174. அன்பற்றவனின் அணைப்பு!

பாடியவர் : ........
திணை : பாலை.
துறை : வினைமுற்றி வந்து எய்திய காலத்து, ஆற்றாளாய் தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது.
[(து–வி.) வினையை மேற்கொண்டு பிரிந்து சென்றவனாகிய தலைவன், அதனை முடித்த வெற்றியோடும் வீடு திரும்பித் தன்னோடும் கூடியிருக்கின்ற செவ்வியைப் பெற்ற பின்னும், தலைவியினது ஆற்றாமை தீராததனைக் கண்டாள் தோழி. அங்ஙனம் இருத்தலின் பொருந்தாப் பேதைமையைப் பற்றி அவள் தலைவிக்குப் பலவாறாகக் கூற, அவற்றைக் கேட்ட தலைவி, தன் மனத்தே மறைத்திருந்த உண்மையான கவலையது காரணத்தை அவளுக்குக் கூறுகின்றாள்.]

'கற்றை ஈந்தின் முற்றுக்குலை அன்ன
ஆள்இல் அத்தத் தாள்அம் போந்தைக்
கோளுடை நெடுஞ்சினை ஆண்குரல் விளிப்பின்
புலிஎதிர் வழங்கும் வளிவழங்கு ஆர் இடைச்
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி 5
பிரியாது ஒருவழி உறையினும், பெரிது அழிந்து
உயங்கினை மடந்தை!' என்றி தோழி!
அற்றும் ஆகும் அஃது அறியா தோர்க்கே
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மடுத்தனன் 10
புல்லுமற்று எவனோ அன்பு இலங் கடையே?

தோழி! மக்களின் போக்குவரவே இல்லாத போயின சுரநெறி; அதனிடத்தே. ஈந்தினது காய் முற்றிய குலைகளைப் போலக் கற்றையான குலைகளுடன் விளங்கும் தாளிப்பனை மரம் ஒன்று; பசிமிக்கதாய்க் களிறு ஒன்று அத் தாளிப்பனையின் மடல்களை இழுத்துத் தின்னத் தொடங்கியது. அவ்வேளையிலே அதற்குத் தன் பிடியின் நினைவு தோன்ற அதனை அழைத்துப் பிளிறத் தொடங்கியது; ஆனால், அதற்கு எதிர்க்குரலாகப் பிடியின் குரல் கேட்கவில்லை; மாறாக, அதற்குப் பகையான புவியின் முழக்கமே கேட்டது. கோடைக்காற்று வழங்கும் அத்தகைய கடத்தற்கு அரிதான காட்டுவழியே சென்று பொருள் தேடியவராக நம் காதலரும் வந்தனர். 'மடந்தையே! இனிதாக இருவிரும் தழுவிக் கொண்டு ஒருவரையொருவர் பிரியாத ஒருவழிப்பட்டீராய்த் தங்கியிருக்கும் இந்நிலையிலும், நீதான் பெரிதும் நலனழிந்து வருந்தினையே? இதுதான் முறையோ?' என்று கேட்கின்றனை. உண்மையாதென உணராத நின்போன்றோர்க்கு என் நிலை அத் தன்மைத்தாகவேதான் தோன்றும். தம்மைக்கூடும் ஆடவரை அவர் தரும் பொருளுக்காகவன்றி அவரைத் தம் உளத்தால் விரும்பி ஏற்கும் மரபினை இல்லாதவர்கள் பரத்தையர்கள். இருந்தும், பரத்தை ஒருத்திபால் விருப்புற்று, வளமான தன் மார்பிடத்தே அவளை அணைத்துக் கொண்ட குறிகளுடன் தலைவனும் வருகின்றனன் நம்மிடத்தே. அன்பில்லாத அவனிடத்தே சேர்ந்து, அவனைத் தழுவிக்கொள்வதனாலே நம் துன்பந்தான் மறையுமோ? அதுதான் என்ன பயனை உடைத்தோ? நீயே கூறுக.

கருத்து : 'பிரிந்தவன் மீண்டு வந்தும் என்னைக் கருதானாய்த் தன் காதற்பரத்தையைத் தழுவுவதிலேயே விருப்புற்றுத் திரிகின்றனன்' என்பதாம்.

சொற்பொருள் : கற்றை - அடுக்கடுக்கான செறிவு. தாளம் போந்தை – தாளிப்பனை. கோள் – காய்க் குலைகள். சினை – மடல். உறையினும் – தங்கியிருப்பினும். உயங்கினை – வாட்டமுற்று வருந்தினை. அற்றும் – அத்தன்மைத்தும், வீழாக் கொள்கை – விருப்பமுறாத கோட்பாடு. புல்லு – அணைப்பு.

விளக்கம் : ஈந்தைப்போன்று கற்றைக் குலைகளை உடைத்தாயினும், தாளிப்பனை ஈந்தினுங் காட்டில் தாழ்ச்சியுடையது ஆகும்; இவ்வாறே தலைவியைப் போலப் பரத்தையும் ஒரு பெண்ணாயினும், பண்பாற் குறைந்தவள் என்று கூறுகின்றாள். 'ஆண்' என்றது களிற்றினை. 'பறவை' எனக் கொள்ளின் 'புலியெதிர் வழங்கும்' என்னும் செய்தியாற் பொருள் சிறப்பதில்லை. மல்லல் – வளம்; மல்லல் மார்பு – நறுஞ்சாந்தின் வளமை திகழும் பரந்தமார்பு. அச்சாந்து பரத்தையைத் தழுவியதனாற் கலைந்திருத்தலைச் கண்டு தலைவி ஊடி நலிந்தாள் என்று கொள்க.

இறைச்சி : (1) ஈந்தின் கற்றையான நெற்றுக் குலை போன்றது தாளிப் பனையின் நெற்றுக் குலையும் என்றது, பரத்தையும் தன்னைப் போன்ற பெண்மகள் தானேயன்றி வேறு சிறப்புடையாள் ஆவளோ என்றதாம். வீழாக் கொள்கையாட்டியான அவளினும் அன்புற்ற தான் சிறந்தவள் என்பதும் ஆம். அதனை மறந்தான் அவன் என்பதும் கூறினாள்.

(2) களிறு பிடியை அழைக்கப் புலியானது எதிர்க் குரலெடுத்து வந்தாற் போன்று,தான் தலைவனின் வரவை ஆர்வத்துடன் எதிர் நோக்கியிருக்க, அவன் வந்ததும், அவனுக்கு நன்மை கருதாதாளான பரத்தை முழக்கோடு எதிர்வந்து அவனைத் தன் கையகப்படுத்தினள் என்பதுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/174&oldid=1731814" இலிருந்து மீள்விக்கப்பட்டது