப்பதாகலாம்.

யானை புனத்தை அடையக் காணும் குறவர் அதனை அழிக்கும் கருத்துடன் புறப்படுதலைக் கூறினாள், அத்தகைய நாடனாயிருந்தும் தலைவியின் நலனைத்தானே அழித்தற்குக் காரணமாயினதுடன். அதனை நீக்குதற்குத் துணியாமையும் எடுத்துக் காட்டுதற்கு. 'முகை' என்றது, முல்லைமுகையினை. 'சுடர்புரை திருநுதல்' பிறையொத்த அழகிய நுதலும் ஆம். 'யாங்கு விட்டனை? என்றது, விடாதேயிருக்கும் காலத்தும் நெற்றியிற் பசலை படர்ந்ததெனின் விடின் என்னாகுமோ என்று கவலையுற்றதைக் காட்டியதாம். 'பழகிய பகையும் பிரிவு இன்னாதே' என்பது, அங்ஙனமாயின் இயல்பாகப் பழகிய நட்பிடத்துப் பிரிவு எத்துணைக் கொடியதாகும் என்று கூறுவாளாகப் பழமொழியை நயம்படக் குறிப்பிடுகின்றனள்.

உள்ளுறை : துணையின் தீர்ந்த கருங்கண் யானையானது ஏனலை அணைந்தாற்போலத், தலைவனும் தன் சுற்றத்தினின்றும் நீங்கினனாகி வந்து தலைவியைத் தழுவினான் என்க. யானையை அழிக்கக் கருதிக் குறக்குடியினர் புறப்படுமாறு போலத், தலைவியின் நலனைக் களவாக கவர்ந்த தலைவனையும் அவர் அறியின் அழித்தற்கு முனைவர் என்பதுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/108&oldid=1731606" இலிருந்து மீள்விக்கப்பட்டது