நற்றிணை 1/111
111. கல்லென வருமே!
- பாடியவர் : .......
- திணை : நெய்தல்.
- துறை : விரிச்சி பெற்றுப் புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது.
அத்த இருப்பைப் பூவின் அன்ன
துய்த்தலை இறவொடு தொகையீன் பெறீஇயர்
வரிவலைப் பரதவர் கருவினைச் சிறாஅர்
மரன்மேற் கொண்டு மான்கணம் தகைமார்
வெந்திறல் இளையவர் வேட்டுஎழுந் தாங்கு
5
திமில்மேற் கொண்டு திரைச்சுரம் நீந்தி
வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டி
நிணம்பெய் தோணியர் இதமணல் இழிதரும்
பெருங்கழிப் பாக்கம் கல்லென
வருமே தோழி! கொண்கன் தேரே.
10
தோழி! பரதவர் வரிந்த வலையைக் கொண்டு மீன் வேட்டம் கொள்பவர். அப் பரதவரின் வலிமிகுந்த தொழிலாண்மையினைக் கொண்டிருக்கும் அவரது சிறுவர்கள், மான் கூட்டத்தை அகப்படுத்தக் கருதும் வேட்டுவரது வெவ்விய ஆற்றலையுடைய இளையர்கள். மரனிடத்தே தங்குதலை மேற்கொண்டாராய் வேட்டைக்கு எழுந்தாற்போல, மீன்பிடி படகின்மேல் ஏறிக்கொண்டாராய்க் கடற்கண் புகுவாராயினர். சுரத்திடத்துள்ள இருப்பைப் பூவினைப் போன்றதான துய்யுடைத் தலையினைக் கொண்ட இறால் மீனொடு, மற்றும் தொகுதியான மீன்களையும் பெற்றுவரக் கருதி, அவர்கள் எழுந்தனர். கடற்பரப்பாகிய சுரத்தினைச் கடந்துபோய், வாள்போன்ற வாயையுடைய சுறாமீன்களோடு மற்றும் கொழுமையான வலிய மீன்களையும் பற்றி வாரிக்கொண்டு வருவர். அவற்றின் நிணம் பெய்யப்பெற்ற தோணியராக அவர்கள் திரும்பிவரும் கடற்கரைப் பகுதியிலே, மணலைக் காற்றுச் சொரிந்தபடியிருக்கும் பெரிதான கழியிடத்துப் பாக்கமானது, கல்லென்னும் ஒலியோடு ஆரவாரிக்குமாறு, நம் தலைவனது தேரும் இனி விரைவில் வாரா நிற்கும்.
கருத்து : 'மணவினை விரைவிற் கைகூடுமாதலின் நீதான் அதுவரை பொறுத்து ஆற்றியிருப்பாயாக' என்பதாம்.
சொற்பொருள் : அத்தம் – சுரநெறி. துய்த்தலை – துய்யையுடைய மேற்பகுதி, தொகைமீன் – தொகுதி கொண்ட மீன்கள். கருவினை – வலியோடு தொழிலாற்றும் திறன். மரன் – மரம்: 'மரல்' எனவும் பாடம்; மரல் – மரற்களனி. நிணம் - ஊன். இகுமணல் – காற்றாற் சொரிந்து குவிக்கப் பெறும் மணல். திமில் – மீன்பிடி படகு. திரைச் சுரம் – அலையுடைய கடற்பரப்பாகிய சுரநெறி. கெண்டி நிரம்பப் பற்றிக்கொண்டு. நிணம் – ஊன்: திமிலிடத்துப் போடப்பெற்ற மீன்கள் உயிரற்றுப் போவதனால் 'நிணம்' எனக் குறித்தனர்.
இறைச்சிப் பொருள் : பரதவர் குடிச் சிறுவர் மீன்பிடி படகுகனிற் கடல்மேற் சென்று வேட்டமாடிக் கொணரும் மீன்நிணங்களை இகுமணற் பாங்கிலே குவித்தாற் போலத், தலைவரும் சுரநெறியினைக் கடந்துசென்று தாமீட்டிய பெரும்பொருளைத் தலைவியது தந்தை முன்பாகக் குவித்துத் தலைவியை வரைந்துகொள்வர் என்பதாம்.
விளக்கம் : வேட்டுவச் சிறுவர் மரங்களினடியில் மான்கட்காக வலைவிரித்து வைத்தாராய், மான்கள் வந்துவிழும் செவ்விநோக்கி மரங்களின்மேற் சென்றமர்ந்து காத்திருப்பர். இவ்வாறே படகுகளிற் சென்று வலைவிரித்துப் படும் மீன்தொகுதிகளை நோக்கிக் காத்திருப்பர் பரதவர் சிறுவர். இருசாராரும் குறித்த வேட்டம் வாய்த்ததும், இல்லத்தினை நாடித் திரும்புவர். இவ்வாறே வரைபொருளினை நாடிப் பிரிந்த தலைவனும் அதனைத் தேடிக்கொண்டதும் திரும்பிவிடுவான் எனபதாம். 'தேர், பாக்கம் கல்லென வரும்' என்றது. அதனால் வரும் அலருரைகளை அவன் கருதமாட்டான் எனவுணர்த்தி, அவனது வரவு வரைவினைவேட்டு வருதலாக அமையும் என்று காட்டுவதாம். வாள்வாய்ச் சுறா – வான்போல் எதிர்த்தாரை வெட்டி அழிக்கவல்ல உருப்பினை வாயிடத்துப் பெற்றிருக்கின்ற சுறாமீன். வேட்டமாடுவோர் வேட்டைப் பொருட்டு நேரும் உயிர் இழப்பினைக் கருதாராய்த் தாம் அதனாற் பெறுகின்ற பயனையே கருதுமாறுபோலத், தலைவரும் தாம் தலைவியை அடைந்து பெறுகின்ற பயனையே கருதினராய்ப் பொருளீட்டி விரையைத் திரும்புவர் என்றதுமாம்.