நற்றிணை 1/186
186. அவர் சென்ற வழி!
- பாடியவர் : ........
- திணை : பாலை.
- துறை : பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது.
[(து–வி.) தலைவனின் பிரிவினாலே தலைவி நலிவாளெனத் தோழி நினைத்துத் தானும் சோர்வடைகின்றனள். அவளுக்குத் தலைவன் மீண்டும் வருவதற்கான காலத்தினது எல்லைவரைக்கும் தான் பிரிவைப் பொறுத்து ஆற்றியிருப்பல் என்பதுபடத் தலைவி இவ்வாறு தேறுதல் கூறுகின்றனள்.]
கல்லூற்று ஈண்டல கயன்அற வாங்கி
இரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர்கொண்டு
பெருங்கை யானை பிடியெதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம்கூர் கடத்திடை
வேனில்ஓதி நிறம்பெயர் முதுபோத்துப்
5
பாண்யாழ் கடைய வாங்கிப் பாங்கர்
நெடுநிலை யாஅம் ஏறும் தொழில்
பிறர்க்கென முயலும் பேரருள் செஞ்சமொடு
காமர் பொருட்பிணிப் போகிய
நாம்வெங் காதலர் சென்ற ஆறே!
10
தோழி! கற்பாறையிடத்தே அமைந்துள்ள ஊற்றிலே சேர்ந்திருந்த நீரினைப், பெரிய சருச்சரையையுடைய நெடிதான தன் துதிக்கையினை நீட்டிக், களிறானது அவ்விடத்து நீர் முற்றவும் இல்லாது ஒழியுமாறு மொண்டு கொண்டது. பெருத்த துதிக்கையினையுடைய அக் களிறானது, அங்ஙனம் மொண்டுகொண்ட பின்னர்த் தான் அதனைப் பருகாதாய்த்தன் பிடிக்குத் தருதற்குக் கருதியபடி, அதன் எதிராக ஓடிக்கொண்டிருப்பதுமாயிற்று வெம்மைகொண்ட காட்டிடத்துள்ள வறன்மிகுந்த கற்சுரத்தினது தன்மை அத்தகையதாகும். அத்தகைய காட்டு வழியினிலே,
தன்னுடைய குடும்பத்தினது நல்லாழ்வுக்கு வேண்டுமளவுக்குத் தன்னிடத்தே பொருள் வளமை இருந்தபோதினும், தன்னை நாடிவரும் இரவலரான பிறருக்கு உதவுதற்குப் பொருள் வேண்டுமே எனக் கருதிச்சென்று. அப்பொருளைத் தேடிவருவதற்கான முயற்சியைச் செய்யத் துணிந்த பேரருள் கொண்ட நெஞ்சினனாகத் தலைவனும் ஆயினன். அத்தகைய நெஞ்சத்தோடே விருப்பந்தருகின்ற பொருளாசையும் அவனுள்ளத்தைப் பிணித்தலினாலே, நாம் விரும்புங் காதன்மையினை உடையவனாகிய தலைவனும் நம்மைப் பிரிந்தானாகிப் பொருள்மேற் சென்றனன்.வேனிலிடையே அகப்பட்டுக் கொண்டு நிறமாறிய ஓந்திப் போத்தானது. அவ்வழியே செல்லும் பாணர்கள் தம் யாழினை மீட்டி இசைப்பக்கேட்டுத் தன் துயரை மறந்ததாய் அருகிலிருக்கும் நெடிய நிலையைக் கொண்ட யாமரத்தின் மேலாக எறுந் தொழிலைச் செய்தபடி இருக்கும். அத்தகைய காட்டினூடாகச் செல்லும் அவனை நினைந்தால், யானும் எவ்வாறு வருந்தாதிருப்பேன்?
கருத்து : 'அவனுக்கு வழியிடை ஏதும் ஏதம் நேரக் கூடுமோ என நினைந்தே பெரிதும் கவலையுற்று வருந்துவேன்' என்பதாம்.
சொற்பொருள் : கல் ஊற்று – கற்பாறையினிடையே தோண்டப்பெற்ற ஊற்று. கயன் – ஊற்றுநிலை. பிணர் – சருச்சரை; செதிள் செதிளாகத் தோன்றும் அடுக்குதலையுடைய அமைப்பு. நொண்டு – மொண்டு. கடைய – செலுத்த. காமர் – விருப்பம். வெங்காதலர் – விரும்பும் காதலர்.
இறைச்சிப் பொருள் : மிகுகின்ற நீர் வேட்கையினாலே உண்டாகும் தன் வருத்தத்தைப் பாராட்டாது, தன் பிடியது வருத்தத்தை முற்படப் போக்கக் கருதினதாய், நீரோடு எதிராகச் செல்லும் களிற்றைப்போன்று, தலைவனும் பொருள் கிடைத்ததும் தலைவியது துயரை முதற்கண் தீர்க்கக் கருதினனாய் விரைய மீள்வன்: அதனால், அவன் வருங்காலத்தளவும் தானும் ஆற்றியிருப்பல் என்பதாம்.
விளக்கம் : 'கல்லூற்று' என்றது, சுனைகளும் நீரற்றவாய் வறண்டதனைக் குறிப்பால் உணர்த்தும்; 'தம் வழிநடை வருத்தத்தை மாற்றக் கருதினராகப் பாணர் யாழிசையை எழுப்பியபடியே செல்ல, அவ் இசையொலி ஓந்தி முதுபோத்தினது துயரைத் தணித்து, அதனை யாமரத்து மேலாக ஏறச் செய்யும்' என்றது. அவ்வாறே தலைவன் ஈட்டிவரும் பெரும் பொருளும் ஏதிலரான இரவலர்கட்குப் பயன்படும் என்பதாம். பொருளார்வம் பிணிபோல்வது எனினும், அது நற்பயனைத் தருதலினாலே 'காமர் பொருட் பிணியாக' உரைக்கப்படுவதாயிற்று.