129. வாழ்தும் என்ப!

பாடியவர் : ஔவையார்.
திணை : குறிஞ்சி.
துறை : பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம்புக்கது.

[(து–வி.) தலைவனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகள்பாற் சென்று, ஏதிலார் உரைப்பத் தான் கேட்டது போல இப்படிச் சொல்லி, அவள் தனக்கு எதிராக முகத்தைத் திருப்புமாறு முயல்கின்றனள். முகத்தை எதிராகத் திருப்பியதும், அவனது பிரிவுக்கு உடன்படுதலே மனைவியது கடனென உணர்த்தி இசைவிப்பது அவள் கருத்தாதலும் அறியப்படும்.]

பெருநகை கேளாய், தோழி! காதலர்
ஒருநாள் கழியினும் உயிர்வேறு படூஉம்
பொம்மல் ஓதி! நம்இவண் ஒழியச்
செல்ப என்ப தாமே; சென்று
தம்வினை முற்றி வரூஉம்வரை நம்மனை 5
வாழ்தும் என்ப நாமே; அதன்தலை
கேழ்கிளர் உத்தி அரவுத்தலை பனிப்பப்
படுமழை உருமின் உரற்றுகுரல்
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே

தோழி! காதலர் ஒருநாட் பொழுதின் அளவுமட்டுமே நின்னைப் பிரிந்து சென்றாராயினும், நின்னுயிரது தன்மையிலே அந்தப் பிரிவையும் தாங்காதே வேறுபாடுற்று நலிகின்ற, பொலிவுற்ற கூந்தலை உடையவளே! யாவரும் பெரிதும் நகை கொள்ளத்தக்கதான செய்தி ஒன்றனையும் கேட்பாயாக! 'நம்மை இவ்விடத்தே தனித்திருக்குமாறு விட்டுப்பிரிந்து அவர்தாம் வேற்றுநாட்டிற்குச் செல்வார்' என்பார்கள். அதற்கும் மேலாக, 'நிறம் விளங்கிய படத்தினையுடைய பாம்பினது தலை நடுங்கும்படியாகப் பெய்கின்ற மழை இடையிட்ட இடியினது முழங்கும் முழக்கத்தை, இரவின் நடுயாமத்தும் கேட்டபடியே அங்ஙனம் அவர் சென்று தம்முடைய செயலை முடித்து வருகின்றதன் வரைக்கும், நாம்தம் மனையிடத்திருந்து அவர் பிரிவைப் பொறுத்தேமாய் வாழ்ந்திருப்போம்' என்றும் கூறுவார்கள். இஃதென்னவோ?

கருத்து : 'தலைவர் பொருள் செய்தற்கு நெடுநாட் பிரிந்து போயினராயின், அப் பிரிவைப் பொறுத்திருத்தல் நம் கடன்' என்பதாம்.

சொற்பொருள் : நகை – நகைத்தற்கு உரிய செய்தி. பொம்மல் ஓதி – பொலிவான கூந்தல்; பொலிவு – நீண்டடர்ந்து கருமையுடன் திகழ்தல். கேழ் – நிறம். உத்தி – பாம்புப் படம். தமியம் – தமியராயிருத்தற்கு நேர்ந்த யாம்.

விளக்கம் : 'பிரிந்தால் நாம் அவர் வரும்வரை உயிரைப் பொறுத்து ஆற்றியிருப்போம்' எனக் கருதினராயின் அவர் நினைப்பு நகைத்தற்கிடமாகும் என்கின்றனள். கூடிமுயங்கியிருப்பார்க்கும் அச்சம் விளைக்கும் மழைக்காலத்து இடியோசையைத் தனித்திருந்து கேட்பின் உயிர்துறப்போம் அல்லேமோ என்கின்றனள். தம் நிலைமை இஃதாயினும் அவர் பிரிவர் என்றும், தாம் வாழ்வோம் என்றும் கூறும் ஊரவரது பேச்சு நகைத்தற்கு உரியதாகும் என்றும் கூறுகின்றாள். இதனால் தெளிவுற்றுத் திரும்பும தலைவியை மெல்ல மெல்ல ஆடவர்க்குரிய கடமைப்பாட்டினை எடுத்துக் கூறுதல் மூலம், பிரிவைப் பொறுத்தற்குரிய நிலைக்குப் பக்குவப் படுத்துதலே தோழியின் கருத்தாகும்.

ஆடவர் வினைவயிற் பிரியும் காலத்து மனைவியரும் உடன்போகும் வழக்கம் அக்காலத்தே நிலவவில்லை: அவர் மனைக்கண் இருந்து ஆற்றியிருப்பதே கடமையாகக் கருதி வாழ்ந்தனர்; இதனை 'நம் மனை வாழ்தும்' என்ற சொற்கள் நமக்கு உணர்த்துகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/129&oldid=1731704" இலிருந்து மீள்விக்கப்பட்டது