நற்றிணை 1/172
172. நகை நாணுதும்!
- பாடியவர் : .........
- திணை : நெய்தல்.
- துறை : (1) பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. (2) குறிபெயர்த்தீடும் ஆம்.
[(து–வி) (1) பகற்குறிக்கண் வந்த தலைமகனை, அக் குறியிடத்துத் தாம் வருதற்கு நாணுவேம் எனக் கூறுதலின் மூலம், தலைவியை வரைந்து கொள்ளுதற்கு முயலுமாறு தூண்டுவாளாகத் தோழி இவ்வாறு கூறுகின்றனள். (2) 'இவ்விடம் எமக்கு ஒத்ததன்று; வேறிடம் ஒன்று குறிக்க' எனச் சொல்வதன்மூலம் வரைவுகடாதலும் ஆகும்.]
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
'நெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்த்தது
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
5
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர்இசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்க! நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே.
10
புதியராய் வந்த பாணர்களது மெல்லிசை முழக்கைப்போல, வலம்புரிச்சங்கினது வெள்ளிய கோடானது ஒலித்துக் கொண்டிருக்கின்ற, நீர் விளங்கும் கடற்றுறை பொருந்திய நாட்டின் தலைவனே!
விளையாட்டயரும் ஆயமகளிரோடு வெண்மணலிடத்தே புன்னைக் காய்களை அழுத்தியபடியாக விளையாடியிருந்தோம். அவற்றுள் ஒன்றை எடுக்க மறந்தும் போனோம். அங்ஙனம் யாம் அழுத்திய புன்னைக்காய் முளைவிட்டுத் தோன்றியது. அதனை நோக்கி மகிழ்வுற்றேம். நெய்பெய்து கலந்த இனிதான பாலினைப் பெய்து அதனை இனிதாக வளர்க்கவும் செய்தோம். அதனைக் கண்டனள் எம் அன்னை, 'நீர் நெய் பெய்த பாலினைப்பெய்து வளர்த்தது இதுவாதலின், நும்மைக் காட்டினும் சிறப்பானது: நுமக்குத் தங்கை போல்வது' என்று கூறினள். ஆதலினாலே, இப் புன்னையின் நிழற்கீழாக நும்மோடும் நகைத்து விளையாடி இன்புறுதற்கு யாமும் நாணமடைகின்றேம். அம்மையோ! நீதான் இவட்கு அருள் செய்வையானால். தங்குவதற்குத் தகுதியான நிழல்மரங்கள் இவ்விடத்துப் பிறவும் பலவாக உள்ளன. காண்பாயாக!
கருத்து : 'இவளை மணந்து கூடுதலே இனி நின்னாலே மேற்கொள்ளத் தக்கது' என்பதாம்.
விளக்கம் : 'காமம் கைமிகினும் கன்னியர் மாட்டு அவர் தமக்கு இயல்பான நாணுடைமை நீங்குவதன்று; அவர்தம் உறவுடையார் அருகிருக்கத் தம் காதலரோடு சிரித்து மகிழ்தற்கும் நாணுவர்' என்னும் சிறந்த பண்பினை இச் செய்யுள் காட்டுகின்றது. இதனாற் பகற்குறிப்புணர்ச்சிக்கு அஞ்சியமையும், அலரெழுதலை நினைந்து நாணுற்றமையும் குறிப்பாகப் புலப்படுத்தி வரைவு வேட்டனள் ஆயிற்று. தாம் வளர்க்கும் மரங்களையும் செடிகளையும் கிளி முதலியவைகளையும் உடன்பிறந்தாரைப் போலக் கருதிப் பாராட்டுகின்ற பழந்தமிழ்ப் பெண்மைப் பாங்கும் இதனானே அறியப்படும்.
மேற்கொள் : ஐவகையான உள்ளுறை உவமங்களைப் பற்றிக் கூறும் தொல்காப்பியப் பொருளியலுரைச் சூத்திரத்தின் உரையுள் (சூ. 238) இச் செய்யுளை உடனுறை உவமத்திற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரண அடிகள் காட்டுகின்றனர். 'இதனுள் புன்னைக்கு நாணுதும்' எனவே அவ்வழித் தான் வளர்த்த புன்னையென்றும், 'பல்காலும் அன்னை வருவள்' என்று உடனுறை கூறியும் விலக்கியவாறு எனவும் கூறுவர்.
களவியலுள், 'நாணுமிக வரினும் தோழிக்குக் கூற்று நிகழும்' என்பதற்கு இச்செய்யுளைக் காட்டி, 'இதனுள் அம்ம நாணுதும்' எனப் புதிய வந்ததோர் நாணுமிகுதி தோன்றி மறுத்து உரைத்தலின் தன்வயின் உரிமையும், அவன்வயிற் பரத்தமையும் கூறினாள் எனவுரைப்பர் நச்சினார்க்கினியர். உடனுறை உவமத்திற்கும் இச்செய்யுளைக் காட்டி, 'இதனுள் புன்னையை அன்னை நுவ்வையாகும் என்றதனால் இவளெதிர் நும்மை நகையாடுதல் அஞ்சும் நகையாடிப் பகற்குறி எதிரே கொள்ளாமைக் குறிப்பினான் மறைத்துக் கூறி மறுத்தவாறு காண்க' எனவும் உரைப்பர்.
இச் செய்யுளுள், 'நும்மினும் சிறந்தது நுவ்வையாகுமென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே' என்பதனை எடுத்துக்காட்டிப், 'புன்னை மரத்தினை 'நுவ்வை' என்றல் மரபன்மையின் வழக்கினுள் மாற்றுதற்கு உரியதாம்' எனக் கூறுவர் பேராசிரியர்.
பிறபாடங்கள் : மணல் அழுவத்து,; பெய்தினிது வளர்ப்பு; புன்னையது நலனே.