நற்றிணை 1/162
162. வல்லை அல்லை!
- பாடியவர் : ......
- திணை : பாலை.
- துறை : உடன் போதுவலென்ற தலைவிக்குத் தலைவன் சொற்றது.
[(து–வி.) தலைவனுடன் தானும் உடன் வருவதாகத் தலைவி கூறுகின்றாள். அவளுக்கு வழியின் கடுமையைக் கூறியவனாகத் தலைவன் சமாதானம் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]
'மனையுறை புறவின் செங்காற் பேடைக்
காமர் துணையொடு சேவல் சேரப்
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்
தனியே இருத்தல் ஆற்றேன்' என்றுநின்
பனிவார் உண்கண் பைதல கலுழ
5
'நும்மொடு வருவல்' என்றி; எம்மோடு
பெரும்பெயர்த் தந்தை நீடுபுகழ் நெடுநகர்
யாயொடு நனிமிக மடவை! முனாஅது
வேனில் இற்றித் தோயா நெடுவீழ்
வழிநார் ஊசலின் கோடை தூக்குதொறும்
10
துஞ்சுபிடி வருடும் அத்தம்
வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே?
பெரும் புகழையுடைய தந்தையது நெடிய புகழினைக் கொண்டதாக விளங்கும் நெடிய மாளிகையிடத்தே, நின்னைப் பெற்ற தாயினோடுஞ் செல்வமாக வாழ்கலின், மிக்க மடமையினை உடையாளாகத் திகழ்பவளே! 'மனைக் கண்ணே தங்கியிருக்கும் புறவினது சிவந்த கால்களையுடைய பேடையானது, தான் விரும்பும் அழகிய தன் துணையான சேவலொடும் சேர்ந்திருப்பக் கண்டு, வருத்தமிகுமாறு எழுகின்ற புல்லிதாம் நன்மையுடைய மாலைக் காலத்திலே, தமியளாய் இருத்தலை யான் ஆற்றேன்' என்று, யான் புறப்படுவதற்கு முன்பாகவே சொல்லுகின்றனை. நின் நீர்சோரும் மையுண்ட கண்கள் துன்புற்றவாய்க் கலங்காநிற்ப, நும்மோடு யானும் வருவேன் எனவும் கூறுகின்றனை. வேனிற்காலத்தே, இற்றியினது, நிலத்தில் தோயாவாய்த் தொங்குகின்ற நெடிய விழுதுகள் கோடைக் காற்று அசைத்து ஆட்டுப் போதெல்லாம் நாரிடத்தே கட்டியிடப்பெற்ற ஊசலைப்போல் ஆடியவாய்த் தரையிலே தூங்கியபடி இருக்கும் பிடியானையை வருடியபடி இருக்கும் பாலை வழியிலே என்னுடன் வருவதற்கு, நீதான் வல்லமையுடையை யாதல் பொருந்துவ தாகுமோ?
கருத்து : 'நீதான் பாலையைக் கடந்து என்னோடுந் கூடி வருதற்கு 'ஆற்றாய்' என்பதாம்.
சொற்பொருள் : காமர் துணை – விருப்புறும் அழகினைக் கொண்ட துணை, புலம்பின்று – வருத்தங்கொண்டு. பனி நீர்த் துளிகள். பைதல் கலுழ – வருத்தமுற்றுக் கலங்க. மடவை – மடப்பத்தை உடையாய்; இளமை உடையாய் கோடை – மேல்காற்று. தூக்கல் – எடுத்து அசைத்தல்.
விளக்கம் : மாலையிற் புறவின் பேடை தன் சேவலுடன் கூடியிருத்தலைக் கண்டதும், தன்னுடன் தலைவன் இல்லாத துயராலே தலைவி நலிவுற்று வருந்தினாள் முன்னாள் மாலையில் நிகழ்ந்த இதனைக் கூறிப் பிற்றைநாளின் பகற்போதிலே வந்து கூடிய தலைவனைத் தன்னையும் உடன் அழைத்துப் போகுமாறு தலைவி வேண்டுகின்றனள். 'பெரும் பெயர்த் தந்தையது நீடுபுகழ் நெடுநகரிடத்தே யாயொடு வாழ்வை' யாதலின் நீதான் கோடையிற் பாலைவழியைக் கடத்தற்கு வல்லையல்லை என்பதாம். வீட்டைவிட்டு அகன்றறியாத நின்னாற் பாலை வழியின் கொடுமையை
அறிய வியலாது. பொறுக்கவும் இயலாது என்பதும் ஆம்.இறைச்சி : 'கோடை தூக்குதொறும் இற்றியின் விழுது மரத்தடியிலே தூங்கும் பிடியினை வருடிவிடுதலைப் போன்று பிரிவுத் துயராலே தவைவி நலியுந்தொறும் அதனைத் தோழி ஆற்றுவித்துத் துயரைத் தெளிவிப்பாள்' என்பதாம்.