113. எய்த வந்தன!

பாடியவர் : இளங்கீரனார்.
திணை : பாலை.
துறை : இடைச்சுரத்து ஆற்றானாகிய தலைவன் சொல்லியது.

[(து–வி) பொருளார்வத்தின் மிசையினாலே, தலைவியைப் பிரிந்து வேற்று நாட்டினை நோக்கிச் செல்வானாகிய தலைவனின் உள்ளம், சுரத்திடையே தலைவியை நாடிச்செல்லத் தொடங்குகின்றது. அவ்வேளை, அவன் தனக்குள் சொல்லிக் கொள்வதாக அமையும் செய்யுள் இது.]

உழைஅணந்து உண்ட இறைவாங்கு உயர்சினைப்
புல்லரை இரத்திப் பொதிப்புறப் பசுங்காய்
கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம்

பெருங்காடு இறந்தும் எய்தவந் தனவால்
'அருஞ்செயல் பொருட்பிணி முன்னி, யாமே 5
சேறும், மடந்தை!' என்றலின், தான்றன்
நெய்தல் உண்கண் பைதல் கூரப்
பின்னிருங் கூந்தலின் மறையினள், பெரிதழிந்து,
உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பின்
இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும் 10
ஆம்பலம் குழவின் ஏங்கி.
கலங்கஞர் உறுவோள் புலம்புகொள் நோக்கே!

'மடந்தையே! செயற்கரிய செயலை என்பாற் செய்கின்ற பொருளார்வமாகிய பணியினை எண்ணினமாய், யாம் அதனை நாடிச் செல்வதற்கும் கருதுகின்றோம்' என்றேம். என்றதும், தன்னுடைய நெய்தல்மலர் மையுண்டாற்போலும் இருட்சிகொண்ட கண்கள் வருத்தத்தை அடைய, பின்னப்பட்டுத் தாழ்ந்திருக்கும் கரிய கூந்தலுக்குள்ளாகத் தன் முகத்தை அவள் மறைத்துக் கொண்டனள். பெரிதும் நெஞ்சழிந்த நிலையினளும் ஆயினள். உதியனானவன் சினந்து சென்ற அடர்ந்த பேரொலி கொண்ட போர்க்களத்தினது தலைப்பகுதியிடத்தே, இம்மென்னும் ஒலியோடே பெருங்களத்துக் குழலூதவோர் ஊதுகின்ற அழகான ஆம்பற்குழவினது இசையினைப் போல ஏங்குவாளும் ஆயினள். கலங்கித் துன்பத்தை அடைவோனாய அவளது தனிமை வருத்தத்தை மேற்கொண்டதான பார்வைகள்தாம் மறக்கற்பாலன அன்று!

மான், தன் தலையினை மேலெடுத்து வளைத்து உண்ணுதலினாலே, ஒரு பக்கமாக வளைந்து கிடக்கும் உயர்ந்த கிளைகளையும் புல்லிய அடியையுமுடைய இலந்தையினது. பொதிந்த புறத்தையுடைய பசிய காய்கள், கற்கள் பொருந்திய சிறுவழியிடத்தே, அவ்வழி நிரம்புமாறு உதிர்ந்துகிடக்கும் பெருங்காட்டினைக் கடந்து வந்தேம் வந்தும். அப் பார்வை எல்லாம் எம்பாலடையுமாறு வந்து சேர்ந்தனவே!

கருத்து : 'பிரிவினைக் கேட்டபோதே கலங்கிய அவளது நிலைதான், பிரிந்தபின் என்னாயிற்றோ?' என வருந்துவதாம்.

சொற்பொருள் : உழை – மான். அணந்து – தலையை மேலாக உயர்த்து நின்று; அண்ணாந்து. இறை வாங்கு – பக்கத்தே சிறிது வளைத்து. பொருட் பிணி – பொருளாசையாகிய நோய். உதியன் – சேரன்; உதியன் சேரலும் ஆம். ஆம்பல் அம் குழல் – ஆம்பல் தண்டினாலே அமைந்த அழகான குழல்; 'ஆம்பல்' மூங்கிற்கும் பெயர்: அதனால் மூங்கிலினாலாய ஊதுகொம்பு எனக் கொள்ளுதலும் பொருந்தும். இரத்தி – இலந்தை. ஞாட்பு – போர்க்களம்.

விளக்கம் : 'வழியனுப்புங் காலத்துக் கண்கலங்குதல் நன்னிமித்த மாகாமை உணர்ந்தாளாயினும், பிரிவினைப் பொறுத்தற்கும் ஆற்றாளான அவள், தன் கலங்கிய கண்கள் எதிர்தோன்றாவாறு கூந்தலிடைத் தன் முகத்தை மறைத்துக் கொண்டனள் என்கின்றனன். அவளது கற்பும் காமமும் இணைந்து ஒன்றையொன்று மிகுதற்கு முயலும் நிலையினை இது காட்டுவதாகும். 'ஆம்பலங் குழலின் ஏங்கி' என்றது. ஏக்கத்தால் எழும் அழுகைக் குரலினது தன்மையே அத் துணைச் சுவையுடைத்தாயின், அவள் குரலினிமை எத்துணை இனிதாயிருப்பதெனப் பழகிய அதன் செவ்வியை நினைந்து கூறுவதாம். 'நோக்கு எய்த வந்தன' என்றது, 'அவள்தான் வரவியலாளாய்க் கிடந்து துயருறுகின்றனள்' என அவளுக்கு இரங்கியதாம்.

இறைச்சி : 'மானினத்தால் உண்ணப்பட்டு நலிந்த போதும், தன்பால் நிறைந்த கனிகளை வழிமல்க உதிர்த்திருக்கும் இலந்தை மரத்தைப்போலப், பசலையால் உண்ணப்பட்டுத் தளர்வுற்றபோதும், அவளது பெண்மை ஒளியுடைத்தாய் நின்று சிறக்கின்றது' என்பதாம்.

மேற்கோள் : 'பிரிந்த தலைவன் இடைச்சுரத்துத் தலைவியின் உருவு வெளிப்பட்டுழி மீண்டுவருதலை ஆராய்ந்த கூறுபாட்டின்கண், தனக்குள் சொல்லிக் கொள்வதற்கு, மேற்கோளாக இச்செய்யுளை நச்சினார்க்கினியர் காட்டுவர். (தொல். சூ 140. உரை).

பிற பாடங்கள் : விரை வாங்கு உயர்சினை – விரைவாக வளைந்து மேலுயர்ந்து போகும் கிளை. இரத்திப் பசுங்காய் பொற்ப.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/113&oldid=1731655" இலிருந்து மீள்விக்கப்பட்டது