153. பாழ்காத்த தனிமகன்!

பாடியவர் : தனிமகனார்.
திணை : பாலை
துறை : பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது.

[(து–வி.) தலைவனின் பிரிவினாலே மெலிவுற்ற தலைவி, தன் துயரமிகுதியை இப்படிக் கூறுகின்றாள்.]

குணகடல் முகந்து குடக்குஏர்பு இருளி
மண்திணி ஞாலம் விளங்கக் கம்மியர்
செம்புசொரி பானையின் மின்னிஎவ் வாயும்
தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்றுஅற் றாங்கு, 5

நெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்டுஒழிந்து
உண்டல் அளித்துஎன் உடம்பே விறல்போர்
வெஞ்சின வேந்தன் பகைஅலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேர்ஊர்ப்
பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே.

கீழைக் கடலினிடத்தே நீரை முகந்துகொண்டு, மேற்றிசைக் கண்ணே சென்று இருண்டு, அணுச்செறிந்த இந்த உலகமானது இருட்சியினின்றும் விடுபட்டு விளக்கம் அடையுமாறு, கம்மியர்கள் செப்புப்பானையைக் கடையுங் காலத்தே எழுகின்ற பொறிகளைப்போல மின்னலிட்டு, எங்கும் தன் தொழிலாகிய பெய்தலை மேற்கொள்ளும் இனிய இடிக்குரலைக் கொண்ட மேகம்; அம் மேகமானது, தன் தொழிலை முடித்த பின்னர்த் தென்புலப் பக்கமாகச் சென்று ஒழிவெய்தும். அதுபோல, என் நெஞ்சமும் 'அவர்பாற் சென்றதனாலே, இவ்விடத்தே என் உடம்பும் உண்ணுதலாலே காக்கப்படும் ஒரு தன்மைத்தாய் ஆகிவிட்டது. வெற்றிப்போர் செய்தலிலே வல்லவனான வெஞ்சினத்தையுடைய வேந்தனது பகைப்படை வந்து வருத்துதலினாலே கலங்கி, ஊரிடத்தே வாழ்வோரான பலரும் வெளியேறிப் போகிய பேரூரின் பாழிடத்தைக், காவல்காத்து நின்றிருக்கும் ஓர் தனியான வீரனைப் போன்று. உயிர்ப்பு ஒடுங்கிப் பாழ்பட்ட என் உடலையும், உணவானது இதுகாலையில் அழிவடையாதே காத்து நிற்கின்றதே!

கருத்து : 'என் உடலும் இனி அழிந்துபோகும்' என்பதாம்.

சொற்பொருள் : குணகடல் – கீழைக்கடல், இருளி – இருண்டு: கார்மேகமாகி. இன்குரல் – இனிதான குரல்; குரல் இனிதானது அது தலைவனின் வருகைக்கு உரித்தான கார்காலத்தை அறிவித்தலால் பாழ் – பாழிடம்; வாழ்வோர் போகியதால் பாழ்பட்ட ஊர் பாழிடம் என்று சுட்டப் பெற்றது.

விளக்கம் : முகந்து, இருளி மின்னித் தன் தொழிலாற்றிய மேகமானது, இறுதியிலே தென்புல மருங்கிற்சென்று அற்றுப் போயினாற்போலக், கண்டு காதலித்துக் கூடியின்புற்ற உடலும், நெஞ்சத்தைப் போகவிட்டுத் தான் இல்லாது போகும் நிலையதாயிற்று என்க.

பேரூர்ப் பெருமையெல்லாம் வாழ்வோர் போகியதும் குன்றிப்போக, அதுதான் பாழிடமாயினாற்போல, தலைவியும் தன் எழிலனைத்தையும் இழந்தாளாகச் சோர்ந்தனள் எனவும் கருதுக. தனிமகன் – ஒருவனேயாக நின்ற வீரன்; ஒப்பற்ற வீரமகனும் ஆம். 'தனக்குரிய நெஞ்சமும் தன் துன்பத்திற்கு உரிய துணையாகாதபோது வேறு எவர்தான் உதவித் தன்னைக் காக்க வியலும்' என்று கருதிச் சோர்ந்ததும் ஆம்.

ஒப்பு : 'மழை தென்புலம் படர்தல்' வாடைக் காலத்தாகும். இதனை, வடபுல வாடைக்கு அழிமழை தென்புலம் படரும் தண்பனி நாள்' என வரும் குறுந்தொகை (317) யானும்; எழிலி தெற்கேர்பு இரங்கும் அற்சிரக் காலையும் எனவும். 'எழிலி தென்புல மருங்கிற் சென்றற்றாங்கு' எனவும் வரும் நற்றிணைச் செய்யுட்களாலும் அறிக— (நற்,5;153). 'வாடை வைகறை, விசும்புரிவதுபோல் வியலிடத்தொழுக, மங்குன் மாமழை தென்புலம் படரும்' எனவரும் அகநானூற்றுச் (24) செய்யுளும் இதனை வலியுறுத்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/153&oldid=1731760" இலிருந்து மீள்விக்கப்பட்டது