நற்றிணை 1/118
118. பூவிற்பாள் நோகச் செய்வாள்!
- பாடியவர் : பாலை பாடிய பெருங் கடுங்கோ.
- திணை : பாலை.
- துறை : பருவங் கண்டு ஆற்றாளாய்த் தலைவி சொல்லியது.
[(து–வி.) வருவதாகக் குறித்துச் சென்ற பருவத்தின் வரவினைக் கண்டு, வாராத அவனை நினைந்து ஏங்கி துயறுருகின்றாள் தலைவி. அவள், தன்னைத் துயராற்ற முயலும் தோழியிடத்தே, தன் நிலைமையை விளக்கிக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]
அடைகரை மாஅத்து அலங்குசினை பொலியத்
தளிர்கவின் எய்திய தண்நறும் பொதும்பில்
சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில்
புகன்றுஎதிர் ஆலும் பூமலி காலையும்
'அகன்றோர் மன்றநம் மறந்திசி னோர்' என
5
இணர்உறுபு, உடைவதன் தலையும் புணர்விலை
ஓவ மாக்கள் ஒள்ளரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி
வாலிதழ் அலரி வண்டுபட ஏந்திப்
புதுமலர் தெருவுதொரு நுவலும்
10
நொதும லாட்டிக்கு நோம்என் நெஞ்சே!
தோழீ! யாற்றை அடுத்த கரையினிடத்தே நிற்கும் மாமரங்களினது நெருங்கியிருக்கும் கிளைகளெல்லாம் அழகு கொள்ளும்படியாகத் தளிர்கள் தோன்றியுள்ளன. அதனால் அழகமைந்ததாகிக் குளிர்ந்த நறிய சோலைகளும் விளங்குகின்றன. அவற்றிடத்தே, சிவந்த கண்களை உடையதான கரிய குயிற்பேடும் தன் சேவலொடு பொருந்தியிருந்ததாகக் கூவியவண்ணம் எதிரிட்டு ஆரவாரிக்கின்றது. இவ் வண்ணமாகப் பூக்கள் மலிந்திருக்கின்ற இளவேனிற் காலத்தினும் நம்மைப் பிரிந்து போயிருப்பாரான காதலர் நம்மை மறந்திருக்கின்றனர். இங்ஙனம் எண்ணி யானும் நொந்திருப்பேன். அதன்மேலும், பூங்கொத்தினை எற்றவாகக் கட்டு அவிழ்வதன் முன்பும் தொழில் வல்லாரான ஓவியமாக்கள் ஒள்ளிய அரக்கினைத் தோய்த்து எடுத்த துகிலிகையின் தலையினைப் போன்றலான பஞ்சினையுடைய பாதிரியினது வெள்ளிய இதழ்களையுடைய மலர்கள் அழகுறத் தோன்றும். வண்டுகள் மொய்க்கும்படியாக அவற்றை வட்டியில் ஏந்திக்கொண்டாளாக, அப் புதிய மலர்களைத் தெருத்தோறும் கூவி விற்றபடி வருவாள் பூவிலை மடந்தை. ஏதிலாட்டியாகிய அவளைக் காணும்போது, என் நெஞ்சம் மிகுதியும் நோவா நிற்கின்றது. யான் இனியும் எவ்வாறு ஆற்றியிருப்பேன்?
கருத்து : 'பிரிவைப் பொறுத்து ஆற்றியிருக்க இனியும் என்னால் அறவே இயலாது' என்பதாம்.
சொற்பொருள் : அடைகரை – யாற்றை அடுத்திருக்கும் கரை. மாஅத்து – மாவினிடத்து. அலங்கு சினை – நெருங்கிய கிளைகள்: அசையும் கிளைகளும் ஆம். பொதும்பு – பூம் பொழில் புகற்சி – விருப்பம். ஓவ மாக்கள் – ஓவியர்கள். துகிலிகை – தூரிகை. தூய் – பஞ்சு.
விளக்கம் : மாப் பூத்துக் கவினுடன் தோன்றுவது இளவேனிற்காலத்து; ஆதலின், தலைவன் அதுகாலை உடனிருக்கும் பேற்றினைப் பெறாத தலைவி பெரிதும் நோகின்றனள். 'செங்கண் கருங்குயிலானது, சேவலொடு கூடியிருந்த போதும், மேலும் கூட்டத்தை விரும்பிக் கூவியழைக்கும் காலம்' என்கின்றது, பிரிந்திருக்கும் தன் மனத்தது வேதனை பெருகும் நிலையினைக் காட்டுதற்காம். அஃதன்றியும், பாதிரிப்பூவினை விற்கும் பூவிலை மடந்தையது குரலைக் கேட்குந்தோறும், அதனைச் சூட்டிக் களிப்பதற்கு இயலாமையினை நினைந்து மனம் மேலும் துன்புறும் என்கின்றனள். இதனால் தலைவியது ஆற்றாமை மிகுதியும் உணரப்படும்.